Saturday, May 12, 2012

நைட்ரஜனின் பயன்கள் (தொடர்ச்சி) நைட்ரஜன் னின் மற்றொரு முக்கியச் சேர்மம் நைட்ரிக் அமிலம். அமோனியம் நைட்ரேட் போன்ற உரங்கள் ,வெடி மருந்துகள் நைலான் மற்றும் பாலியுரித்தேன்(Polyurethane) போன்ற நெகிழ்மங்களின் உற்பத்தி முறையில் இது மூலப் பொருளாக உள்ளது. நைட்ரிக் அமிலம் கிளிசராலுடன் வினை புரியும் போது அது நைட்ரோ கிளிசரின் என்ற வலிமைமிக்க வெடி மருந்தை உற்பத்தி செய்கிறது.மிகச் சிறிய அசைவு கூட இதை வெடிக்கச் செய்துவிடும்.அப்போது மிகுந்த அளவு வெப்பம் ,நைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வளிமங்கள் வெளிப்படுகின்றன.வளிமங்களின் வெப்பஞ் சார்ந்த விரை வேகப் பெருக்கமே வெடியாகிறது . நைட்ரோ கிளிசரினின் ஒரு துணைப் பொருள் டைனமைட்டாகும்.1867 ல் ஆல்பர்ட் நோபெல்(Alfred Nobel)என்பார் இதைக் கண்டுபிடித்தார். நைட்ரோ கிளிசரினைக் களிமண்ணுடன் கலக்க அது அதிர்வுகளினால் வெடிப்பதில்லை. என்ற உண்மையை இவர் கண்டறிந்தார்.இதை எடுத்துச் சென்று தேவையான இடங்களில் வெடிக்கச் செய்ய முடிந்ததால் அக் கண்டுபிடிப்பைக் கொண்டு பெரும் பொருள் சம்பாதித்தார்.எனினும் பிற்பாடு மனித குலத்திற்குச் செய்த தவறுகளுக்குப் பிராயச் சித்தமாக தாம் ஈட்டிய பொருள் அனைத்தையும் நோபெல் பரிசாக,மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல கண்டுபிடிப்புகளைச் செய்த விஞ்ஞானிகளுக்கு அளித்தார்.
சோடியம் அசைடு(NaN3)என்ற சேர்மம் இன்றைக்கு வளிமப் பொதியுறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு வெடி பொருள் .மோதலின் போது அல்லது எரிக்கும் போது இது விரைந்து சிதைவுற்று மிகுந்த அளவு நைட்ரஜனை வெளிப்படுத்துகிறது. இது பொதியுறையை உப்பச் செய்து மோதலினால் ஏற்படும் விபத்துக்களின் தீவிரத்தை மட்டுப்படுத்துகிறது.இது கடலில் பயணிப்போருக்கு விபத்துக்களின் போது பாதுகாப்பு உறையாகப் பயன்தருகிறது. 1999 ல் கார்ல் ஒ கிறிஸ்டி (Karl-o-Christie) மற்றும் வில்லியம் டபில்யூ வில்சன் (William W Wilson) என்ற வேதியியலார் நைட்ரஜனின் ஒரு புதிய சேர்மத்தைக் கண்டறிந்தனர்.இதில் 5 நைட்ரஜன் அணுக்கள் 'V' என்ற வடிவில் ஒன்றோடொன்று பிணைந்துள்ளன. நைட்ரஜன்-13 உமிழும் பாசிட்ரான்(Positron) உடல் உள்ளுறுப்புகளின் நிழல் படம் காட்டியில்(Positron emission tomography) பயன்படுகிறது.இதன் அரை வாழ்வு 9.97 நிமிடங்கள் என்பதால் நோயாளிகளுக்கு கதிரியக்கத்தால் பெரும் தீங்கு விளைவதில்லை. விரைவிலேயே சிதைந்து அழிந்து விடுகின்றது.சிரிப்பு வளிமம் எனப்படும் நைட்ரஸ் ஆக்சைடு(N2O)மயக்க மருந்தாக அறுவைச் சிகிச்சையின் போது பயன்படுகிறது.
நைட்ரஜன் மாசுகள் நைட்ரிக் ஆக்சைடு(NO),நைட்ரஜன் பெராக்சைடு(NO2)போன்றவை தானியங்கு வண்டிகள் உமிழும் புகையாலும்,நைட்ரஸ் ஆக்சைடு (N2O) நைட்ரேட் உரங்களின் பயன்பாட்டினாலும் வளிமண்டலத்தில் மாசுகளாகச் சேருகின்றன.மின் உற்பத்தி நிலையங்களும் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்து வளிமண்டலத்தில் கலக்கின்றன. இவற்றால் வளிமண்டலத்தில் அடர்த்தியான மூடுபனி ஏற்படுகிறது.வளிமண்டலத்தின் உயரடுக்குகளுக்கு ஊடுபரவி அங்குள்ள ஓசோனைத் தாக்குவதில் NO முக்கியப் பங்கு வகிக்கின்றது.இதனால் தானியக்க உந்து வண்டிகளில் வினையூக்கிப் பரிமாற்றி (Catalytic converter) பொருத்தி மாசுகளைத் தீமையற்றதாக மாற்றிக்கொள்கிறார்கள் .

1 comment:

  1. super; appu goood luck; once upon time iam lived muthpattinam karaikudi ; i am male 44y; keepon touch; 9789920589

    ReplyDelete