Sunday, June 24, 2012

Eluthatha kditham

செட்டிநாட்டு நகரத்தார்கள்-இந்தியாவின் பெருமிதம் இந்தியா நகரத்தார்களால் பெருமிதம் கொள்வதற்கு முக்கியமாக மூன்று காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.முதலாவது அவர்களுடைய முதாதையர்கள் தொடங்கி இன்று வரை அவர்கள் செய்து வரும் அளவில்லாத சமுதாயப் பணிகள். ஒரு மாநில அரசு மக்களுக்காகச் செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் தனி மனிதனாக இருந்தே சாதித்துக் காட்டியிருக்கின்றார்கள்.இரண்டாவது அவர்கள் போற்றி ஒழுகிய ஆன்மிகம்.உடலை மட்டுமின்றி உள்ளத்தையும் ஆன்மிகத்தால் தூய்மையாக வைத்திருந்தார்கள்.சாகாத சமுதாயத்திற்கு இந்த ஆன்மிகம் அவசியமானது என்பதை அன்று தொடங்கி இன்று வரை மக்களுக்கு வலிமையாக உணர்த்திக் கொண்டிருப்பவர்கள் நகரத்தார்கள்.மூன்றாவது நகரத்தார்களின் நயத்த நாகரிகமும் பண்பாடும் - கட்டுப்பாடான வாழ்க்கை முறை,நல்லுறவுகள்,நேர்மை தவறாமை,அறநெறி பிறழாமை,கடவுள் நம்பிக்கை,தான தர்மம்,ஆன்மிகம் தழைக்க கோயில் கட்டி பாதுகாத்தல்,கல்வியால் ஒழுக்கம் தழைக்க பள்ளிகளையும்,கல்லூரிகளையும்,பல்கலைக் கழகங்களையும் கட்டிக் கொடுத்தல்,சமுதாயம் நலம் பெற குளங்களும்,மருத்துவ மனைகளும் கட்டிக் கொடுத்தல் போன்ற நற்பணிகளைபிரதி பலன் கருதாது காலங் காலமாய் செய்து வருபவர்கள் இன்றைக்கும் இந்த நகரத்தார்களே. காவரிப்பூம்பட்டினத்தின் கடலோரப் பகுதியில் உப்பு வணிகத்தைத் தொடங்கி நாட்டிற்கே உப்பிட்டனர்.நகரத்தார்களுக்கு ஒருவரின் அனுபவங்களே மற்றவருக்கு கல்வியானது.செய்யும் தொழிலில் எப்போதும் முதல் நிலை வகித்து சாதனை படைத்தார்கள்.இதில் ஒருவர் ,இருவர் என்றில்லாது ஒட்டு மொத்த சமூகமே சாதனையாளர்களாக விளங்கியது.அதனால் எல்லோரிடமும் பொருள் சேர்ந்தது.அவர்களிடம் செல்வம் நிலைத்திருந்தது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் எல்லோரும் சிக்கனமாக வாழ்ந்து வந்ததுதான்.சேர்த்த செல்வத்தை எல்லாம் பிறருக்கும் பகிர்ந்தளிப்பதை வழக்கமாகக் கொண்டு ஒப்புரவும்,ஈகையும் செய்தனர்.தெய்வீகமான இந்தப் பகிர்வு மனப்பாமை யாருக்கும் எளிதில் வந்து விடுவதில்லை.நகரத்தார்கள் இம் மனப்பான்மையை வெகு இயல்பாகப் பெற்று வழி வழியாகச் செய்து வருகின்றனர்.பொதுவாக அவர்கள் கோயில்மற்றும் கல்விக் கூடங்களின் பராமரிப்புக்கும் ,ஏழைகளின் கல்விக்கும்,திருமணத்திற்கும் மிகத் தாராளமாகப் பொருள் உதவி செய்வார்கள் .தங்கள் வருமானத்தில் ஒரு பங்கை இப்படி தர்மம் செய்வதை உலகிற்கு எடுத்துக் காட்டியவர்கள் நகரத்தார்கள் திரைகடலோடித் திரவியம் தேடிய முதல் இந்தியர்கள் நகரத்தார்களே. போக்குவரத்தும் ,செய்தித் தொடர்பும் எளிதாக இல்லாத அந்தக் காலத்திலேயே மியான்மர் (பர்மா),ஸ்ரீ லங்கா(இலங்கை),சிங்கப்பூர்,மலேசியா,வியட்நாம்,தாய்லாந்து போன்ற கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்து தாய் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றார்கள்.