Mostly in Tamil language in different topics-kavithai,Cartoon,Chemical elements(Vethith thanimangal),Structure of universe and galaxy(Vinveliyil Ulaa),Unwritten letters (Eluthatha Kaditham),Sonnathum Sollathathum(Quotes from Modern Scientists),Mind without fear (encouragement to depressed students),Micro aspects of inherent potentials (self development),Fun with Mathematics,Scientific Tamil
Saturday, June 30, 2012
Eluthatha kaditham
Thursday, June 28, 2012
Wednesday, June 27, 2012
Social awareness-Mind without fear
Monday, June 25, 2012
Vinveliyil ulaa
சூரியன் சிரியஸ் B இருக்குமிடத்தில் இருந்தால் அதன் பிரகாசம் 1.8 என்ற சார்பிலா ஒளிப் பொலிவெண் கொண்டதாக இருக்கும். அதாவது சிரியஸ் B யும் ஒரு பிரகாசமான விண்மீனே என ஊகிக்கலாம்.இதன் மங்கலான பிரகாசத்திற்குக் காரணம் அதன் புறப்பரப்பின் குறைந்த வெப்ப நிலையே என்றும் ஓரளவு திடமான மேற்பரப்புள்ள ஒரு குளிர்ந்த சூரியன் அது என்றும் வானவியலார் முதலில் நினைத்தனர்.ஆனால் உணர்வு நுட்பமிக்க தொலை நோக்கியால் பார்த்த போது சிரியஸ் B ஒரு மங்கலான விண்மீன் இல்லை என்பதையும் புறப்பரப்பின் வெப்ப நிலை சூரியனை விட மிக அதிகமாக உள்ள ஒரு விண்மீன் என்பதையும் தெரிந்து கொண்டனர்.எனவே மங்கலான ஒளிக்கு காரணம் அதன் தாழ்ந்த ஒளிப் பொலி வெண்ணே என்று கருதினார்கள்.இது சூரியனை விட 360 பங்குகுறைவாக இருக்க வேண்டும் அதாவது அதன் ஆரம் சூரியனைப் போல 19 மடங்கு குறைவு எனலாம் அதாவது பருமனில் சிரியஸ் B சூரியனை விட 6850 மடங்கு குறைவானது.ஆனால் நிறையில் இந்த அளவு வேறுபாடு இல்லை.ஏறக்குறைய சூரியனின் நிறைக்குக் கொஞ்சம் குறைவாக உள்ளது. இதனால் சிரியஸ் B-ன் அடர்த்தி சூரியனின் அடர்த்தியை விட 5480 மடங்கு அதிகமானது.
துல்லியமான கணக்கீடுகள் சிரியஸ் B-ன் ஆரம் 20,000 கி மீ என்று தெரிவிக்கின்றன. அதாவது சூரியனின் ஆரத்தைப் போல 35 மடங்கு குறைவு. எனவே பருமன் 42875 மடங்கு குறைவு. இது அதன் அடர்த்தி இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது.
சிரியஸ் B,பூமியைப் போல மூன்று மடங்கு பெரியதாகவும்,யுரேனஸ் கோளைவிடச்சற்று சிறியதாகவும் இருக்கின்றது.இதனால் இதன் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.சிரியஸ் B-ன் அடர்த்தி நீரின் அடர்த்தியப் போல 125,000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர்.சிறிய உருவமும் கூடுதல் நிறையும் குறைந்த ஒளிர் திறனும் கொண்ட இதை குறுவெண் விண்மீன் (white dwarf) என அழைக்கின்றார்கள்.இந்தியாவில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானியான எஸ் .சந்திரசேகர்,ஒரு குறு வெண் விண்மீன் தன் நிறையை 1 .44 சூரிய நிறையை விடக் கூடுதலாகப் பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிறை வரம்பு சந்திரசேகர் நிறை எல்லை என அழைக்கப்படுகிறது.
சிரியஸ் B ஒரு குறு வெண் விண்மீன் என்பது முழு அளவில் உண்மை இல்லை. 40 எரிடானி என்ற மும்மீனில் உள்ள ஒரு விண்மீன் வெப்ப மிக்கதாக இருந்தும் தாழ்ந்த பிரகாசம் கொண்டிருந்ததை 1910 ல் கண்டறிந்தனர். இதை யாரும் குறு வெண் விண்மீன் என்று வைகப்படுத்த வில்லை எச்.என் ரஸ்ஸல் என்பார் 40 எரிடானி ஒரு விதி விலக்கு என அறிவித்தார். சிரியஸ் B இன்னும் பிரகாசமான விண்மீன் போல இருக்கிறது.ஆனால் ஏறக்குறைய குறு வெண் விண்மீன் நிலைக்கு அருகாமையிலும் உள்ளது.குறு வெண் விண்மீன் ஆற்றலை எல்லாம் உமிழ்ந்து ஓய்ந்த நிலையில் இருப்பதால்,ஈர்ப்புச் சுருக்கத்திற்கு உள்ளாகும். அப்போது அதற்கு எதிரான உள்ளார்ந்த தடைகள் (எலெக்ட்ரான் அழுத்தம்,நியூட்ரான் அழுத்தம்) அதை ஊதிப் பெரியதாக்கி விடுகின்றன.அப்போது அது பெருஞ் சிவப்பு வின்மீனாகக் காட்சி தரும்.இது நீண்ட கால நெடுக்கையில் இனிமேல் ஏற்படப் போவதால் பழங்காலத்திய பதிவுகளுக்கு இச்செந்நிறம் காரணமாக இருந்திருக்க முடியாது. ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண்மீனுக்கு வளிம நிலை மூலப் பொருட்கள் கவரப் பட்டு பாய்ந்து செல்லும் போது இது போன்ற செந்நிறம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. நிறமாற்றத்தோடு தொடர்புடைய இது போன்ற புதிர் பெர்சியஸ் வட்டாரத்திலுள்ள அல்கோல் என்ற இரட்டை வின்மீனிலும் காணப்படுகின்றது.புவி வளி மண்டலத்தில் உள்ள தூசி மற்றும் மூலக் கூறுகளால் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் உட்கவர்தலால் இப்படி ஏற்படலாம் என்றும் அதனால் சிரியஸ் பூமியின் அடிவானத்தில் இருக்கும் போது பலவிதமான நிறஜாலங்களை ஏற்படுத்தும் என்றும் கூறலாம்.பழங்காலத்திய வானவியலார் சிரியஸ் அடிவானத்தில் இருக்கும் போது எப்போதும் ஆய்வை மேற்கொண்டதால் அவர்கள் குழம்பி இருக்கலாம் என்று பின்னால் வந்தவர்கள் கூறினார்கள்.
ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை ஒரு விண்மீனால் உமிழப்படும் ஒளி அதன் ஈர்ப்பினாலேயே பாசிக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.ஒளியை போட்டான் (photon) என்றழைக்கப்படும் ஒளித்துகள்களாகக் கருதினால் அத்துகள் விண்மீனின் பலமான ஈர்ப்பை எதிர்த்து வெளியேற வேண்டியதாக இருக்கிறது.அதற்குத் தேவையான ஆற்றலை அது தன் இயக்க ஆற்றலிலிருந்தே பெற விழைவதால் அதன் இயக்க வேகம் தாழ்வுற,அதற்கேற்ப அதன் அலை நீளமும் அதிகரிக்கின்றது. அதாவது செம்பெயர்ச்சி (Red shift)ஏற்படுகின்றது. இதனளவு ஒரு விண்மீனின் நிறை மற்றும் ஆரம் இவற்றின் தகவிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. நியூட்ரான் விண்மீன்,கருந்துளை விண்மீன் (Black hole)குறு வெண் விண்மீன் (White dwarf)போன்ற வற்றில் செம்பெயர்ச்சி குறிப்பிடும் படியாக இருக்கிறது.குறு வெண் விண்மீன்களில் செம்பெயர்ச்சியை அளவிட்டறிந்து ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை யின் உண்மைத் தன்மையை மெய்ப்பித்துள்ளனர்.
Sunday, June 24, 2012
Eluthatha kditham
Saturday, June 23, 2012
Vinveliyil Ulaa
Friday, June 22, 2012
Eluthatha kaditham
எழுதாத கடிதம்.
