மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம்
வில்மாவின் கதையைக் கேட்டீர்களா? சாதாரணமாக வாழ்வதற்குக் கூட எந்த நேர்மறையான அனுகூலங்களும் இல்லாமலேயே வில்மாவால் இமாலய சாதனைகளைச் சாதிக்க முடியும் போது கூடுதல் வாய்ப்புக்களையும் வசதிகளையும் பெற்றிருக்கும் நம்மால் ஏன் முடியாது.வில்மா உடல் உறுப்புக்களின் கோளாறால் தன்னால் எதுவும் செய்யமுடியாது என்று முடிவு செய்து வாழ்க்கை முழுக்க சும்மாவே இருக்க விரும்பவில்லை வாழ்க்கையில் எதை இழந்தாளோ அதை மீட்டுப் பெறமுடியும் என்ற நம்பிக்கையை உண்மையாகவும் உறுதியாகவும் வளர்த்துக் கொண்டாள்.எல்லோரையும் போல தானும் வாழ வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுவடைந்து அதுவே மனதில் நிலைப்பட்டு சுய உந்துதலுக்கு வலிமையான உந்தற் காரணியாக அமைந்துவிட்டது .
வில்மா வீட்டிலிருந்த படியே படித்து பட்டங்கள் வாங்கி ஒரு ஆசிரியராகி இருக்கலாம்.அது அவளால் இயலக்கூடியதே என்றாலும் தனக்கு எது பலவீனமாக அமைந்ததோ அதையே மக்களுக்கு தன்னுடைய பலமாகக் காட்ட உறுதி கொண்டாள்.அந்த எண்ணத்தின் வெளிப்பாடே அவள் வித்தியாசமாக எடுத்த முடிவாகும் கால்கள் வலுவிழந்திருந்தாலும் ஓட்டப் பந்தைய வீராங்கனையாக தன்னை உலகத்தாருக்கு வெளிப்படுத்திக் காட்ட வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தாளோ அப்போதே அவள் நம் எல்லோரிடமிருந்தும் வேறுபட்டு நின்றாள்.
மிக உயர்வாக எண்ணுவதும் எண்ணியதைச் சொல்லுவதும் எளிது ஆனால் எண்ணியதை எண்ணியவாறு முடிப்பது எளிதில்லை. ஏனெனில் எண்ணம் என்பது கணப் பொழுது முயற்சி.அதற்கு உருவம் கொடுப்பது என்பது நாள் கணக்கில், மாதக் கணக்கில் ஏன் சில சமயங்களில் வருடக் கணக்கில் கூட ஆகலாம் முடிந்த வரை போராடுவது கூட இல்லை இது முடிக்கும் வரை போராடுவது.எண்ணத்தில் திண்மை இல்லையென்றால் அது சிதைந்து அழிந்து போகும்,சில நேரங்களில் தடம் மாறிப் போகும்.வில்மாவின் திண்மையான எண்ணம் அவள் வாழ்க்கையில் வசந்தம் வீசுவதற்குக் காரணமாக இருந்தது .
உறங்கும் போது வருவதல்ல கனவு,உன்னை உறங்க விடமால் செய்வதே கனவு என்று முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறுவார்கள் வில்மாவின் வாழ்க்கை இந்த வாக்கியத்திற்கு சரியான விளக்கம் தரும் ஒரு விளக்கவுரையாக இருக்கிறது
வில்மா தன் எண்ணத்தை மெய்ப்படுத்திக் காட்ட கடிய முயற்சிகளை மேற்கொண்டார்.விடாத பயிற்சிகள் மூலம் முயற்சிகள் முயற்சி இல்லாமல் வரும் ஏதும் உனக்கு பெருமை தருவதாக இருக்காது என்றும் எந்த வெற்றியும் அப்படி வருவதில்லை என்றும் அவர் கூறுவார்
வில்மா தன் உடல் குறைபாட்டை நினைத்து நினைத்து மனச் சோர்வுற்றுதன் உயிரை மாய்த்துக் கொள்ள ஒருபோதும் எண்ணியதில்லை.அவள் உடல் குறைப்பாட்டுடனும் வெற்றிகரமாக வாழ்ந்து காட்டினாள்.உடல் குறைபாடே இல்லாதவர்கள் எதற்கு மனச் சோர்வுற்று தற்கொலையைத் தேடுகிறார்கள்.உலக மேடையில் அவர்களுக்கெல்லாம் நிஜமான எடுத்துக் காட்டு வேண்டும் என்பதற்குத் தான் இறைவன் அவளை அப்படிப் படைத்தானோ .
தற்கொலைக்குத் துணிபவர்கள் வில்மாவின் வாழ்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்.அப்படிப் படித்தால் நிச்சியம் வெட்கப்பட்டு மனம் மாறுவார்கள்.வில்மா இன்றைக்கு நம்மிடையே இல்லை ஆனால் அசாத்தியமான சூழ்நிலையில் அவள் காட்டிய அசாத்தியமான முயற்சிகள் சாகாத சமுதாயத்திற்கு
நிரந்தரமான ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்பதற்காக அமெரிக்கா அவள் படம் கொண்ட ஒரு தபால் தலையை வெளியிட்டது அவள் விட்டுச் சென்ற வாழ்வியல் எண்ணங்கள் நம் உள்ளங்களிலும் மலரட்டுமே .
No comments:
Post a Comment