Monday, June 25, 2012

Vinveliyil ulaa

சிரியஸ் B பற்றி ... சூரியன் சிரியஸ் B இருக்குமிடத்தில் இருந்தால் அதன் பிரகாசம் 1.8 என்ற சார்பிலா ஒளிப் பொலிவெண் கொண்டதாக இருக்கும். அதாவது சிரியஸ் B யும் ஒரு பிரகாசமான விண்மீனே என ஊகிக்கலாம்.இதன் மங்கலான பிரகாசத்திற்குக் காரணம் அதன் புறப்பரப்பின் குறைந்த வெப்ப நிலையே என்றும் ஓரளவு திடமான மேற்பரப்புள்ள ஒரு குளிர்ந்த சூரியன் அது என்றும் வானவியலார் முதலில் நினைத்தனர்.ஆனால் உணர்வு நுட்பமிக்க தொலை நோக்கியால் பார்த்த போது சிரியஸ் B ஒரு மங்கலான விண்மீன் இல்லை என்பதையும் புறப்பரப்பின் வெப்ப நிலை சூரியனை விட மிக அதிகமாக உள்ள ஒரு விண்மீன் என்பதையும் தெரிந்து கொண்டனர்.எனவே மங்கலான ஒளிக்கு காரணம் அதன் தாழ்ந்த ஒளிப் பொலி வெண்ணே என்று கருதினார்கள்.இது சூரியனை விட 360 பங்குகுறைவாக இருக்க வேண்டும் அதாவது அதன் ஆரம் சூரியனைப் போல 19 மடங்கு குறைவு எனலாம் அதாவது பருமனில் சிரியஸ் B சூரியனை விட 6850 மடங்கு குறைவானது.ஆனால் நிறையில் இந்த அளவு வேறுபாடு இல்லை.ஏறக்குறைய சூரியனின் நிறைக்குக் கொஞ்சம் குறைவாக உள்ளது. இதனால் சிரியஸ் B-ன் அடர்த்தி சூரியனின் அடர்த்தியை விட 5480 மடங்கு அதிகமானது. துல்லியமான கணக்கீடுகள் சிரியஸ் B-ன் ஆரம் 20,000 கி மீ என்று தெரிவிக்கின்றன. அதாவது சூரியனின் ஆரத்தைப் போல 35 மடங்கு குறைவு. எனவே பருமன் 42875 மடங்கு குறைவு. இது அதன் அடர்த்தி இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றது. சிரியஸ் B,பூமியைப் போல மூன்று மடங்கு பெரியதாகவும்,யுரேனஸ் கோளைவிடச்சற்று சிறியதாகவும் இருக்கின்றது.இதனால் இதன் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.சிரியஸ் B-ன் அடர்த்தி நீரின் அடர்த்தியப் போல 125,000 மடங்கு என மதிப்பிட்டுள்ளனர்.சிறிய உருவமும் கூடுதல் நிறையும் குறைந்த ஒளிர் திறனும் கொண்ட இதை குறுவெண் விண்மீன் (white dwarf) என அழைக்கின்றார்கள்.இந்தியாவில் பிறந்த இயற்பியல் விஞ்ஞானியான எஸ் .சந்திரசேகர்,ஒரு குறு வெண் விண்மீன் தன் நிறையை 1 .44 சூரிய நிறையை விடக் கூடுதலாகப் பெற்றிருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த நிறை வரம்பு சந்திரசேகர் நிறை எல்லை என அழைக்கப்படுகிறது. சிரியஸ் B ஒரு குறு வெண் விண்மீன் என்பது முழு அளவில் உண்மை இல்லை. 40 எரிடானி என்ற மும்மீனில் உள்ள ஒரு விண்மீன் வெப்ப மிக்கதாக இருந்தும் தாழ்ந்த பிரகாசம் கொண்டிருந்ததை 1910 ல் கண்டறிந்தனர். இதை யாரும் குறு வெண் விண்மீன் என்று வைகப்படுத்த வில்லை எச்.