படித்தவர்கள் ,பண்புள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று மேடைகளில் அழைப்பு விடுப்பார்கள் மூத்த இந்திய அரசியல் வாதிகள். இளைஞர்கள் தீவிர அரசியலுக்கு வந்து மக்களிடையே விரைவான செல்வாக்குப் பெற்று விட்டால் அனுபவம் போதாது என்று ஓரங்கட்டப் பார்ப்பார்கள்.இவர்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அனுபவம் நெடு நாளாகியும் மக்களுக்கு குறிப்பிடும் படியான எந்த நன்மையையும் செய்யவில்லை.மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படும் போது ,அவர்கள் மாற்றி யோசிக்கத் துணிவு கொள்கின்றார்கள் அப்துல் கலாம் மக்களால் அதிகம் நேசிக்கப்படும் ஒரு மனிதர்.அவர் ஒரு விஞ்ஞானி என்றாலும் மக்களுக்கெல்லாம் ஒரு சிறந்த தலைவராக இருக்கமுடியும் என்பதை வெகு இயல்பாக எடுத்துக் காட்டியவர்.நேர்மையோடு பணியாற்றக் கூடியவர்.பதவி மீது ஆசை இல்லாதவர்,பதவியைத் தன்னுடைய நலனுக்காகவும் தன் உறவினர் நலனுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள மறுப்பவர் நாட்டின் வளர்ச்சியில் உண்மையான அக்கறை கொண்டு உருப்படியான கருத்துக்களையும் ,திட்டங்களையும் எடுத்துச் சொன்னவர். இந்தியாவை ஒரு வல்லரசாக உயர்த்தி உலகிற்கு காட்ட முடியும் என்ற கனவை இளைஞர்களின் எண்ணத்தில் விதைத்து நம்பிக்கையை வளர்த்துக் காட்டியவர். அரசுக்கு தலையாட்டிப் பொம்மை இல்லை அரசை விட மக்கள் நலம் விரும்பியாக இருக்கிறார் என்பதற்காக
மக்களால் விரும்பப் படும் ஒருவரை மீண்டும் ஜனாதிபதியாக வராமல் இருப்பதற்கு செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தடையாக இருப்பது இந்தியாவின் தூரதிர்ஷ்டமே. அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த போது அவர் மீண்டும் சிறந்த ஒரு ஜனாதிபதியாக இருப்பதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டார்.அவருடைய அனுபவம், அறிவு , வழிகாட்டல் நேர்மை ,இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டுவேறொருவரை போட்டியாளராக நிறுத்துவது இந்திய மக்களை ஏமாற்றுவதற்கு ஒப்பானதே. ஜனாதிபதி என்பவர் ஒரு நடு நிலையாளராக இருக்கவேண்டும் .பிரணாப் ஒரு காங்கிரஸ் வாதி. காங்கிரஸ் கட்சியால் வளர்ந்தவர். ஒருவேளை எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் தொடர்பு எப்படி இருக்கும். ஜனாதிபதி என்பவர் மக்கள் நலம் விரும்பியாக இருக்க வேண்டும். துண்டு விழுகிறது என்பதற்காக சேவை வரியை உயர்த்தியவர் பிரணாப் .விலைவாசி உயர்வைக் கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறியவர். பண வீக்கத்திற்கு மக்களையே சுட்டிக் காட்டுபவர்.சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை முடக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை வெளியிட விரும்பாதவர் படித்தவர்களும் பண்புள்ளவர்களும் அரசியலுக்கு வந்தால் அது வீழ்ந்து வரும் இந்தியாவிற்கு நல்லது என்று எண்ணி வழி விடுகள்.அது நீங்கள் இந்தியாவிற்கு செய்யும் மிகப் பெரிய சேவையாக இருக்கும்.
Wednesday, June 20, 2012
Vethith thanimangal-Chemistry
Tuesday, June 19, 2012
Social awareness- Mind without fear
மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம்
தாத்தா,பாட்டி சொன்ன கதை ,பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் விவரித்த கதை.பாடப் புத்தகத்தில் படத்தோடு படித்து மகிழ்ந்த கதை.கதைகள் வெறும் கற்பனை என்றாலும் அதில் வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துகளும் உட்பொதிந்திருக்கும்.ஒரு கருத்தை கதையாகக் கூறும் போது கதையை மனது எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது.கருத்து சிந்தனையைத் தீண்டா விட்டாலும் கதை நீண்ட காலமானாலும் மறக்கப் படுவதில்லை .அதனால் என்றைக்காவது ஒருநாள் கதையை மனம் அசை போடும் போது அது நாள் வரை மறைந்திருந்த கருத்துகள் பிரகாசமாய்ப் பளிச்சிடுகின்றன.கதையை வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்காமல் வெறும் கதையாகவே படித்து மகிழும்போது அது கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறோம். இந்தத் தவறுதல் வாழ்க்கை முழுதும் தொடர்வதை அனுமதிப்பதால்,பல சமயங்களில் நாம் சரியானதை சரியான படித் தேர்வு செய்யத் தவறி விடுகிறோம்.இதற்கு சின்னக் குழந்தையாய் இருந்த போது நாம் கேட்டு மகிழ்ந்த ஆமை-முயல் கதையே ஓர் எடுத்துக்காட்டு.
ஆமைக்கும் முயலுக்கும் நடந்தது ஓர் ஓட்டப் பந்தையம்.முயல் முதலில் விரைந்து ஓடி முந்திச் சென்றாலும் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் தொடர்ந்து ஓடி,கடக்கும் தொலைவைக் குறிப்பிட்ட காலத்தில் கடந்த ஆமையை வெற்றி கொள்ள முடியவில்லை.இக் கதை ஒரு திரைப் படம் போல உங்கள் சிந்தனையில் ஓடினால் அது சொல்லும் கருத்துகள் பலவாகும் அது உண்மையில் அனைத்து வயது மாணவர்களுக்கும் கூட சுய தூண்டுதலாக இருக்கும்.
ஆமை மெதுவாக நகர்ந்து சென்றாலும்,வெற்றி பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தொய்வின்றி போட்டியில் பங்கேற்றது.இதை ஆங்கிலத்தில்'slow and steady' என்பர். முயல் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் குறிப்பிட்ட கால நெடுக்கைக்குள் வெற்றி இலக்கை ஆமைக்கு முன்னதாக எட்ட முடியவில்லை .செய்யும் செயலை விரைந்து செய்யும் போது உடலளவில் களைப்பும் மனதளவில் தடுமாற்றமும் ஏற்படலாம் .அவை தோல்விக்கு வழி வகுக்கும் என்பதால் செய்வது எதுவானாலும் அதை மெதுவாகவும் தொய்வின்றியும் செய்ய வேண்டும் என்ற வாழ்வியல் கருத்தை இது எடுத்தியம்புகிறது.
விரைந்து ஓடும் முயல் மெதுவாக நகர்ந்து செல்லும் ஆமையைக் கூட வெற்றி கொள்ள முடியாது தோல்வி யடைந்தது. இது வாழ்க்கைப் போராட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது சரியாக முன் திட்டமிட்டு நம்பிக்கையோடு செயல்பட்டால் முடியாதைக் கூட முடிக்கலாம்.அப்படிச் செய்தது ஆமை.சரியாகத் திட்டமிடாவிட்டால் முடிக்கக் கூடியது கூட முடியாது போகலாம்.அப்படி நிகழ்ந்தது முயலுக்கு. முடிவதும், முடியாததும் ஒரு மனதின் எண்ணத்தில்தான் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றை எட்டுவது எளிது என்ற கருத்தையையும் இக் கதை உறைபொருளாகக் கொண்டுள்ளது .
