விண் வெளியில் உலா
சிரியஸின் நிறை சூரியனின் நிறையைப் போல 2 மடங்கிற்கும் சற்று கூடுதலாக இருப்பினும் ,அதிக அளவில் ஆற்றலை உமிழ்வதால் ஆற்றல் மூலங்களை மிக விரைவாக சூரியன் செலவிடும் வீதத்தை விட 20 மடங்கு கூடுதலாக இழந்து வருகிறது. அதனால் சூரியனின் வாழ்வில் 10 ல் 1 பங்கு மட்டுமே இது நிலைத்திருக்க வல்லது. நமது சூரியன் 4 .5 ஆயிரம் மில்லியன் ஆண்டுகள் வயதானது ,அதன் வாழ்வில் ஏறக்குறைய பாதியை மட்டுமே கடந்திருக்கிறது. சிரியஸ் இதற்கு மாறாக ஐநூறு மில்லியன் ஆண்டுகள் வாழும் எனக் கூறலாம்.
சிரியஸைப் பற்றி மற்றொரு புதிர் அதன் நிறஜாலம் பற்றியது .பழங் காலத்தில் மேற்கொண்ட பதிவுகளில் இதன் நிறம் வெவ்வேறாகக் கூறப்பட்டுள்ளது .இது தாமஸ் பார்கர் என்ற வானவியலாரால் 1760 ல் முதன் முதலாகக் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது .தாலமி,செனிகா ,ஹோரோஸ் மற்றும் சிசரோ போன்ற பழங் காலத்திய வானவியலார்கள் சிரியஸ்ஸை ஒரு செந்நிற விண்மீன் எனக் குறிப்பிட்டுள்ளனர். 140 AD யில் தாலமி சிரியஸ்ஸை ஆரஞ்சு மற்றும் செந்நிறமுடைய ஆர்க்டூரஸ் ,அல்டிபாரன் ,பெடல்ஜியூஸ் போன்ற விண்மீன்களின் தொகுப்போடு சேர்த்திருந்தார். பாபிலோனியர்கள் சிரியஸ் ,செம்புத் தகடு போல பளபளப் பதாகக் குறிப்பிட்டுள்ளனர். அதற்குப் பின் வந்த சிசரோ மற்றும் ஹோரோஸ் போன்றவர்கள் இவ் விண்மீனை ' செந்நிற நாய் விண்மீன் ' என்றே வர்ணித்தனர். .
நீரோ மன்னனின் முக்கிய ஆலோசகராக விளங்கிய செனிகா என்பார் சிரியஸ் ,நமது செவ்வாய்க் கோளைவிடச் சிவப்பானது என்று கூறியுள்ளார். ஆனால் பிற்பாடு சிரியஸ்ஸை ஆராய்ந்தவர்கள் அது மஞ்சள் கலந்த வெண்ணிறமானது என்று தெரிவித்துள்ளனர்.
கிருத்து பிறப்பிற்குப் பின் வந்த அல்சூபி என்ற அரேபிய வானவியலார்,சிரியஸ்ஸை செந்நிற விண்மீன் வகைக்குள் அடக்கவில்லை. நவீன வானவியலார் பலரும் ,சிரியசின் செந்நிறத் தன்மை என்பது தவறாகக் கற்பிக்கப்பட்டு விட்டது என்று கூறினாலும் ,கண்மூடித் தனமாக பழங் காலத்திய பதிவுகள் முழுதும் தவறானவை என்று கூறுவதும் தவறே யாகும் .சுமார் 800 ஆண்டுகளில் சிரியஸ் தன் நிறத்தை மாற்றிக் கொண்டது என்றால் அதற்கான காரணம் வேண்டும்.தாலமியால் வர்ணிக்கப் பட்ட செந்நிற வகை விண்மீனானசிரியஸ் இன்று வெண் மஞ்சள் நிறங் கொண்டு விளங்குகிறது என்பதை மறுக்க முடியாது. ஏனெனில் அந்த விண்மீனின் இன்றைய நிலையும் அதுதான் என்பதால் அதை மீண்டும் மீண்டும் சோதித்து உறுதி செய்து கொள்ள முடியும்.
சிரியஸ் போன்ற விண்மீன் பல நூறு மில்லியன் ஆண்டுகளில் தன் தோற்றத்தையும் ,புற வெப்ப நிலையையும் ,நிறத்தையும் கூட மாற்றிக் கொள்ளலாம் விண்மீனின் பரிணாம வளர்ச்சி இதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது. இது குறுகிய கால நெடுக்கையில் நிகழ்வதற்கான வாய்ப்பில்லை .இதன் பிறகு சிரியஸ் விண்மீனை நுணுகி ஆராய்ந்தனர். அப்போது சிரியஸ் ஒரே இடத்தில் நிலையாக இல்லாது சற்று இடம் பெயர்ந்து
மாறி மாறித் தோன்றியது தெரிய வந்தது. அருகில் ஏதாவதொரு விண்மீன் இருந்தால் ,ஒரு சில ஆண்டு கால நெடுக்கையில் குறிப்பிடும் படியான இடப்பெயர்வை ஏற்படுத்தும் .விண் மீனின் இவ் வியக்கத்தை தனித்த தன்னியக்கம் (Proper motion ) என்பர். .பொதுவாக ஒரு விண்மீனின் தனித்ட தன்னியக்கம் மிகவும் நுண்ணிய அளவினதாக (பெரும்பாலான விண் மீன்களுக்கு இது 1 டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்காக இருக்கும்) இருக்கும். மிக அருகில் இருந்தால் அதன் தனித்த தன்னியக்கம் ஓரளவு அதிகமாக இருக்குமெனலாம். ஜெர்மனி நாட்டு வானவியலாரான பிரட்ரிக் வில் ஹெல்ம் பெசல் என்பார் ஒரு விண்மீனின் அமைவிடத்தை அறிவதற்கான வழி முறையைத் தெரிவித்தார் .அதன் மூலம் பல ஆயிரக் கணக்கான தனித்த விண்மீன்களின் அமைவிடத்தை த் துல்லியமாகக் கண்டறிந்தார்..1834 ல் பெசல் சிரியசின் தனித்த தன்னியக்கத்தை ஆராய்ந்து சிரியஸ் ஓராண்டு காலத்தில் 1 .3 வினாடி கோண விலக்கம் பெறுவதாக மதிப்பிட்டார்.சிரியஸ் பற்றி மற்றொரு உண்மையையும் பெசல் கண்டறிந்தார், பெரும்பாலான விண்மீன்கள் ஒரு நேர் கோட்டிலான தனித்த தன்னியக்கத்தைப் பெற்றிருக்க ,சிரியஸ் மட்டும் அலை போன்றதொரு இயக்கப் பாதையில் இயங்குவதாகக் கண்டார் .இவர் கானிஸ் மைனரில் உள்ள பிரகாசமிக்க விண்மீனான புரோசியானிலும் இது போன்ற சீர் குலைவுற்ற இயக்கத்தையும் கண்டறிந்தார் .
No comments:
Post a Comment