எழுதாத கடிதம்
அண்ணா ஹசாரேயும் ,ராம் தேவும் எம். பி க்களைத் திருடர்கள் என்று சொன்ன போது உங்கள் மனதில் ஒரு சலசலப்பு ஏற்பட்டது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விரும்பினீர்கள் .நம்மை யார் குறை கூறினாலும் கோபம் வருவது இயற்கைதானே.
நீங்கள் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் - நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா ?
உண்மையிலேயே நீங்கள் யார் என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் .அது தவறு. நீங்கள் யார் என்பது மக்களுக்குத் தெரியும், உண்மையிலேயே யார் என்பதும் மக்களுக்குத் தெரியும்
எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்ற பொதுமைக் கருத்தாலும், குற்றம் செய்தும் குற்றம் நிரூபிக்கப் படாவிட்டால் அவர் குற்றவாளி இல்லை என்ற சட்டத்தாலும் நீங்கள் உங்களை மறைத்துக் கொள்ளலாம். எங்களால் நீங்கள் குற்றவாளி என்று நீருபிக்க முடியாது .அது எல்லா வகையாலும் நிராயுதபாணியாக நிற்கும் எங்களால் நிச்சியமாக முடியாது
தொட்டால் தீ சுடும் ,கை விட்டால் பொருள் கீழே விழும் நீரில் மூழ்கினால் சுவாசிக்க முடியாது ,கண்களை மூடினால் வாசிக்க முடியாது என்பதெல்லாம் எப்படித் தெரியுமோ அதைப் போலத்தான் நீங்களும் எப்படி எங்கள் நம்பிக்கையை வஞ்சித்து விட்டு வளர்ந்து வருகின்றீகள் என்பதையும் தெரிந்து வைத்திருக்கின்றோம் .
எங்களுக்கு நீங்கள் குற்றவாளி என்று சொல்லத் தெரியவில்லை. ஏனெனில் அதற்கு வலுவான நிரூபணம் எங்களிடம் இல்லை. அப்படியே சிக்கினாலும் அதை வெளிப்படுத்த முடியாது ஏனெனில் பயம். அதையும் மீறி வார்த்தைகள் வெளி வந்தால் அவன் பாதி உச்சரிக்கும் போதே உயிர் விட்டிருப்பான். இது தான் இந்திய நடைமுறை. அண்ணா ஹசாரேயும் ,ராம் தேவும் தப்பிப் பிறந்தவர்கள்.பயந்து பயந்தே வாழும் மக்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றார்கள். இதற்காக நீங்கள் கோபப்பட்டு உங்கள் அஸ்திரங்களை அள்ளி வீசாதீர்கள்.
நீங்கள் நல்லவர்.ஆனால் நீங்கள் மட்டுமே நல்லவராக இருந்து என்ன செய்து விட முடியும் .உங்களைச் சுற்றி எவ்வளவு மோசமானவர்கள் பதவியில் இருக்கின்றார்கள் என்பது எங்களை விடவும் உங்களுக்குத் தான் சரியாகத் தெரியும் .அதைத் தட்டிக் கேளுங்கள் .தடுத்து நிறுத்துங்கள் .உங்களைப் போல மக்களுக்காக அர்பணித்துக் கொண்ட எல்லோரையும் நல்லவர்களாக மாற்றுங்கள் .அது உங்களால் முடியும் ,உங்களால் மட்டுமே முடியும் . கொஞ்சம் மாற்றி யோசியுங்க
No comments:
Post a Comment