இலக்கு நோக்கிய பயணமில்லாத முயல் இலக்கை மட்டுமே நோக்கிப் பயணித்த ஆமையிடம் தோல்விகண்டது.எல்லாத் திசைகளிலும் நடந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் விளையும் இடப்பெயர்ச்சி குறைவாகிப் போகும்.இலக்கு என்பது ஒன்றை மட்டுமே நோக்கிய பயணம் .இதில் எண்ணச் சிதறலோ செயலில் சிறுமையோ இருக்கக் கூடாது. நம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்கிய பின் மாற்று எண்ணம் கொண்டால் அது பெரிதளவில் மனச்சோர்வைத் தரும்.திடமான எண்ணமே மன உறுதியை வெளிப்படுத்தும். ஒரு செயல் முடிக்கப்படாமல் போவதற்கும்.வெற்றிகரமாக முடிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாகின்றது .ஒரு செயலைச் செய்யும் போது முடிக்கும் வரை ஓய்வெடுக்கக் கூடாது என்பது ஆமைக்குப் புரிந்த அளவுக்கு முயலுக்குத் தெரியவில்லை .முடிந்த வரை செய்தால் வெற்றி நிச்சிய மில்லை, முடிக்கும் வரை செய்வதே வெற்றி என்ற கருத்தையும் கூறுவது இக் கதையாகும் மீண்டும் இதே போட்டி நடந்தால் முன்பு செய்த அதே தவறை திரும்பச் செய்யாது முயல் ஜெயித்துக் காட்டலாம்.உலக கிரிக்கெட் கோப்பை வாங்கிய ஆஸ்திரேலியா,இந்தியா,ஸ்ரீ லங்கா போன்ற நாடுகள் கூட பங்களா தேஷ் போன்ற வலிமை குன்றிய குழுவிடம் தோற்றுப் போயிருக்கின்றன.பிற்பாடு ஜெயித்தும் இருக்கின்றன. தோல்வியும், வெற்றியும் இறுதி முடிவில்லை அவை மாறி மாறி வரும். .கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுப் போனோமே என்று முயல் மனம் வெறுத்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிய வில்லை.தோல்வியால் துவண்டு போய் ஒருபோதும் தவறான முடிவெடுத்து விடாதீர்கள் என்ற கருத்தை எண்ணத்தில் பதிப்பது இக் கதை. .நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் இக் கதையில் வரும் ஆமை போல நினைத்து நிஜமான முயல் போலச் செயல் படவேண்டும் .
Monday, June 18, 2012
Eluthatha kaditham
எழுதாத கடிதம்
இன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 520 யையும் தாண்டி அதிகரித்து வருகிறது மெக்கானிகல்,சிவில்,மின்னணு தகவல் தொழிநுட்பம்,மின்னியல் மற்றும் மின்னணுவியல்,கணினி போன்ற பாடப் பிரிவுகள் பெரும்பாலும் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ளன.ஒரு சில கல்லூரிகளில் ஒரே பாடப் பிரிவில் இரு வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்கின்றனர்.எப்படி இருந்த போதிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தது 32000 மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக உருவாக்கப் பட்டு வருகின்றார்கள்.இவர்களில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பணி புரிவதற்கான திறன்களைப் பெற்றுத் வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இதற்குக் காரணம் என்ன? மாணவர்களுக்கு அறிவும்(Knowledge ) அறிவைச் சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள(Intelligence ) தெரியவும் வேண்டும்.பொதுவாக இந்தியக் கல்வி முறையில் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள் வேலை செய்வதற்கான தகுதிகளை வளர்க்கப் பயிற்சி அளிக்க மாட்டார்கள் .ஆனால் இன்றைக்கு போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள கல்வியோடு இத்தகைய பயிற்சிகளையும் அளித்துவருகின்றது Spoken English,Soft Skill,Professional Skill,Computer knowledge with computing skill,value added activities போன்ற பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அப்படியிருந்தும் நல்ல பலன் கிட்டவில்லை என்றே சொல்லவேண்டும்.
மாணவர்களைச் சேர்க்கும் போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் கல்வித் தரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை புறம்தள்ளிவிட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. கல்விக் கட்டணச் சலுகை,இலவச லாப்டாப்,இலவச புத்தகங்கள்,சீருடைகள்,மதிய உணவு,பஸ் போக்குவரத்து தேர்வில் வாங்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஊக்கத் தொகை என நம்ப முடியாத எல்லை வரை .
தான் ஒரு பொறிஞனாக வர வேண்டும் என்ற கனவு மெய்ப்பட வேண்டுமானால் அது எண்ணத்திற்கு கருவாகி,இடைவிடாது ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து,காட்டும் அக்கறையால் முழு உருவம் பெற்று சமுதாயத்திற்கு நலம் பயக்கும் செயல்களாக வெளிப்பட வேண்டும்.நோக்கமும் செயல் திட்டமும் இல்லாத எல்லா மாணவர்களையும் வலுக்கட்டாயமாகப் பொறியியல் படிக்கச் சேர்க்கும் போது இதனால் சொல்லொண்ணாத் துயரம் அடைவது ஆசிரியர்களே.
நோஞ்சான் மாடு பூட்டி பந்தையத்தில் வெற்றி பெறமுடியுமா?கரும்புச் சக்கையைப் பிழிந்து சக்கரையை எடுக்க முடியுமா ? அஸ்த்திவாரமே இல்லாமல் பல அடுக்கு மாடி கட்ட முடியுமா ? அடிப்படையான மொழியறிவு இல்லாமல் உயர் கல்வி கற்க முடியுமா? விதையில்லாமல் செடியா ,கரு இல்லாமல் உயிரா?
கல்வியின் அருமை ,திறமை வளர்ப்பின் தேவை இவற்றைப் பற்றி ஏதும் அறியாமல் ,தினம் தினம் கல்லூரிக்கு வந்து போவதால் மட்டுமே தனக்கு B.E பட்டமும் அதிகமான சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாணவர்களாக மாறி வருகின்றார்கள் .
வர்த்தகமாகி விட்ட பொறியியல் கல்வியில்,தங்களை நிலைப் படுத்திக் கொள்ள ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை உயர்த்திக் காட்டவும்,வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வருகிறது .தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டிப் பந்தையத்தில் தார்க்குச்சியால் குத்தப் பட்டு ஓடும் மாடு போல ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ் நிலை உருவாக்கி வருகிறது.
குருடனுக்கு முன் ஓவியம்,செவிடனுக்கு முன் இன்னிசை கீதம், என்பது எப்படி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லையோ,அது போல கற்றுக் கொள்ளும் அடிப்படை நோக்கமில்லாத மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும்.ஆசிரியர்களின் முயற்சி கடலில் பெய்த மழை போல வீணாகிவிடுகிறது.
பொறியியல் படிக்கப் போகும் மாணவர்களே ,உங்களுக்கு உண்மையிலேயே அதில் விருப்பம் இருக்குமானால் உங்களுக்கு கற்பதும் எங்களுக்கு கற்றுக் கொடுப்பதும் எளிதாகும். அப்படி இல்லாத போது உங்களுக்கு எதில் உண்மையான விருப்பம் இருக்கின்றதோ அதில் ஈடுப்பாடு காட்டுங்கள் நிச்சியமாக அதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் இந்த ஆசிரியர்களை கற்பிக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளி விடாதீர்கள் .