என் ரஸ்ஸல் என்பார் 40 எரிடானி ஒரு விதி விலக்கு என அறிவித்தார். சிரியஸ் B இன்னும் பிரகாசமான விண்மீன் போல இருக்கிறது.ஆனால் ஏறக்குறைய குறு வெண் விண்மீன் நிலைக்கு அருகாமையிலும் உள்ளது.குறு வெண் விண்மீன் ஆற்றலை எல்லாம் உமிழ்ந்து ஓய்ந்த நிலையில் இருப்பதால்,ஈர்ப்புச் சுருக்கத்திற்கு உள்ளாகும். அப்போது அதற்கு எதிரான உள்ளார்ந்த தடைகள் (எலெக்ட்ரான் அழுத்தம்,நியூட்ரான் அழுத்தம்) அதை ஊதிப் பெரியதாக்கி விடுகின்றன.அப்போது அது பெருஞ் சிவப்பு வின்மீனாகக் காட்சி தரும்.இது நீண்ட கால நெடுக்கையில் இனிமேல் ஏற்படப் போவதால் பழங்காலத்திய பதிவுகளுக்கு இச்செந்நிறம் காரணமாக இருந்திருக்க முடியாது. ஒரு விண்மீனிலிருந்து மற்றொரு விண்மீனுக்கு வளிம நிலை மூலப் பொருட்கள் கவரப் பட்டு பாய்ந்து செல்லும் போது இது போன்ற செந்நிறம் தோன்றுவதற்கான வாய்ப்புண்டு. நிறமாற்றத்தோடு தொடர்புடைய இது போன்ற புதிர் பெர்சியஸ் வட்டாரத்திலுள்ள அல்கோல் என்ற இரட்டை வின்மீனிலும் காணப்படுகின்றது.புவி வளி மண்டலத்தில் உள்ள தூசி மற்றும் மூலக் கூறுகளால் ஏற்படும் ஒளிச் சிதறல் மற்றும் உட்கவர்தலால் இப்படி ஏற்படலாம் என்றும் அதனால் சிரியஸ் பூமியின் அடிவானத்தில் இருக்கும் போது பலவிதமான நிறஜாலங்களை ஏற்படுத்தும் என்றும் கூறலாம்.பழங்காலத்திய வானவியலார் சிரியஸ் அடிவானத்தில் இருக்கும் போது எப்போதும் ஆய்வை மேற்கொண்டதால் அவர்கள் குழம்பி இருக்கலாம் என்று பின்னால் வந்தவர்கள் கூறினார்கள். ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை ஒரு விண்மீனால் உமிழப்படும் ஒளி அதன் ஈர்ப்பினாலேயே பாசிக்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது.ஒளியை போட்டான் (photon) என்றழைக்கப்படும் ஒளித்துகள்களாகக் கருதினால் அத்துகள் விண்மீனின் பலமான ஈர்ப்பை எதிர்த்து வெளியேற வேண்டியதாக இருக்கிறது.அதற்குத் தேவையான ஆற்றலை அது தன் இயக்க ஆற்றலிலிருந்தே பெற விழைவதால் அதன் இயக்க வேகம் தாழ்வுற,அதற்கேற்ப அதன் அலை நீளமும் அதிகரிக்கின்றது. அதாவது செம்பெயர்ச்சி (Red shift)ஏற்படுகின்றது. இதனளவு ஒரு விண்மீனின் நிறை மற்றும் ஆரம் இவற்றின் தகவிற்கு நேர் விகிதத்தில் இருக்கிறது. நியூட்ரான் விண்மீன்,கருந்துளை விண்மீன் (Black hole)குறு வெண் விண்மீன் (White dwarf)போன்ற வற்றில் செம்பெயர்ச்சி குறிப்பிடும் படியாக இருக்கிறது.குறு வெண் விண்மீன்களில் செம்பெயர்ச்சியை அளவிட்டறிந்து ஐன்ஸ்டினின் பொதுச் சார்புக் கொள்கை யின் உண்மைத் தன்மையை மெய்ப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment