Saturday, May 19, 2012

Vethith Thanimangal- Chemistry

வேதித் தனிமங்கள்.-ஆக்சிஜனின் பண்புகள் ஆக்சிஜன் நிறம் மணம் சுவையற்ற ஒரு வளிமம் .நீர்ம நிலையில் நீல நிறத்தைப் பெறுகிறது .உறைந்து திண்மமாகச் சுருங்கும் போது வெளிர் நீல நிறத்தைப் பெறுகிறது. இது காற்றை விடச் சற்று கனமானது. நீரில் ஓரளவு கரைகிறது . நீரில் கரைந்த ஆக்சிஜன் நீர் வாழ் உயிரினங்களுக்குச் சுவாசித்தலுக்கு அனுகூலமாக இருக்கிறது வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன் நிலத்தில் வாழும் விலங்கினங்களுக்கும் மனிதர்களுக்கும் சுவாசித்தலுக்கு அவசியமானதாய் இருக்கிறது.உடலுக்குள் சத்துப் பொருட்களை எரித்து ஆற்றலைப் பெறுவதற்கும்,உயிர் வேதியல் சார்ந்த பல வினைகளை ஏற்படுத்துவதற்கும் இந்த ஆக்சிஜன் தேவை . ஹிமோகுளோபின்(Haemoglobin)என்ற பெரிய புரோட்டீன்(Protein) மூலக்கூறுகள் ஆக்சிஜனை நுரையீரலிலிருந்து உயிர்ச் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது ஒரு ஹிமோகுளோபினில் 574 அமினோ அமிலங்கள்(amino acids) இணைந்துள்ளன .ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் போது ஹிமோகுளோபின் சென்னிறமாகவும்.ஆக்சிஜனை திசுக்களுக்குக் கொடுத்த பின் ஆக்சிஜன் இல்லா ஹிமோகுளோபின் நீல நிறமாகவும் இருக்கும். பொதுவாக இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் வட்டத் தட்டு வடிவில் இருக்கும் சிலருக்கு ஹிமோகுளோபினில் உள்ள அமினோ அமிலங்கள் குறைபாடுடன் இருக்கும். இது சிவப்பணு மூலக்கூறின் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி பிறை வடிவத் தோற்றத்தைத் தரும்.இந்த உருமாறிய சிவப்பணுக்கள் ஆக்சிஜன் பரிமாற்றத்தில் தீங்களிக்கவல்ல பாதிப்பை உண்டாக்கும். இதையே பிறைவடிவச் செல் இரத்தச் சோகை (Sickle cell anemia) என்பர். 'O' என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஆக்சிஜனின் அணு எண் 8 , அணு எடை 15.9994. இதன் அடர்த்தி 1.33 கிகி /கமீ.இதன் உறை நிலையும் கொதி நிலையும் முறையே 54.75 ,90.18 K ஆகும்.வேதியியலில் ஆக்சிஜன் ஒரு வினைதிறமிக்க தனிமமாகும்.மந்த வளிமம் தவிர்த்த பிற உலோகங்கள் ,அலோகங்களுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இணைகிறது. ஆக்சிஜனுடன் கூடுவதையே எரிதல் என்கிறோம் .தங்கமும் ,பிளாட்டினமும் ஆக்சிஜனில் எரிவதில்லை. என்றாலும் அவற்றின் ஆக்சைடுகள் நேரடியில்லாத வழியில் தோன்றுகின்றன. தாவரங்கள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருட்களை ஒளிச் சேர்க்கை(Photo synthesis) மூலம் உற்பத்தி செய்து கொள்கின்றன. வளிமண்டலத்திலுள்ள கார்பன் டை ஆக்சைடை தாவரத்தின் இலைகள் உறிஞ்ச ,நிலத்தடி நீரை வேர்கள் உறிஞ்ச ,யாண்டும் சேர்ந்து ஸ்டார்ச்சு(Starch) எனும் சக்கரைப் பொருளாக மாறுகிறது. இதற்குத் தேவையான ஆற்றலை தாவரங்கள் பச்சையம்(Chlorophyl) என்ற நிறமிகளால்(Pigments) ஒளிச் சேர்க்கையின் போது 400 -700 நானோ மீட்டர் நெடுக்கையில் சூரிய ஆற்றலை உட்கவர்ந்து பெறுகிறது. ஒளிச் சேர்க்கையின் போது வெளிப்படும் ஆக்சிஜன் வளிமண்டலத்தில் சேருகிறது. எனவே விலங்கினங்களின் சுவாசித்தலுக்குத் தேவையான ஆக்சிஜன் தடிஎன்றிக் கிடைக்க இது வழி செய்கிறது. இதனால் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் மட்டுமின்றி கார்பன் டை ஆக்சைடும் ஒரு சம நிலையில் இருக்கிறது.
ஓசோன்(OZONE)
மூன்று ஆக்சிஜன் அணுக்களால் ஆன மூலக்கூறு ஓசோன் எனப்படும். இது நீர் மூலக்கூறு போல நேரியலற்றதாக (non -linear ) இருக்கிறது. இள நீல நிறமுடைய நச்சு வளிமமான இது மூக்கைத் துளைக்கிற கார நெடியுடையது .ஆக்சிஜன் வழியாக மின்னிறக்கம் செய்யும் போது இது உண்டாகிறது. அதனால் இது நெடுஞ் சாலைகளில் உள்ள உயர் மின் கம்பங்கள் ,இருப்புப் பாதை நிலையங்களில் உள்ள உயர் மின்னழுத்த மோட்டார்களுக்கு அருகாமையில் உருவாகும் வாய்ப்பைப் பெற்றுள்ளது .வளி மண்டலத்தில் மின்னல் என்பது மின்னிறக்கமே. மின்னல் ஏற்படும்போது வளிமண்டலத்தில் ஓசோன் உற்பத்தி செய்யப்படுகிறது . ஓசோன் மிகவும் வினைதிறமிக்க ஒரு வேதிச் சேர்மம் .இரப்பர்,நூல் இழைகள்,போன்றவற்றை எளிதாகச் சிதைக்கின்றன ஓசோன் செறிவு மிக்க காற்றைச் சுவாசித்தால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. வளிமண்டலத்தின் அடிப்பகுதியில் ஓசோனை உற்பத்தி செய்யும் மூலங்கள் நைட்ரஜன் டை ஆக்சைடின் ஒளி வேதியியல் சிதைவாகும். .நைட்ரஜன் டை ஆக்சைடு தானியங்கு வண்டிகள் உமிழும் கழிவுகளிலிருந்து பெறப்படுகிறது. இதை தீங்கிழைக்கும் ஓசோன் என்பர். ஆனால் வளிமண்டலத்தின் உயரடுக்குகளில் 15 -50 கிமீ உயரங்களில் ஓசோன் செரிவுற்றுள்ளது .இந்த ஓசோன் படலம் உலகில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் போலச் செயல்படுகிறது. சூரிய ஒளியோடு சேர்ந்து வரும் தீங்கிழைக்க வல்ல புற ஊதாக் கதிர்களை இந்த ஓசோன் படலம் உட்கவர்ந்து கொள்வதால் அவை பூமியின் நிலப்பரப்பை எட்டுவதில்லை. . . .

No comments:

Post a Comment