Sunday, June 17, 2012
Vinveliyil ulaa
Saturday, June 16, 2012
Social awareness- Mind without fear
உடலில் ஊனமிருந்தாலும் ,மனதளவில் எந்தப் பாதிப்புமின்றி இயல்பான மனிதர்களைக் காட்டிலும் வெகு சிறப்பாக வாழ்ந்து சாதனை செய்து சாதித்துக் காட்டியவர்கள் உலகில் பலருண்டு .போலியோவால் உறுதியில்லாத கால்களைக் கொண்டிருந்த வில்மா ஒலிம்பிக் போட்டிகளில் ஓடி, சக வீரர்களையும் முந்திச் சென்று பதக்கங்களைப் பெற்றார் .ஒருவேளை அவர் மற்றவர்களைப் போல உறுதியான கால்களைப் பெற்றிருந்தால் இந்த அளவு மன உறுதியை வளர்த்துக் கொள்ள தவறி வெற்றி வாய்ப்பை வெளிப்படுத்திக் காட்ட முடியாது போயிருக்கலாம் ஒரு தோல்வி,ஒரு இழப்பு பாடமாக ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்தத் தோல்வியை முறியடிக்கும் திறனைத் தருகிறது, இழப்பை மீட்டுப் பெறும் முறையை கற்றுக் கொடுக்கிறது.தோல்வியையே தோல்வியாக்கி விட்டால் வெற்றி கூடுதல் சிறப்புடன் வெளிப்பட்டே தீரும் என்பது இவருடைய வாழ்க்கை நமக்குக் கூறும் அறிவுரையாகும். எனவே மாணவர்களே தோல்வியால் துவண்டு போய்விடாதீர்கள்.தேர்வில் தோல்வி என்பது ஒரு நிகழ்வின் தற்காலியமான ஒரு முடிவு அதுவே வாழ்கை முழுவதையும் தீர்மானிக்கக் கூடிய இறுதித் தீர்ப்பில்லை காதல் தோல்வி கூட அப்படிப்பட்டதுதான்.ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததும்,காதலுக்குப் பின்னால் மாறுதலாக நடந்து கொள்வதும் .காதலோடு மற்றொன்றையும் இணைப்பதும் முழுமை இல்லாத காதலாகி காதல் தோல்வியில் போய் முடிகின்றது.காதல் என்பது இருமனம் சம்பந்தப்பட்டது ,அதில் ஒரு மனம் மட்டுமே முடிவெடுக்குமானால் அது பெரும்பாலும் சரியில்லாமலும் இருக்கலாம்.ஒருவருடைய தோல்விக்குப் பல காரணங்களில் எதாவது சில காரணமாக இருக்கலாம்.அதை ஆராய்ந்து களைந்தெறிந்து வெற்றிக் கனியைச் சுவைப்பது என்பது கற்ற கல்விக்குப் பெருமை ,வாழ்க்கைக்கு இனிமை,சாகாத சமுதாயத்திற்கு வலிமை.
கால்களே இல்லாத நிக் உழைக்கக் கைகளின்றி தன்னாலும் வாழ முடியும் என்று எல்லோருக்கும் எடுத்துக் காட்டாய் வாழ்ந்து வருகிறார்.உலகத்தின் பாரவையைத் தன் பக்கம் திருப்பி சிந்திக்கத் தூண்டியிருக்கிறார் .சிறுவயதில் ஒருமுறை கீழே விழுந்து தானாக எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.யாரும் அவரை த் தூக்கி விடவில்லை.பின் அவரே கற்றுக்கொண்டார் தனக்கிருக்கும் வசதிகளைக் கொண்டு எப்படி தனக்குத் தானே எழுந்திருப்பது என்பதை.அடுத்தவர்களுடைய உதவி என்பது வேறு.ஆனால் ஒவ்வொருவரும் தங்களுடைய தேவைகளை த் தங்களாகவே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவுடன் அவருடைய வாழ்கையில் வசந்தம் வரத் தொடங்கியது. துடுப்பே இல்லாமல் படகை ஓட்டி கரை சேர்ந்தவர்கள் இவர்கள்,துடுப்பிருந்தும் நடுக் கடலில் தடுமாறுவார்கள் மனச் சோர்வுற்ற மாணவர்கள்.கரை சேர வேண்டுமானால் துடுப்பு மட்டும் போதாது மனதில் துடிப்பும் வேண்டும்.மனத்தைக் கலகலப்பாகிக் கொள்ளுங்கள் அப்பொழுதான் உங்கள் மனம் உங்களுக்கே நண்பனாக இருக்கும்.
சோடியம் பயன்கள் (தொடர்ச்சி )
அணு இயற்பியல் துறை சார்ந்த பயன்கள்
அகச் சிவப்புக் கதிர்களைச் சிதறலுக்கு உட்படுத்தி ஆராய சோடியம் குளோரைடு படிகம் பயன் படுகிறது. கதிர் வீச்சுகளுக்கு உடனொளிர்வு (Floroscence ) தரக்கூடிய பொருளாக தாலியம் சேர்ந்த சோடியம் அயோடைடு படிகம் அணுக்கதிர் ஆய் கருவிகளில் பயன் தருகிறது .
அணு உலைகளில் சோடியம் ஒரு வெப்பப் பரிமாற்று ஊடகமாகக்
கொள்ளப்பட்டுள்ளது .நீர் ,கன நீருக்கு அடுத்தபடியாக அனுகூலமிக்க குளிர்விப்பானாக (Coolant )இருப்பது உருகிய சொடியமே. இதிலுள்ள முக்கியக் குறைபாடு ,சோடியம், காற்று மற்றும் நீரோடு எவ்விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.
சோடியம்-24 என்ற அணு எண்மம் (isotope) தடங் காட்டியாக (tracer) ப் பயன்படுகிறது. உடலில் உள்ள உறுப்புகளின் பாதிப்பை அறிய இதனால் முடிகிறது. சோடியம்-24 ன் அரை வாழ்வு (half -life ) 15 மணிகள் மட்டுமே. எனவே கதிரியக்கப் பொருள் உடலுக்குள் இருப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் பெரிதும் மட்டுப் படுத்தப் பட்டு விடுகின்றன.
Friday, June 15, 2012
Eluthatha Kaditham
Monday, June 11, 2012
Vethith Thanimangal-Chemistry
சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும்.சோடிய ஒளி ஒற்றை நிறங் கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி ,காற்றின் ஈரத்தாலும்,மூடுபனியாலும்குறைவாகவே உட்கிரகித்துக் கொள்ளப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது .இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனி மழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில்ஒரு படித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
சோடியம் ஒளி மின் விளைவினால் (Photo electric effect)ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது.சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால்,இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன் படுகிறது
சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை (amalgam)ஆக்சிஜனிறக்கஊக்கியாகப் பயன்படுகிறது.இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது.இப் பண்பு டைட்டானியம்,ஸிர்கோனியம் போன்ற வற்றை அவற்றின் டெட்ரா குளோரைடு களிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது.
சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள்
மஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும்.ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது.கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்
சோடியம் ஹைட்ராக்சைடு,சோப்பு,காகிதம்,ஒளிப்படச் சுருள்,ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது.இதன் அடர் கரைசல் தோலை அரித் தெடுத்து விடும்.பாசம் பிடித்த தரை,கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன் படுத்துகிறார்கள்.
சோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது.இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும்,மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன் தருகிறது. சோடியம் அசைடு,சோடியம் குளோரேட்,சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும்,சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும்,காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும்,சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன் படுகின்றன.சோடியம் ப்ளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும்,சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப் பதிவு முறையிலும்,சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும்,அமில நீக்கி மருந்தாகவும் பயன் தருகின்றன சமையலில் பயன் படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடுதான் .
உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம்உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது. இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது.பொட்டசியத்துடன் இணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலை யைக் கட்டுப் படுத்துகிறது.அதனால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கக் உதவுகிறது.உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப் பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது.இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன.இதயமும்,சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன.
Sunday, June 10, 2012
Vinveliyil Ulla
சிரியஸ்,சூரியனை விடப் பெரியது. அதன் ஆரம் சூரியனின் ஆரத்தைப் போல 1.8 மடங்கு ,அதன் நிறை சூரியனைப் போல 2.35 மடங்கு.சிரியஸின் புறப்பரப்பு வெப்பநிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் நெடுக்கையில் உள்ளது. நமக்கு அருகாமையில் இருக்கும் விண்மீன் களுள் இது ஐந்தாவதாகும்.வெறும் கணகளுக்குப் புலப்பட்டுத் தோன்றும் விண்மீன் களுள் ஆல்பா சென்டாரியை அடுத்து அருகில் உள்ளது சிரியஸ்ஸே ஆகும்
பூமியின் வட கோளத்தில் நடு வரைக் கோட்டிற்கு விலகியுள்ள பகுதிகளில் இருந்து கொண்டு ஆல்பா சென்டாரியைப் பார்க்க முடிவதில்லை.
