Saturday, June 2, 2012

Vethith thanimangal-Chemistry

புளூரின்(பயன்கள்) சோடியம் புளூரைடு வடிவில் புளூரினை பொது நீர் விநியோகத்தில் கலக்கின்றார்கள்.இது பற்சிதைவிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.ஹைட்ரோக்சி அபடைட்(hyroxyapatite) என்ற கடினமான தாதுப்பொருளால் ஆன மேற்புறப்பகுதியால் பாதுகாக்கப்படுகின்றன.இது நீரில் கரைவதில்லை ஆனால் வாயிலுள்ளநுண்கிருமிகள் உணவிலுள்ள கார்போ ஹைட்ரேட்டுடன் கூடி மென்அமிலங்களை உற்பத்தி செய்கிறது.இது பல்லோட்டிலுள்ள ஹைட்ராக்சி அபடைட்டைச் சிதைக்கிறது.தொடர்ந்து நிகழும் போது பற்சிதைவு ஏற்படுகிறது.உடலின் தற்காப்பு முறையினால் இச் சிதைவு புதுப்பித்தல் மூலம் சரி செய்யப்படுகின்றது.இப் புனராக்கம் சோடியம் புளூரைடு முன்னிலையில் புளூரோ அபடைட் மூலம் நடைபெறுகிறது.புளூரோ அபடைட்,ஹைட்ராக்சி அபடைட் போல பாதிப்பதில்லை.இதனால் பற்பசை உற்பத்தியாளர்கள் சோடியம் புளூரைடைஉற்பத்திப் பொருளுடன் சேர்க்கின்றார்கள் .
ஹைட்ரஜன் புளூரைடு தொழிற்சாலையில் ஒரு முக்கியமான மூலப் பொருளாக உள்ளது.பல கரிம,கனிம வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் வழிமுறையில் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது,அலுமினியத்தை மின்னார் பகுப்பு மூலம் பிரித்தெடுக்கும் வழிமுறையில் சோடியம் அலுமினியம் புளூரைடு மின்னார் பகுபொருளாக உள்ளது.ஹைட்ரோ புளூரிக் அமிலம் உலோகங்களைத் தூய்மைப்படுத்துவதற்கும்,பளபளப்பூட்டுவதற்கும் கண்ணாடியில் அரிப்பால் மென்கறையை(Etching) ஏற்படுத்துவதற்கும் இது பெருமளவில் பயன்படுகிறது.போரான் டிரை புளூரைடு,ஆண்டிமணி டிரை புளூரைடு போன்றவை ஹைட்ரஜன் புளூரைடு போல கரிம வினைகளில் வினையூக்கியாகச் செயல்படுகின்றன.புளூரின் ஊட்டியாக கோபால்ட் டிரை புளூரைடு ,குளோரின்டிரை புளூரைடு பயன்படுகின்றன. கந்தக ஹெக்சா புளூரைடு (sulfur hexafluoride) வளிம நிலையில் மின் கடத்தாப் பொருளாகும். மினூட்டமற்ற நியூட்ரானை இனமறிவது சற்று கடினம்.இதற்கு போரான் ட்ரை புளூரைடு வளிமம் பயன்தருகிறது. கெய்கர் முல்லர் எண்ணியை இவ்வளிமத்தால் நிரப்பி ,நியூட்ரானை உட்செலுத்த,இது போரானால் உட்கவரப்பட்டு ஆல்பாக் கதிர்களை உமிழ்கிறது. இதை இனமறிந்து இதற்குக் காரணமான நியூட்ரானை அறிய முடிகிறது.திண்ம நிலையில் போரானை இதற்காகப் பயன் படுத்துவதில் சில தொலில்நுட்பத் தடைகள் உள்ளன. அணு உலை எரி பொருளான செறிவூட்டப்பட்ட உரேனியத்தை,வளிம நிலையில் ஊடுபரவல் வழி முறை மூலம் பெறுகின்றார்கள். உரேனியம் ஹெக்சா புளூரைடு வளிமத்தில் U-235,U-238 யை விட விரைவாக ஊடு பரவுகிறது.இப் பண்பு எரி பொருளில் U-235 ன் செறிவை அதிகரிக்கப் பயன்படுகிறது.
புளூரினைக் கொண்டு பல்மமயமாக்கம் (Polymerisation) மூலம் பலம டெட்ரா புளூரோ எதிலின் (PTFE) என்ற பல்மம் உருவாக்கப் பட்டுள்ளது.இதன் வர்த்தகப் பெயர் டெப்லான் (Teflon) ஆகும்.இதிலுள்ள கார்பன்-கார்பன் பிணைப்பும்,கார்பன்-புளூரின் பிணைப்பும் வலிமையானவை.இதன் பரப்பு நேர்த்தியாகவும்,பிற பொருட்களோடு ஒட்டாமலும் இருக்கிறது. அதனால் உணவுப் பண்டங்கள் தயாரிக்கும் பாத்திரங்கள் செய்ய இது இன்றைக்குப் பயபடுத்தப்பட்டு வருகிறது. புளூரின் அணுக்கள் சுற்றியுள்ளதால்,பிற வேதிப் பொருட்களுடன் வினைபுரிய முடியாமல் கார்பன் அணுக்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.டெப்லானின் பற்றற்ற தன்மைக்கு இதுவே காரணம். மேலும் இது பரப்பாற்றலை மிகவும் தாழ்த்தி விடுகிறது. அதனால் டெப்லான் வழுவழுப்பான தளத்தைப் பெற்றுள்ளது. திண்மப் பொருட்களிலேயே மிகவும் குறைவான உராய்வுக் குணகத்தைப் பெற்றிருப்பது டெப்லான்தான் . அரிமாணத்திற்க்கு உட்படாததால் இதை இதயத்திற்கான செயற்கை வால்வுகள் செய்ய பயன்படுத்துகிறார்கள் .
செயற்கையாக உற்பத்தி செய்யப்படும் கதிரியக்க அணு எண்மமான புளூரின்-18 ,பாசிட்ரான் ஊடுகதிர் படங்காட்டி (PET) யில் பயன் தருகிறது.இதன் அரை வாழ்வு 109.8 நிமிடங்கள்.இது நோயாளியின் உடம்பிலுள்ள திசுக்களை பாதிக்காமல் இருக்குமாறு அனுகூலமான அளவில் இதன் கதிர்வீச்சு இருப்பதால் இவ் வழிமுறைக்கு இதுவே சிறந்த மூலமாக இருக்கிறது. புளூரினின் சேர்க்கை ஒரு பொருளின் கட்டமைப்பு மட்டுமின்றி அதன் மின்னியியல் பண்புகளிலும் குறிப்பிடும் படியான மாற்றத்தைத் தோற்றுவிக்கின்றது.எனவே ஏற்கனவே அறியப்பட்ட உயர் வெப்ப நிலை மீக்கடத்திகளில் (Superconductors) புளூரினை ஊட்டி அதாவது புளூரினேற்றம் செய்து பெயர்ச்சி வெப்ப நிலையை மேலும் உயர்த்தலாம் Y1Ba2 CU3 F 2 O1. என்ற பீங்கான் பொருள் 155 K வெப்ப நிலையில் மீக்கடத்துவதாக அறிவித்துள்ளனர் என்றாலும் இது மறு சோதனைகள் மூலம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

No comments:

Post a Comment