விண்வெளியில் உலா
கானிஸ் மேஜர் (Canis Major)
ஏறக்குறைய 80 விண்மீன்களடங்கிய வட்டாரம் ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப்பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும்.கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும். இதை நாய் விண்மீன் என்றே அழைப்பர். கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல் அதனால் இந்த வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு பிரகாசமான சீரியசும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது
சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள்.தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகச் சொல்லப் பயன்படுத்தப்பட்டது. வடமொழியில் சூரியனைச் சூர்யா என்பர் இது சீரியசிலிருந்து வருவிக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. அரேபியர்கள் சீரியஸ்ஸை சுஹைல் என்றழைப்பார்கள் இதுவும் பிரகாசமான பொருட் களுக்கான பெயரடைச் சொல்லாகும். சீரியஸ்ஸை அரேபியர்கள் அல் சிரா (Al -shira ) என்றும் அழைப்பார்கள். சீரியசுக்கான கிரேக்க,ரோமன் எகிப்து மொழிப் பெயர்கள் எல்லாம் ஒரே மூலச் சொல்லிலிருந்து பிறந்தவை போலத் தோன்றுகின்றன.
சீரியசின் பெயர் எப்படி வந்தது என்பதற்கும் பலர் பலவிதமாகக் கருத்துக் கூறி வருகின்றனர். எகிப்தியர்களின் கடவுளானா ஓசிரிஸ் என்பதிலிருந்து இப் பெயர் வருவிக்கப் பட்டிருக்கலாம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இதற்கு சில வலுவான காரணங்களை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள், பழங்காலத்தில் சீரியஸ் நைல் நதியின் விண்மீன் (Nile star )அல்லது ஐசிஸ் (Isis ) கடவுளின் விண்மீன் என மதிக்கப்பட்டது ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் இந்த விண்மீன் அதிகாலைப் பொழுதில் தோன்றுவ தினால் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடப் போவதை முன்னறிவிப்பு செய்கிறது என்றும் இது விவசாயிகளுக்கு உதவி செய்வதாக இருக்கிறது என்றும் கூறுவார்.
எகிப்தியர்கள் சீரியஸ்ஸை நைல் நதியின் விண்மீனாக சிகோர் என்று பெயரிட்டுக் கடவுளாகத் தொழுதனர். அதனால் சீரியசின் பெயர் ஐசிஸியின் விண்மீன் எனப் புகழ் பெற்றிருந்தது. ஐசிஸ் என்ற பெண் கடவுள் எகிப்தியர்களின் முதன்மைக் கடவுளான ரா (Ra ) வின் மகளாகவும் ஓசிரிஸ் என்ற கடவுளின் மனைவியாகவும் கருதப்பட்டவள். கிருத்து பிறப்பிற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே சூரியன் கிழக்கில் உதிப்பதற்க்குச் சற்று முன்னதாக த் தோற்றம் தரும் சீரியஸ் விண்மீனின் விவரங்களை த் தொகுத்து வந்தனர். சீரியஸ் ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 25 ல் முதன் முதலாக சூரியன் உதிப்பதற்கு முன்னர் விண்ணில் தெரியும் .இதை ஐசிஸ் கடவுளின் உயிராகக் கருதினார்கள். டெண்டரா என்னுமிடத்தில் ஐசிஸ் ஹதோர் எனும் கோயில் சீரியஸ் எழும் திசைக்கு ஏற்ப அமைந்துள்ளது. அக் கோயிலில் காணப்படும் ஒரு கல்வெட்டில் " ஐசிஸ் பெண் கடவுள் ஒவ்வொரு புத்தாண்டு தினத்திலும் இக் கோயிலின் மீது ஒழி வீசுவாள், அடிவானத்தில் அவளுடைய ஒளி அவளுடைய தந்தையான ராவின் ஒளியோடு ஒன்று கூடும் " என்று பொறிக்கப் பட்டுள்ளது. சீரியசைக் குறிப்பிடும் சுட்டுப் படமான நாய் , நைல் நதியின் பள்ளத்தாக்கு நெடுக சுவற்றில் பொறிக்கப் பட்டுள்ளது. எகிப்தியர்களின் பதிவுகளில் சீரியஸ் என்ற ஒரு விண்மீன் மட்டுமே முழுமையான விவரங்களுடன் காணப்படுகிறது
பழங்காலத்தில் சீரியஸ் கெட்டதை த் தரக்கூடிய ஒரு விண்மீன் என்று நம்பினார்கள். வட்டாரத்தைச் சுட்டெரிக்கும் நாய் விண்மீன் பூமியில், பஞ்சம்,பட்டினிச் சாவும்,கொள்ளை நோயையும் ஏற்படும் காலங்களில் துயரூட்டும் ஒளியால் விண்ணில் தோன்றுகிறது. என்று நம்பினார்கள்.ஜூலை,ஆகஸ்டு ,மாதங்களில் வருத்தும் கொடுமையான வெயில் ,சூரியனோடு சீரியசும் தோன்றுவதினால்ஏற்படுகிறது என்றும் கருதினார்கள்.இக் காலத்தில் நாய் வெறிபிடித்து அலைகிறது என்றும் புனைந்து சொன்னார்கள். உண்மையில் பூமியில் கோடை காலம் என்பது சீரியஸ் மற்றும் சூரியன் இவற்றின் கூட்டு முயற்சியால் விளைவதில்லை .இந்தியாவில் சீரியஸ் நல்லதைக் கட்டியங் கூறும் ஒரு விண்ணுருப்பாகக் கருதினார்கள் .கிருத்துவர்கள்,சீரியஸ் வரப்போகும் கிருஸ்மஸ்ஸை முன்னறிவுப்புச் செய்வதாகக் கூறினார்கள். புத்தாண்டு தினத்தில் சீரியஸ் இரவு நேர வானத்தில் தலைமை விண்மீனாகப் பிரகாசித்து,மிகச் சரியாக நடுச் சாமத்தில் விண்ணில் உச்சத்தை எட்டுகிறது.
No comments:
Post a Comment