ஆல்பா சென்டாரியைப் போல வே சிரியசும் தனி விண்மீனில்லை .ஒரு மங்கலான துணை விண்மீனைக் கொண்ட ஓர் இரட்டை விண்மீன் .இதை சிரியஸ் A,சிரியஸ் B என அழைப்பார்கள்.சிரியஸ் B ஒரு குட்டி விண்மீன் என்றும் ,குறு விண்மீன் என்றும் அறிந்துள்ளனர். இது சிரியஸ் A யை விட 10 ,௦௦௦ மடங்கு மங்கலானது .
சிரியஸின் தொலைவு
அண்ட வெளியில் விண்மீன் களின் தொலைவைக் கண்டறிய முயன்ற போது, முதன் முதலாக மதிப்பீடு செய்யப் பட்டது சிரியஸ் விண்மீனின் தொலைவாகும். டச்சு நாட்டு வான வியலாரான கிருஸ்டியன் ஹைஜென்ஸ் 1660 ல் ஓர் எளிய சோதனை மூலம் இதைச் செய்து காட்டினார். பித்தளையாலான ஒரு தகட்டில் பல அளவுகளில் துளைகளை இட்டு அதைச் சூரியனுக்கு முன்னிருத்தி எத் துளை சிரியஸ் போல பிரகாசம் தருவதாக இருக்கிறது என்பதை முதல் நாள் இரவு சிரியஸ்ஸை ஆராய்ந்து பார்த்த அனுபவத்தைக் கொண்டு அறிந்தார். அத் துளை சூரியனின் தோற்ற உருவ அளவில் 28000 ல் ஒரு பங்காய் இருந்தது.அதன் மூலம் சிரியஸ் 28000 வானியல் அலகுத் தொலைவில் இருக்கிறது எனக் கணக்கிட்டு அறிந்தார்,ஒரு வானியல் தொலைவு என்பது சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ஆகும். இது சுமார் 150 மில்லியன் கிலோமீட்டருக்கும் ௦.44 ஒளி ஆண்டுத் தொலைவிற்கும் சமம். இம் மதிப்பீட்டை,சூரியன் மற்றும் சிரியஸ் இரண்டிற்கும் சமமான
உள்ளார்ந்த பிரகாசத்தைப் பெற்றுள்ளன. என்ற அடிப்படையில் பெற்றார். அவர் காலத்தில் ஸ்டீபன் விதி நிறுவப்படவில்லை என்பதால் ஒரு விண்மீன் தன் ஓரலகுப் புறப்பரப்பின் வழியாக வீசும் மொத்த ஆற்றல் ,அதன் சார்பிலா வெப்ப நிலையின் நான்காவது மடிக்கு நேர் விகிதத்தில் இருக்கிறது என்பது பற்றி அறியாதிருந்தனர். நிறமாலை ஆய்வுகள் மூலம் .சிரியஸின் புற வெப்ப நிலை 10,௦௦௦ டிகிரி கெல்வின் என்றும் சூரியனுக்கு இது 6000 டிகிரி கெல்வின் என்றும் தெரிந்து கொண்டனர். இது .சிரியஸின் ஒவ்வொரு அலகுப் பரப்பும் சூரியனை விட 7.7 மடங்கு ஆற்றலை வெளியேற்றுகிறது எனத் தெரிவிக்கிறது. இதன் ஆரத்தை 1.8 சூரிய ஆரம் எனக் கொண்டால் ,இதன் பரப்பு சூரியனை விட 3.24 மடங்கு அதிகமாக இருக்கும். எனவே சிரியஸ் சூரியனை விட 25 மடங்கு பிரகாசமிக்கது என்று கூறலாம்..இதை ஒரு திருத்தமாகக் கணக்கீட்டில் கொண்டால் சிரியஸின் தொலைவு 11 ஒளி ஆண்டுகள் என்பதைப் பெறலாம். பின்னர் ஹைஜென்ஸ் கண்ணாடித் துண்டுகளைப் பயன்படுத்தி துளையில் விழும் சூரிய ஒளியின் அளவை மட்டுப்படுத்தினார். மேலும் பகல் பொழுதின் அதிக ஒளி காரணமாக கண்மணி சுருங்கி இருப்பதால் ,அதற்காக ஒரு திருத்தத்தையும் மேற்கொண்டு 8.6 ஒளி ஆண்டுகள் என்று இன்று உறுதி செய்யப்பட்ட அதே அளவை அன்றே கண்டறிந்தார்.
கார்ட்டூன்
கோடை விடுமுறையை வெட்டிப் பொழுதாய் கழித்துக் கொண்டிருந்த தன் மகனைப் பார்த்து அப்பா
அப்பா: உருப்படியாக ஏதாவது செய்யக்கூடாதா ?
மகன் : எப்போதும் குறையாகவே சொல்லாதிங்கப்பா .நீங்கள் என்றைக்கு என் சாமர்த்தியத்தைப் பற்றி மெச்சி இருக்கிங்க.
அப்பா: அப்படி என்ன சாதித்து விட்டாய் ?
மகன் : காலையில் படுக்கை விட்டு 7 மணிக்கு எழுந்தேன் .பல் துலக்கி, குளித்து தலை சீவி புத்தாடை அணிந்து கொண்டேன். அம்மா தந்ததைச் சாப்பிட்டேன் .சப்தம் போட்டால் உங்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் வெளியில் போய் விளையாடினேன் கரண்டு பில் எகிறுடும் என்பதால மின் விசிறி ,ac கூட பயன்படுத்த வில்லை
அப்பா : அன்றாடக் கடமைகளெல்லாம் சாதனையாகி விடுமா ?
மறைந்திருக்கும் உண்மை : நாட்டின் தலைவர்கள் எல்லாம் இப்படித்தான் தங்கள் இயல்பான கடமைகளையெல்லாம் தியாகமாகவும் ,சாதனைகளாகவும் சொல்லிக் கொள்கின்றார்கள்.நீ பரிசுப் பொருளை வாங்கி அவர்கள் கையால் கொடுத்தால் அவர்கள் ஒளிப் படம் எடுத்துக் கொள்கிறார்கள் வீடே நாடு நாடே வீடு .
Saturday, June 9, 2012
Social awareness-Mind without fear
வில்மாவின் கதையைக் கேட்டீர்களா? சாதாரணமாக வாழ்வதற்குக் கூட எந்த நேர்மறையான அனுகூலங்களும் இல்லாமலேயே வில்மாவால் இமாலய சாதனைகளைச் சாதிக்க முடியும் போது கூடுதல் வாய்ப்புக்களையும் வசதிகளையும் பெற்றிருக்கும் நம்மால் ஏன் முடியாது.வில்மா உடல் உறுப்புக்களின் கோளாறால் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவு செய்து வாழ்க்கை முழுக்க சும்மாவே இருக்க விரும்பவில்லை வாழ்க்கையில் எதை இழந்தாளோ அதை மீட்டுப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை உண்மையாகவும் உறுதியாகவும் வளர்த்துக் கொண்டாள்.எல்லோரையும் போல தானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுவடைந்து அதுவே மனதில் நிலைப்பட்டு சுய உந்துதலுக்கு வலிமையான உந்தற் காரணியாக அமைந்துவிட்டது .
வில்மா வீட்டிலிருந்த படியே படித்து பட்டங்கள் வாங்கி ஒரு ஆசிரியராகி இருக்கலாம்.அது அவளால் இயலக்கூடியதே என்றாலும் தனக்கு எது பலவீனமாக அமைந்ததோ அதையே மக்களுக்கு தன்னுடைய பலமாகக் காட்ட உறுதி கொண்டாள்.அந்த எண்ணத்தின் வெளிப்பாடே அவள் வித்தியாசமாக எடுத்த முடிவாகும் கால்கள் வலுவிழந்திருந்தாலும் ஓட்டப் பந்தைய வீராங்கனையாக தன்னை உலகத்தாருக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தாளோ அப்போதே அவள் நம் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டு நின்றாள்.
மிக உயர்வாக எண்ணுவதும் எண்ணியதைச் சொல்லுவதும் எளிது ஆனால் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பது எளிதில்லை. ஏனெனில் எண்ணம் என்பது கணப் பொழுது முயற்சி.அதற்கு உருவம் கொடுப்பது என்பது நாள் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் சில சமயங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம் முடிந்த வரை போராடுவது கூட இல்லை இது முடிக்கும் வரை போராடுவது.எண்ணத்தில் திண்மை இல்லையென்றால் அது சிதைந்து அழிந்து போகும்,சில நேரங்களில் தடம் மாறிப் போகும்.வில்மாவின் திண்மையான எண்ணம் அவள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்குக் காரணமாக இருந்தது .
உறங்கும் போது வருவதல்ல கனவு,உன்னை உறங்க விடமால் செய்வதே கனவு என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறுவார்கள் வில்மாவின் வாழ்க்கை இந்த வாக்கியத்திற்கு சரியான விளக்கம் தரும் ஒரு விளக்கவுரையாக இருக்கிறது
வில்மா தன் எண்ணத்தை மெய்ப்படுத்திக் காட்ட கடிய முயற்சிகளை மேற்கொண்டார்.விடாத பயிற்சிகள் மூலம் முயற்சிகள் முயற்சி இல்லாமல் வரும் ஏதும் உனக்கு பெருமை தருவதாக இருக்காது என்றும் எந்த வெற்றியும் அப்படி வருவதில்லை என்றும் அவர் கூறுவார்
வில்மா தன் உடல் குறைபாட்டை நினைத்து நினைத்து மனச் சோர்வுற்றுதன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருபோதும் எண்ணியதில்லை.அவள் உடல் குறைப்பாட்டுடனும் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டினாள்.உடல் குறைபாடே இல்லாதவர்கள் எதற்கு மனச் சோர்வுற்று தற்கொலையைத் தேடுகிறார்கள்.உலக மேடையில் அவர்களுக்கெல்லாம் நிஜமான எடுத்துக் காட்டு வேண்டும் என்பதற்குத் தான் இறைவன் அவளை அப்படிப் படைத்தானோ .
தற்கொலைக்குத் துணிபவர்கள் வில்மாவின் வாழ்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்.அப்படிப் படித்தால் நிச்சியம் வெட்கப்பட்டு மனம் மாறுவார்கள்.வில்மா இன்றைக்கு நம்மிடையே இல்லை ஆனால் அசாத்தியமான சூழ்நிலையில் அவள் காட்டிய அசாத்தியமான முயற்சிகள் சாகாத சமுதாயத்திற்கு
நிரந்தரமான ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்கா அவள் படம் கொண்ட ஒரு தபால் தலையை வெளியிட்டது அவள் விட்டுச் சென்ற வாழ்வியல் எண்ணங்கள் நம் உள்ளங்களிலும் மலரட்டுமே .
Friday, June 8, 2012
Vethith thanimangal-Chemistry
இலத்தீன் மொழியில் நாட்ரியம் என்பது ஆங்கிலத்தில் சோடாவானது. சோடாவிலிருந்து பெறப் பட்டதால் இது சோடியம் என்ற பெயர் பெற்றது. இதன் வேதிக் குறியீடு Na ஆகும். .சோடியம் புதியதாக இருக்கும் போது மென்மையாகவும் ,மெழுகு போன்ற தோற்றமும் ,வெள்ளி போன்று பளபளப்பும் கொண்ட திண்மமாக இருக்கிறது. ஆனால் காற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெற்று ஓர் ஆக்சைடு படலம் அதன் மீது படிந்து அதன் பொலிவை மங்கச் செய்து விடுகிறது.
சோடியம் வறண்ட காற்று வெளியில் மிதமான வெப்ப நிலையில் நிலையானது. ஆனால் காற்றை 120 டிகிரி C வெப்ப நிலைக்குச் சூடு படுத்தும் போது சோடியம் தீப்பற்றிக் கொள்கிறது.சோடியம்,நீரோடு தீவிரமாக வினை புரிந்து தீயையும், வெடிச் சத்தத்தையும் எழுப்புகின்றது. இதனால் சோடியத்தால் ஏற்படும் தீ விபத்துகளுக்கு நீர் பாதுகாப்பளிப்பதில்லை.இதற்கு வரண்ட உப்புத் தூள் ,வறண்ட சோடா ,வறண்ட கிராபைட் தூள் போன்றவற்றை நீருக்குப் பதிலாகப் பயன் படுத்துகிறார்கள் .
ஈரக் காற்று வெளியிலோ நீரிலோ சோடியம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதால் சோடியத்தை பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் அல்லது பென்சீன் போன்ற ஆக்சிஜனற்ற நீர்மங்களில் அமிழ்த்தி வைத்திருப்பார்கள் . சோடியம் ஒரு சிறந்த வெப்பக் கடத்தியாகும் .வெப்ப ஏற்புத்திறன் நீரின் மதிப்பில் ஏறக்குறைய 3 ல் 1 பங்கு. இப் பண்பு சோடியத்தை அணு உலைகளில் ஒரு குளிர்விப்பானாக(Coolant) பயன்படுத்த அனுகூலமாக யிருக்கிறது.
இதன் அணு எண் 11,அணு நிறை 22.99 ,அடர்த்தி 970 கிகி /கமீ .உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 370.9 K,1156 K ஆகும். இது ஒரு கார உலோகமாகும். இதன் இணை திறன்(Valency) 1 ஆக உள்ளது .
Thursday, June 7, 2012
social awareness -Mind without fear
மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம்.
வில்மா ருடோல்ப் (Wilma Rudolph)
1940 ல் பிறந்து 54 ஆண்டுகள் வாழ்ந்த இவருடைய வாழ்க்கை நமெக்கெல்லாம் ஒரு பாடமாக இருக்கிறது.இவருடைய வாழ்க்கை வரலாற்றை படிப்பீர்களேயானால் நாம் நமக்குக் கிடைத்த மேலான வாழ்க்கையை எவ்வளவு வீணாக்கி விட்டோம் என்பதை உணர்வீர்கள் .
தகர்க்க முடியாத தடைகள் எல்லாவற்றையும் உடைத்தெறிந்து விட்டு முடியாததை முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர். உடல் ஊனமுற்றோர் பெரும்பாலும் மனச் சோர்வுற்று எதையாவது சாதிக்க வேண்டும் என்று துணிய மாட்டார்கள் . சில சமயங்களில் தவறான முடிவுகளை மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவார்கள் .உடல் ஊனமாக இருந்தாலும் இவர் தன்னை ஒரு மாற்றுத் திறனாளியாக வெளிப்படுத்திக் காட்டினார். அதற்காக அவர் வெகு இயல்பபாக எடுத்துக் கொண்ட முயற்சிகள் தவறான முடிவுகளை நாம் தவறுதலாக மேற்கொள்ளத் துணியும் போது சித்திக்கத் தூண்டுகின்றன. குறைப் பிரசவத்தில் பிறந்ததால் பிறக்கும் போதே எடை குறைவாகவும் , சரியான வளர்ச்சி யின்றியும் இருந்தார். 4 வயதில் போலியோவால் பாதிக்கப் பட்டு காலின் வலிமையை இழந்தார். நடக்கக் கூட முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். எல்லோரையும் போல பள்ளிக்குச் சென்று கல்வியும் கற்க முடியவில்லை. அவரின் தந்தை ரயில் நிலையத்தில் ஒரு கூலி தாய் ஒரு தாதி. போதிய வசதியின்மையால் முழுமையான சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியவில்லை. வலுவூட்டுவதற்காக கால்களில் இரும்பு வளையங்களைப் பொருத்தி இருந்தார்கள். அதனால் அதிகத் தூரம் நடப்பது கூடச் சிரமமாக இருந்தது. கால்கள் வளைந்திருப்பதைத் தடுப்பதற்காக கனமான ஷூ வேறு அணியவேண்டி இருந்தது .
ஒரு சமயம் அவருடைய மருத்துவர் .வில்மாவால் இனி நடக்கவே முடியாது என்று தெரிவித் து அவரால் என்ன இயலுமே அதைமட்டும் வீட்டில் இருந்து கொண்டு அம்மாவின் உதவியோடு செய்யலாம் என்றார். வீட்டிற்கு வந்தவுடன் அம்மா கேட்டாள் "வில்மா நீ என்ன செய்ய விரும்புகிறாய் ?"
அதற்கு வில்மா என்ன சொன்னால் தெரியுமா . "அம்மா நான் ஒரு ஓட்டப் பந்தைய வீராங்கனையாக விரும்பிகிறேன் " என்றாள்.போலியோவால் சுருக்கிப் போன கால்களுடன் இது இயலுமா என்று நாம் நகைக்கலாம் .ஆனால் அப்போது அவளுடைய அம்மா தந்த உற்சாகம் அவளுடைய தலை விதியையே மாற்றி அமைத்து விட்டது. உண்மைதான் ஒரே ஒரு வினாடி போதும் ,அதற்குள் வாழ்கையை முடித்துக் கொள்ளாலாம் என்ற எண்ணத்தை நிலைப்படுத்திக் கொள்ளலாம் அதுபோல வாழ்க்கையை மேம்படுத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தையும் வலுப்படுத்திக் கொள்ளலாம் எல்லாவற்றிற்கும் மனமே காரணமாயிருகிறது.மனம் உறுதியாக இருந்தால் எதுவும் சாத்தியமே . ஏனெனில் இரு வேறுபட்ட எண்ணங்களும் ஒரே மனதிலிருந்து தான் வெளிப்படுகின்றன
சரியாக நடக்கவே முடியாத வில்மா ஓடுவதற்கு பயிற்சி எடுத்துக் கொண்டார். தன்னுடைய 16 வது வயதில் மெல்போன்.நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாகக் கலந்து கொண்டார். அவருடைய மனம் தளராத முயற்சி அவருக்கு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தது அத்துடன் அவர் நின்று விடவில்லை. 1960 ல் ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 100 மீ .200 மீ ஓட்டம் ,4 x 100 மீ
தொடர் ஓட்டம் என மூன்று போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.
இது உலக சாதனையாகும் .இயற்கையே தனக்கு எதிராக இருந்தும் அதை எதிர்த்து வெற்றி வாகை சூடியவர் இந்த வில்மா . சின்னச் சின்ன த் தடைகளுக் கெல்லாம் சோர்ந்து போய் சும்மாவே இருக்கும் நமக்கு இவர் ஒரு உந்தற் காரணி. . .
வில்மாவின் மறக்க முடியாத பொன் மொழிகள் சில
Believe me, the reward is not so great without the struggle.
The trumph can’t be hard without the struggle
I believe in me more than anything in the world.
I don’t know why I run so fast, I just run.
Never underestimate the power of dreams and the influence of the human spirit.
Sometimes it takes years to really grasp what has happened to your life
Tuesday, June 5, 2012
Vinveliyil Ulaa
ஏறக்குறைய 80 விண்மீன்களடங்கிய வட்டாரம் ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப்பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும்.கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும். இதை நாய் விண்மீன் என்றே அழைப்பர். கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல் அதனால் இந்த வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு பிரகாசமான சீரியசும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது
சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள்.தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகச் சொல்லப் பயன்படுத்தப்பட்டது. வடமொழியில் சூரியனைச் சூர்யா என்பர் இது சீரியசிலிருந்து வருவிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. அரேபியர்கள் சீரியஸ்ஸை சுஹைல் என்றழைப்பார்கள் இதுவும் பிரகாசமான பொருட் களுக்கான பெயரடைச் சொல்லாகும். சீரியஸ்ஸை அரேபியர்கள் அல் சிரா (Al -shira ) என்றும் அழைப்பார்கள். சீரியசுக்கான கிரேக்க,ரோமன் எகிப்து மொழிப் பெயர்கள் எல்லாம் ஒரே மூலச் சொல்லிலிருந்து பிறந்தவை போலத் தோன்றுகின்றன.
சீரியசின் பெயர் எப்படி வந்தது என்பதற்கும் பலர் பலவிதமாகக் கருத்துக் கூறி வருகின்றனர். எகிப்தியர்களின் கடவுளானா ஓசிரிஸ் என்பதிலிருந்து இப் பெயர் வருவிக்கப் பட்டிருக்கலாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதற்கு சில வலுவான காரணங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள், பழங்காலத்தில் சீரியஸ் நைல் நதியின் விண்மீன் (Nile star )அல்லது ஐசிஸ் (Isis ) கடவுளின் விண்மீன் என மதிக்கப்பட்டது ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இந்த விண்மீன் அதிகாலைப் பொழுதில் தோன்றுவ தினால் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடப் போவதை முன்னறிவிப்பு செய்கிறது என்றும் இது விவசாயிகளுக்கு உதவி செய்வதாக இருக்கிறது என்றும் கூறுவார்.
எகிப்தியர்கள் சீரியஸ்ஸை நைல் நதியின் விண்மீனாக சிகோர் என்று பெயரிட்டுக் கடவுளாகத் தொழுதனர். அதனால் சீரியசின் பெயர் ஐசிஸியின் விண்மீன் எனப் புகழ் பெற்றிருந்தது. ஐசிஸ் என்ற பெண் கடவுள் எகிப்தியர்களின் முதன்மைக் கடவுளான ரா (Ra ) வின் மகளாகவும் ஓசிரிஸ் என்ற கடவுளின் மனைவியாகவும் கருதப்பட்டவள். கிருத்து பிறப்பிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சூரியன் கிழக்கில் உதிப்பதற்க்குச் சற்று முன்னதாக த் தோற்றம் தரும் சீரியஸ் விண்மீனின் விவரங்களை த் தொகுத்து வந்தனர். சீரியஸ் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25 ல் முதன் முதலாக சூரியன் உதிப்பதற்கு முன்னர் விண்ணில் தெரியும் .இதை ஐசிஸ் கடவுளின் உயிராகக் கருதினார்கள். டெண்டரா என்னுமிடத்தில் ஐசிஸ் ஹதோர் எனும் கோயில் சீரியஸ் எழும் திசைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அக் கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில் " ஐசிஸ் பெண் கடவுள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் இக் கோயிலின் மீது ஒழி வீசுவாள், அடிவானத்தில் அவளுடைய ஒளி அவளுடைய தந்தையான ராவின் ஒளியோடு ஒன்று கூடும் " என்று பொறிக்கப் பட்டுள்ளது. சீரியசைக் குறிப்பிடும் சுட்டுப் படமான நாய் , நைல் நதியின் பள்ளத்தாக்கு நெடுக சுவற்றில் பொறிக்கப் பட்டுள்ளது. எகிப்தியர்களின் பதிவுகளில் சீரியஸ் என்ற ஒரு விண்மீன் மட்டுமே முழுமையான விவரங்களுடன் காணப்படுகிறது
பழங்காலத்தில் சீரியஸ் கெட்டதை த் தரக்கூடிய ஒரு விண்மீன் என்று நம்பினார்கள். வட்டாரத்தைச் சுட்டெரிக்கும் நாய் விண்மீன் பூமியில், பஞ்சம்,பட்டினிச் சாவும்,கொள்ளை நோயையும் ஏற்படும் காலங்களில் துயரூட்டும் ஒளியால் விண்ணில் தோன்றுகிறது. என்று நம்பினார்கள்.ஜூலை,ஆகஸ்டு ,மாதங்களில் வருத்தும் கொடுமையான வெயில் ,சூரியனோடு சீரியசும் தோன்றுவதினால்ஏற்படுகிறது என்றும் கருதினார்கள்.இக் காலத்தில் நாய் வெறிபிடித்து அலைகிறது என்றும் புனைந்து சொன்னார்கள். உண்மையில் பூமியில் கோடை காலம் என்பது சீரியஸ் மற்றும் சூரியன் இவற்றின் கூட்டு முயற்சியால் விளைவதில்லை .இந்தியாவில் சீரியஸ் நல்லதைக் கட்டியங் கூறும் ஒரு விண்ணுருப்பாகக் கருதினார்கள் .கிருத்துவர்கள்,சீரியஸ் வரப்போகும் கிருஸ்மஸ்ஸை முன்னறிவுப்புச் செய்வதாகக் கூறினார்கள். புத்தாண்டு தினத்தில் சீரியஸ் இரவு நேர வானத்தில் தலைமை விண்மீனாகப் பிரகாசித்து,மிகச் சரியாக நடுச் சாமத்தில் விண்ணில் உச்சத்தை எட்டுகிறது.
