Tuesday, June 19, 2012

Social awareness- Mind without fear

மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம் தாத்தா,பாட்டி சொன்ன கதை ,பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் விவரித்த கதை.பாடப் புத்தகத்தில் படத்தோடு படித்து மகிழ்ந்த கதை.கதைகள் வெறும் கற்பனை என்றாலும் அதில் வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துகளும் உட்பொதிந்திருக்கும்.ஒரு கருத்தை கதையாகக் கூறும் போது கதையை மனது எளிதாக உள்வாங்கிக் கொள்கிறது.கருத்து சிந்தனையைத் தீண்டா விட்டாலும் கதை நீண்ட காலமானாலும் மறக்கப் படுவதில்லை .அதனால் என்றைக்காவது ஒருநாள் கதையை மனம் அசை போடும் போது அது நாள் வரை மறைந்திருந்த கருத்துகள் பிரகாசமாய்ப் பளிச்சிடுகின்றன.கதையை வாழ்க்கையோடு தொடர்பு படுத்திப் பார்க்காமல் வெறும் கதையாகவே படித்து மகிழும்போது அது கூறும் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளத் தவறிவிடுகிறோம். இந்தத் தவறுதல் வாழ்க்கை முழுதும் தொடர்வதை அனுமதிப்பதால்,பல சமயங்களில் நாம் சரியானதை சரியான படித் தேர்வு செய்யத் தவறி விடுகிறோம்.இதற்கு சின்னக் குழந்தையாய் இருந்த போது நாம் கேட்டு மகிழ்ந்த ஆமை-முயல் கதையே ஓர் எடுத்துக்காட்டு. ஆமைக்கும் முயலுக்கும் நடந்தது ஓர் ஓட்டப் பந்தையம்.முயல் முதலில் விரைந்து ஓடி முந்திச் சென்றாலும் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் தொடர்ந்து ஓடி,கடக்கும் தொலைவைக் குறிப்பிட்ட காலத்தில் கடந்த ஆமையை வெற்றி கொள்ள முடியவில்லை.இக் கதை ஒரு திரைப் படம் போல உங்கள் சிந்தனையில் ஓடினால் அது சொல்லும் கருத்துகள் பலவாகும் அது உண்மையில் அனைத்து வயது மாணவர்களுக்கும் கூட சுய தூண்டுதலாக இருக்கும். ஆமை மெதுவாக நகர்ந்து சென்றாலும்,வெற்றி பெறவேண்டும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து தொய்வின்றி போட்டியில் பங்கேற்றது.இதை ஆங்கிலத்தில்'slow and steady' என்பர். முயல் இடையிடையே ஓய்வெடுத்துக் கொண்டதால் குறிப்பிட்ட கால நெடுக்கைக்குள் வெற்றி இலக்கை ஆமைக்கு முன்னதாக எட்ட முடியவில்லை .செய்யும் செயலை விரைந்து செய்யும் போது உடலளவில் களைப்பும் மனதளவில் தடுமாற்றமும் ஏற்படலாம் .அவை தோல்விக்கு வழி வகுக்கும் என்பதால் செய்வது எதுவானாலும் அதை மெதுவாகவும் தொய்வின்றியும் செய்ய வேண்டும் என்ற வாழ்வியல் கருத்தை இது எடுத்தியம்புகிறது. விரைந்து ஓடும் முயல் மெதுவாக நகர்ந்து செல்லும் ஆமையைக் கூட வெற்றி கொள்ள முடியாது தோல்வி யடைந்தது. இது வாழ்க்கைப் போராட்டத்தில் எதுவும் நடக்கலாம் என்பதைத் தெரிவிக்கிறது சரியாக முன் திட்டமிட்டு நம்பிக்கையோடு செயல்பட்டால் முடியாதைக் கூட முடிக்கலாம்.அப்படிச் செய்தது ஆமை.சரியாகத் திட்டமிடாவிட்டால் முடிக்கக் கூடியது கூட முடியாது போகலாம்.அப்படி நிகழ்ந்தது முயலுக்கு. முடிவதும், முடியாததும் ஒரு மனதின் எண்ணத்தில்தான் இருக்கின்றன. ஒன்றிலிருந்து ஒன்றை எட்டுவது எளிது என்ற கருத்தையையும் இக் கதை உறைபொருளாகக் கொண்டுள்ளது . இலக்கு நோக்கிய பயணமில்லாத முயல் இலக்கை மட்டுமே நோக்கிப் பயணித்த ஆமையிடம் தோல்விகண்டது.எல்லாத் திசைகளிலும் நடந்து சென்றால் ஒரு குறிப்பிட்ட திசையில் விளையும் இடப்பெயர்ச்சி குறைவாகிப் போகும்.இலக்கு என்பது ஒன்றை மட்டுமே நோக்கிய பயணம் .இதில் எண்ணச் சிதறலோ செயலில் சிறுமையோ இருக்கக் கூடாது. நம்பிக்கையோடு ஒரு செயலைத் தொடங்கிய பின் மாற்று எண்ணம் கொண்டால் அது பெரிதளவில் மனச்சோர்வைத் தரும்.திடமான எண்ணமே மன உறுதியை வெளிப்படுத்தும். ஒரு செயல் முடிக்கப்படாமல் போவதற்கும்.வெற்றிகரமாக முடிக்கப்படுவதற்கும் இதுவே காரணமாகின்றது .ஒரு செயலைச் செய்யும் போது முடிக்கும் வரை ஓய்வெடுக்கக் கூடாது என்பது ஆமைக்குப் புரிந்த அளவுக்கு முயலுக்குத் தெரியவில்லை .முடிந்த வரை செய்தால் வெற்றி நிச்சிய மில்லை, முடிக்கும் வரை செய்வதே வெற்றி என்ற கருத்தையும் கூறுவது இக் கதையாகும் மீண்டும் இதே போட்டி நடந்தால் முன்பு செய்த அதே தவறை திரும்பச் செய்யாது முயல் ஜெயித்துக் காட்டலாம்.உலக கிரிக்கெட் கோப்பை வாங்கிய ஆஸ்திரேலியா,இந்தியா,ஸ்ரீ லங்கா போன்ற நாடுகள் கூட பங்களா தேஷ் போன்ற வலிமை குன்றிய குழுவிடம் தோற்றுப் போயிருக்கின்றன.பிற்பாடு ஜெயித்தும் இருக்கின்றன. தோல்வியும், வெற்றியும் இறுதி முடிவில்லை அவை மாறி மாறி வரும். .கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுப் போனோமே என்று முயல் மனம் வெறுத்து தன்னுயிரை மாய்த்துக் கொள்ளத் துணிய வில்லை.தோல்வியால் துவண்டு போய் ஒருபோதும் தவறான முடிவெடுத்து விடாதீர்கள் என்ற கருத்தை எண்ணத்தில் பதிப்பது இக் கதை. .நாம் எப்படி இருக்க வேண்டும் என்றால் இக் கதையில் வரும் ஆமை போல நினைத்து நிஜமான முயல் போலச் செயல் படவேண்டும் .

No comments:

Post a Comment