Monday, May 28, 2012

Vinveliyil Ulaa- Space Science

கானிஸ் மைனர்
ஒரு சிறிய நாய் உருவகமாகக் கற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 2௦ விண்மீன்களே அடங்கிய ஒரு சிறிய வட்டாரம் .இதிலுள்ள மிகப் பிரகாச மிக்க விண்மீன் புரோசியான் என அழைக்கப்படும் ஆல்பா கானிஸ் மைனோரிஸ் என்ற விண்மீனாகும். இது விண்ணில் தெரிவான வற்றுள் 8 வது பிரகாசமான விண்மீனாகும்.11.4 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் ௦.4. புரோசியான் என்றால் நாய்க்கு முன்னால் என்று அர்த்தம். இதற்குக் காரணம் நாய்க்குள் அடங்கிய பிற விண்மீன்கள் தெரிவதற்கு முன்னர் விண்ணில் இது தெரிவதாகும்.
கானிஸ் மைனர் வட்டாரத்திலுள்ள புரோசியான் மஞ்சள் நிறங் கலந்த வெண்ணிற விண்மீன் எனினும் விண்ணில் தெரியும் பிரகாசமான விண்மீன்களுள் முதலாவதான சீரியஸ் என்ற விண்மீனை அளவாலும்,பிரகாசத்தாலும், புற வெப்ப நிலையாலும், சற்று குறைவானது. இருப்பினும் இவ்விரு விண்மீன்களுக்கிடையே ஒரு சில ஒற்றுமைகள் காணப்படுகின்றன.இவையிரண்டும் சிறிய வட்டாரத்திற்கு முதன்மை விண்மீன்களாக உள்ளன.இரட்டை விண்மீன்கள் என்பதால் மட்டுமின்றி, துணை விண்மீன் ஒரு குறு வெண் விண்மீனாக இருப்பதும் ஒரு ஒற்றுமையாகும்.இத் துணை விண்மீன்களை சீரியஸ் B,புரோசியான் B என அழைக்கின்றார்கள்.புரோசியான் B முதன்மை விண்மீனைவிட 10000 மடங்கு மங்கலானது.இதன் சுற்றுக் காலம் 41 ஆண்டுகளாகும்.
சீரியஸ் மற்றும் புரோசியான் விண்மீன் களுக்கிடையே காணப்படும் மற்றொரு ஒற்றுமை அவற்றை இனமறிந்த வழிமுறையும் ஏறக்குறைய ஒன்று போல இருப்பது. இவைகளுக்குரிய துணை விண்மீன்கள் முதலில் கண்டுபிடிக்கப் படாவிட்டாலும் புள்ளி விவரங்களைக் கொண்டு கற்பிக்கப் பட்டன.பல ஆண்டுகளுக்குப் பிறகே இந்த அனுமானங்கள் உண்மையென நிறுவப்பட்டன. பெசல் என்ற வானவியலார் புரோசியானின் தனித்த தன்னியக்கத்தில் சீரியஸில் காணப்படுவதைப் போன்ற அலை போன்ற விலக்கங்களைக் கண்டறிந்தார்.கண்ணுக்குத் புலப்பட்டுத் தெரியாத ஒரு சிறிய விண்மீனால் புரோசியானின் இயக்கம் சீர்குலைக்கப் படுகிறது என்று பெசல் தெரிவித்தார். ஏறக்குறைய 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி நாட்டு வானவியலாரால் புரோசியான் B என்ற துணை விண்மீன் இனமறியப்பட்டது. ஒளிப் பொலி வெண் 11 கொண்ட இது 4 வினாடி கோண விலக்கத்துடன் புரோசியான் A லிருந்து விலகி உள்ளது.இது சீரியசின் துணை விண்மீனைக் காட்டிலும் குறைவான ஒளியை உமிழ்கிறது. எனினும் பப்பி விண்மீனை விட அடர்த்தி மிக்க குறு வெண் விண்மீனாக உள்ளது . புரோசியான் A ன் பிரகாசம் நமது சூரியனை விட 5.8 மடங்கு அதிகமானது. சூரியனை விட ஓரளவு பெரியது,வெப்பமானது. இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 7000 டிகிரி கெல்வின் .

No comments:

Post a Comment