நேர்மையான வட்டித் தொழில் மூலம் அந்நாடுகளில் உள்ள தொழில் முனைவோரை உக்குவித்து தொழில் வளர்ச்சி பெற துணை புரிந்திருக் கின்றார்கள் அன்றைக்கு நகரத்தார்களின் இவ்வுதவி இல்லாது போயிருந்தால் இந்த நாடுகளெல்லாம் இன்றைய பொருளாதார நெருக்கடியில் சிக்கி நசிந்து போயிருந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை .காலங் கடந்து இதை உணர்ந்து கொண்ட இந் நாடுகள் மீண்டும் நகரத்தார்கள் தங்கள் நாட்டிற்கு வருமாறு பொது அழைப்பு விடுத்திருப்பதிலிருந்து இதை உணரலாம். நகரத்தார்கள் தொழில் செய்து சேர்த்த பொருளால் சொந்த நாட்டிலும்,புகுந்த நாட்டிலும் செய்த நற்பணிகள் ஏராளம்.முறையான வரலாற்றுப் பதிவுகள் இல்லை என்பதால் அவற்றையெல்லாம் மறுத்து விடவோ,மறைத்து விடவோ முடியாது.நகரத்தார்களிடம் இன்றைக்கும் கூட வெளிப் படும் மரபு வழிப் பெற்ற இந்த உணர்வுகளே இதற்குச் சாட்சி . தாங்கள் கல்வி கற்க வில்லை என்றாலும் பிறரின் கல்விக்காக மிகத் தாராளமாக உதவி செய்தவர்கள் நகரத்தார்கள்.எழுத்தறிவிப்பதும்,எழுத்தறிவிக்க உதவுவதும் இறைப் பணிக்கு ஒப்பானது.கல்விக் கூடங்களைக் கட்டிக் கொடுத்து மாணவர்கள் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை பெற்று ஒவ்வொருவரும் வாழ்கையில் முன்னுக்கு வர வழி ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.கல்வி வளர்ச்சிக்கு அள்ளி அள்ளிக் கொடுத் தும் திருப்திப் படாதவர்கள் நகரத்தார்கள்.வழக் கொழிந்த வடமொழி தழைக்க இந்திய அரசு இன்றைக்குப் பெரும் பொருள் செலவழித்து வருகிறது.ஆனால் நகரத்தார்கள் அன்றைக்கே வேத பாடசாலைகள் நிறுவி அந்தணர்கள் வேதம் ஓத உதவியதோடு அவர்களுக்கு தங்க இடமும்,உண்ண உணவும் கிடைக்க நிரந்தரமாக உதவி செய்தார்கள்.இன்றைக்கு பெரும் சாதனையாகப் பேசப்படும் இலவச உணவுத் திட்டத்தை முதன் முதலாக அறிமுகம் செய்தது நகரத்தார்களே. நகரத்தார்கள் கோயில் குளங்கள் கட்டி ஆன்மிகம் நலிவடையாது காத்து வருகின்றனர்.புனித தலங்களில் சத்திரங்கள் கட்டி வந்து போவோருக்கு வசதிகள் செய்து கொடுத்தனர் உணவளித்து மனித நேயத்தை வளர்த்தனர் ஆலயத் திருப்பணி,கும்பாபிசேகம் போன்றவற்றிற்காக முகம் சுளிக்காமல் இயன்ற பொருள் கொடுப்பவர்கள் இன்றைக்கு நகரத்தார்களாக மட்டுமே இருக்கின்றார்கள் இன்றைக்கு நாட்டில் எண்ணிறைந்த கோயில்கள் இன்னும் உயிர்ப்போடும்,பொலிவோடும் இருப்பதற்கு மூல காரணம் நகரத்தார்களே.நில உச்ச வரம்புச்சட்டம் வருவதற்கு முன்பே பல ஏக்கர் நன்செய் நிலங்களையும்,பூந்தோட்டங்களையும்,கோயில்களுக்கும் தர்மச் சத்திரங்களுக்கும் தானமாக வழக்கி முன் உதாரணமாய் இருந்தவர்கள் நகரத்தார்கள் "இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்து வகுத்தலும் வல்ல அரசு " நகரத்தார்களைப் பார்த்த பின் இக் குறளை வள்ளுவன் எழுதி வைத்தானோ இல்லை நகரத்தார்களுக்காக எழுதி வைத்தானோ எனக்குத் தெரியாது ஆனால் நகரத்தார்கள் எல்லோரும் இந்தியாவின் பாரத ரத்தினாக்கள்

No comments:

Post a Comment