எழுதாத கடிதம்
இன்று தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 520 யையும் தாண்டி அதிகரித்து வருகிறது மெக்கானிகல்,சிவில்,மின்னணு தகவல் தொழிநுட்பம்,மின்னியல் மற்றும் மின்னணுவியல்,கணினி போன்ற பாடப் பிரிவுகள் பெரும்பாலும் அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ளன.ஒரு சில கல்லூரிகளில் ஒரே பாடப் பிரிவில் இரு வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்கின்றனர்.எப்படி இருந்த போதிலும் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் குறைந்தது 32000 மாணவர்கள் பொறியியல் பட்டதாரிகளாக உருவாக்கப் பட்டு வருகின்றார்கள்.இவர்களில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே பணி புரிவதற்கான திறன்களைப் பெற்றுத் வேலைக்குத் தகுதியுள்ளவர்களாக இருக்கின்றார்கள்.இதற்குக் காரணம் என்ன? மாணவர்களுக்கு அறிவும்(Knowledge ) அறிவைச் சரியான நேரத்தில் சரியாகப் பயன் படுத்திக் கொள்ள(Intelligence ) தெரியவும் வேண்டும்.பொதுவாக இந்தியக் கல்வி முறையில் கல்வியை மட்டுமே கற்றுக் கொடுப்பார்கள் வேலை செய்வதற்கான தகுதிகளை வளர்க்கப் பயிற்சி அளிக்க மாட்டார்கள் .ஆனால் இன்றைக்கு போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள கல்வியோடு இத்தகைய பயிற்சிகளையும் அளித்துவருகின்றது Spoken English,Soft Skill,Professional Skill,Computer knowledge with computing skill,value added activities போன்ற பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அப்படியிருந்தும் நல்ல பலன் கிட்டவில்லை என்றே சொல்லவேண்டும்.
மாணவர்களைச் சேர்க்கும் போட்டாப் போட்டியில் ஒவ்வொரு கல்லூரியும் கல்வித் தரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை புறம்தள்ளிவிட்டு மாணவர்களை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. கல்விக் கட்டணச் சலுகை,இலவச லாப்டாப்,இலவச புத்தகங்கள்,சீருடைகள்,மதிய உணவு,பஸ் போக்குவரத்து தேர்வில் வாங்கும் மதிப்பெண்ணுக்கு ஏற்ப ஊக்கத் தொகை என நம்ப முடியாத எல்லை வரை .
தான் ஒரு பொறிஞனாக வர வேண்டும் என்ற கனவு மெய்ப்பட வேண்டுமானால் அது எண்ணத்திற்கு கருவாகி,இடைவிடாது ஒவ்வொரு நிமிடமும் வளர்ந்து,காட்டும் அக்கறையால் முழு உருவம் பெற்று சமுதாயத்திற்கு நலம் பயக்கும் செயல்களாக வெளிப்பட வேண்டும்.நோக்கமும் செயல் திட்டமும் இல்லாத எல்லா மாணவர்களையும் வலுக்கட்டாயமாகப் பொறியியல் படிக்கச் சேர்க்கும் போது இதனால் சொல்லொண்ணாத் துயரம் அடைவது ஆசிரியர்களே.
நோஞ்சான் மாடு பூட்டி பந்தையத்தில் வெற்றி பெறமுடியுமா?கரும்புச் சக்கையைப் பிழிந்து சக்கரையை எடுக்க முடியுமா ? அஸ்த்திவாரமே இல்லாமல் பல அடுக்கு மாடி கட்ட முடியுமா ? அடிப்படையான மொழியறிவு இல்லாமல் உயர் கல்வி கற்க முடியுமா? விதையில்லாமல் செடியா ,கரு இல்லாமல் உயிரா?
கல்வியின் அருமை ,திறமை வளர்ப்பின் தேவை இவற்றைப் பற்றி ஏதும் அறியாமல் ,தினம் தினம் கல்லூரிக்கு வந்து போவதால் மட்டுமே தனக்கு B.E பட்டமும் அதிகமான சம்பளத்தில் நல்ல வேலையும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் மாணவர்களாக மாறி வருகின்றார்கள் .
வர்த்தகமாகி விட்ட பொறியியல் கல்வியில்,தங்களை நிலைப் படுத்திக் கொள்ள ஒவ்வொரு கல்லூரியும் மாணவர்களின் தேர்ச்சி வீதத்தை உயர்த்திக் காட்டவும்,வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபாடு காட்டி வருகிறது .தேர்வில் தேர்ச்சி வீதம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக மாட்டு வண்டிப் பந்தையத்தில் தார்க்குச்சியால் குத்தப் பட்டு ஓடும் மாடு போல ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ் நிலை உருவாக்கி வருகிறது.
குருடனுக்கு முன் ஓவியம்,செவிடனுக்கு முன் இன்னிசை கீதம், என்பது எப்படி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லையோ,அது போல கற்றுக் கொள்ளும் அடிப்படை நோக்கமில்லாத மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதும்.ஆசிரியர்களின் முயற்சி கடலில் பெய்த மழை போல வீணாகிவிடுகிறது.
பொறியியல் படிக்கப் போகும் மாணவர்களே ,உங்களுக்கு உண்மையிலேயே அதில் விருப்பம் இருக்குமானால் உங்களுக்கு கற்பதும் எங்களுக்கு கற்றுக் கொடுப்பதும் எளிதாகும். அப்படி இல்லாத போது உங்களுக்கு எதில் உண்மையான விருப்பம் இருக்கின்றதோ அதில் ஈடுப்பாடு காட்டுங்கள் நிச்சியமாக அதில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள் இந்த ஆசிரியர்களை கற்பிக்கும் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யும் நிலைக்குத் தள்ளி விடாதீர்கள் .
No comments:
Post a Comment