Vethith thanimangal-Chemistry
வெற்றிட மின்னிறக்க குழாயில்,நியான்,சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. எல்லா மந்த வளிமங்களிலும், நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த அனுகூலமிக்கதாய் இருக்கிறது.
இடிதாங்கி ,உயர் மின்னழுத்தம் காட்டி (indicator ) தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில்
நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது.இதில் நியானும் ஹீலியமும் 1:10
என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.முதலில் ஹீலியம்
மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதிகிளர்ச்சியுறுகிறது
இது பின்னர் மீட்ச்சியிலா(inelastic)மோதலினால் நியானுக்கு கிளர்ச்சி யாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும் , ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால்,ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும் ,முப்பரிமான ஒளிப்படப் பதிவுகளுக்கும் (holograms) பயன்படுகிறது.
நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கன மிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக (refrigerants) உள்ளது. நியானின் குளிரூட்டுந்த் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது )
Sunday, June 3, 2012
Social awareness-Mind without fear
வகுப்பறையில் குருவாக ,கல்விக் கூட வளாகத்தில் காப்பாளராக,வெளியில் மூத்த நண்பனாக,மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமாக,பள்ளிவிழாக்களின் போது நிர்வாகியாக ,ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளனாக ,மேடையில் சொற்பொழிவாளனாக பிரச்சனைக்கெல்லாம் சரியான தீர்வாக- ஓர் ஆசிரியன் இப்படி பன்முகத் தோற்றமுள்ளவனாக இருக்கின்றான்.இன்றைய மாணவர் சமுதாயம் ஆசிரியர்களிடமிருந்து வேறொன்றையும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது ..உங்களுக்காக, உங்கள் நலனுக்காக கல்வி சார்ந்த தோற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முகத்தை நாங்கள் பெற்றுள்ளோம் .ஆம், அதுதான் மாணவர் மன நலங்காப்போன் (Emotional health animator) என்ற பணி.
சில சமயங்களில் நீங்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் ,யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்வதால் தொடரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றீர்கள் உங்கள் மனதிற்கு தொடர்ந்து வலியைத் தந்து கொண்டிருக்கும் அந்தப் பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வாக இருக்கவே முடியாது. உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை, உங்கள் உயிரின் மதிப்பு தெரியவில்லை.தவறான எண்ணங்களால் தவறான முடிவை த்தான் தரமுடியும் மாற்றி யோசிக்கத் தெரியாததால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக உங்களையே நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்கள்
உங்கள் மன வலியை நாங்கள் உணருகின்றோம். அது தரும் வலியால் நீங்கள் படும் துயரத்திற்கு தக்க மருந்தாகும் ஆறுதல் வார்த்தைகள் எங்களிடம் நிறையவே உண்டு .இந்த வார்த்தைகள் சோர்ந்த மனதை துள்ளி எழச் செய்யும்.கொதிக்கும் குருதியை குளிரச் செய்யும்,தறி
கேட்டு ஓடும் எண்ணங்களை வசப்படுத்தி கலங்கரை விளக்காய் வழிகாட்டும்
உங்கள் உயிரின் மதிப்பை நாங்கள் அறிவோம் .மனிதர்கள் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மதிப்பு கொண்டிருக்கலாம் ஆனால் இறைவனுடைய படைப்பில் எல்லா உயிர்களுக்கும் ஒரே மதிப்புத்தான். நீங்கள் மற்றவர்களை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்களில்லை.
ஒவ்வொருவரும் தனக்குத் தானே உதவிக் கொள்ள பல உறுப்புக்களை இறைவன் அளித்திருகின்றான் வாழும் காலத்தில் எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் பெறுவதற்குத் தேவையான கருவிகள் அனைத்தையும் மனிதன் பிறக்கும் போதே அளித்து விடுகிறார்.இவற்றை வைத்துக் கொண்டு வாழ முடியாவிட்டால் அவனுக்கு அவன் மீதே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் .முதலில் உங்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் சூரிய ஒளியில் சுருங்கிய பனித் துளி போல மறைந்து போகும்
நீங்கள் ஆஸ்திரேலியரான நிக்கின் (Nick Vujicic) கதையைக் கேட்டால் நான் சொல்வதை நம்புவீர்கள் .இவர் பிறவி ஊனம் Tetra amelia syndrome என்ற கோளாறால் அவருக்கு இரண்டு கைகளும் இல்லை ,இரண்டு கால்களும் இல்லை சிறு குழந்தையாக இருந்த போது மனதளவிலும் , உடலளவிலும் உணர்வளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டார் ஆனால் அவர் வளர்த்துக் கொண்டுள்ள சுயமதிப்பால் இந்தத் தடைகளை யெல்லாம் தகர்த்தெரிந்து விட்டார் .
முயன்று எல்லோரும் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடங்கினார், எனினும் சக மாணவர்களின் கேலிப் பேச்சால் மனதளவில் சோர்வுற்றார் . மிகச் சரியான முடிவு எப்போதும் கண நேரத்தில் விளைவதில்லை..தற்காலியமான பிரச்சனைக்கு தற்கொலை ஒரு நிரந்தமான தீர்வு என எல்லோரையும் போல நினைத்து நிக் தன்னுடைய 8 வது வயதில் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கின்றார்.இந்த தவறான எண்ணம் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. 10 வயதிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தார். எனினும் பெற்றோர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பு அவரை அப்படிச் செய்யவிடாமல் தடுத்தது. கையும் காலும் வளர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். ஊனமாய் இருந்தவர் அப்போது முதற்கொண்டு மாற்றுத் திறனாளியாக மாறினார். உடல் ஊனம் நம்மைப் பாதிப்பதில்லை ஆனால் மன ஊனமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொண்டார். உடல் ஊனமுற்றோர் கூட வாழ்கையில் சாதிக்க முடியும் என்பதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்ட பின்னர் அவருடைய முன்னேற்றம் பெரிதும் முடுக்கப் பட்டது.
ஒரு காலில் சூம்பிப் போயிருந்த இரு விரல்களைக் கொண்டு எழுதும் முறையைக் கற்றுக் கொண்டார். மற்றொரு காலால் பக்கங்களைப் புரட்டவும் .கம்பியூட்டரை இயக்கவும் ,இசைக் கருவிகளை வாசிக்கவும், தனக்கு வேண்டிய உதவிகளைத் தானே செய்து கொள்ளவும் ,போன் பேசவும் பழகிக் கொண்டார். மனமிருந்தால் எப்போதும் மார்க்கமுண்டு என்ற வாழ்வியல் உண்மைக்கு அவர் ஓர் உதாரணமாக விளங்கினார். அவருடைய அசாத்தியமான திறமைகளைக் கண்டு வகுப்பில் மாணவர் தலைவராக நியமிக்கப் பட்டார் அப்போது சோர்வுற்ற மாணவர்களுக்கு ஞான உபதேசம் , நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டுதல், ஊனமுற்றோர் நலக் கூட்டம் என அடுக்கடுக்காக முயற்ச்சிகளை மேற்கொண்டார் தன்னுடைய 17 வது வயதில் "life without limb " என்ற அமைப்பின் மூலம் மக்களை உற்சாகப் படுத்தும் சொற்பொழிவுகளை வழங்கினார். 24 நாடுகளில் நூற்றுக் கணக்கான சொற்பொழிவு மூலம் 3 -4 மில்லியன் ரசிகர்களை இன்றைக்குப் பெற்றுள்ளார். குறும்படங்களை எடுத்து மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
இரண்டு கையும் காலும் இல்லாமல் ஒருவர் தன் வாழ்கையில் இவ்வளவு சாதித்திருக்கும் போது நம்மால் முடியாதா என்ன ? ஊனம் உடலில் இருக்கலாம் ஆனால் மனதில் இருக்கவே கூடாது. ஊனமான மனமே தவறான முடிவுகளுக்கு முதற் காரணமாக அமைகிறது .
தொடரும் ...
Saturday, June 2, 2012
Vethith thanimangal-Chemistry
social awareness- Mind without fear
Friday, June 1, 2012
eluthatha kaditham
Subscribe to:
Comments (Atom)





