மாணவர்களே உங்களோடு கொஞ்ச நேரம்
வகுப்பறையில் குருவாக ,கல்விக் கூட வளாகத்தில் காப்பாளராக,வெளியில் மூத்த நண்பனாக,மாணவர்களின் வளர்ச்சிக்கு உரமாக,பள்ளிவிழாக்களின் போது நிர்வாகியாக ,ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளனாக ,மேடையில் சொற்பொழிவாளனாக பிரச்சனைக்கெல்லாம் சரியான தீர்வாக- ஓர் ஆசிரியன் இப்படி பன்முகத் தோற்றமுள்ளவனாக இருக்கின்றான்.இன்றைய மாணவர் சமுதாயம் ஆசிரியர்களிடமிருந்து வேறொன்றையும் எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கிறது ..உங்களுக்காக, உங்கள் நலனுக்காக கல்வி சார்ந்த தோற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய முகத்தை நாங்கள் பெற்றுள்ளோம் .ஆம், அதுதான் மாணவர் மன நலங்காப்போன் (Emotional health animator) என்ற பணி.
சில சமயங்களில் நீங்கள் பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல் ,யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் மனதிற்குள்ளேயே அடைத்து வைத்துக் கொள்வதால் தொடரும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றீர்கள் உங்கள் மனதிற்கு தொடர்ந்து வலியைத் தந்து கொண்டிருக்கும் அந்தப் பிரச்சனைகளுக்கு தற்கொலை ஒரு தீர்வாக இருக்கவே முடியாது. உங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை, உங்கள் உயிரின் மதிப்பு தெரியவில்லை.தவறான எண்ணங்களால் தவறான முடிவை த்தான் தரமுடியும் மாற்றி யோசிக்கத் தெரியாததால் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்குப் பதிலாக உங்களையே நீங்கள் விடுவித்துக் கொள்கிறீர்கள்
உங்கள் மன வலியை நாங்கள் உணருகின்றோம். அது தரும் வலியால் நீங்கள் படும் துயரத்திற்கு தக்க மருந்தாகும் ஆறுதல் வார்த்தைகள் எங்களிடம் நிறையவே உண்டு .இந்த வார்த்தைகள் சோர்ந்த மனதை துள்ளி எழச் செய்யும்.கொதிக்கும் குருதியை குளிரச் செய்யும்,தறி
கேட்டு ஓடும் எண்ணங்களை வசப்படுத்தி கலங்கரை விளக்காய் வழிகாட்டும்
உங்கள் உயிரின் மதிப்பை நாங்கள் அறிவோம் .மனிதர்கள் வேண்டுமானால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மதிப்பு கொண்டிருக்கலாம் ஆனால் இறைவனுடைய படைப்பில் எல்லா உயிர்களுக்கும் ஒரே மதிப்புத்தான். நீங்கள் மற்றவர்களை விட எந்த வகையிலும் தாழ்ந்தவர்களில்லை.
ஒவ்வொருவரும் தனக்குத் தானே உதவிக் கொள்ள பல உறுப்புக்களை இறைவன் அளித்திருகின்றான் வாழும் காலத்தில் எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் பெறுவதற்குத் தேவையான கருவிகள் அனைத்தையும் மனிதன் பிறக்கும் போதே அளித்து விடுகிறார்.இவற்றை வைத்துக் கொண்டு வாழ முடியாவிட்டால் அவனுக்கு அவன் மீதே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் .முதலில் உங்கள் மீது முழு நம்பிக்கை வையுங்கள் உங்களை வாட்டிக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் சூரிய ஒளியில் சுருங்கிய பனித் துளி போல மறைந்து போகும்
நீங்கள் ஆஸ்திரேலியரான நிக்கின் (Nick Vujicic) கதையைக் கேட்டால் நான் சொல்வதை நம்புவீர்கள் .இவர் பிறவி ஊனம் Tetra amelia syndrome என்ற கோளாறால் அவருக்கு இரண்டு கைகளும் இல்லை ,இரண்டு கால்களும் இல்லை சிறு குழந்தையாக இருந்த போது மனதளவிலும் , உடலளவிலும் உணர்வளவிலும் பெரிதும் பாதிக்கப்பட்டார் ஆனால் அவர் வளர்த்துக் கொண்டுள்ள சுயமதிப்பால் இந்தத் தடைகளை யெல்லாம் தகர்த்தெரிந்து விட்டார் .
முயன்று எல்லோரும் படிக்கும் பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடங்கினார், எனினும் சக மாணவர்களின் கேலிப் பேச்சால் மனதளவில் சோர்வுற்றார் . மிகச் சரியான முடிவு எப்போதும் கண நேரத்தில் விளைவதில்லை..தற்காலியமான பிரச்சனைக்கு தற்கொலை ஒரு நிரந்தமான தீர்வு என எல்லோரையும் போல நினைத்து நிக் தன்னுடைய 8 வது வயதில் தற்கொலைக்குக் கூட முயன்றிருக்கின்றார்.இந்த தவறான எண்ணம் இரண்டு ஆண்டுகள் வரை நீடித்திருந்தது. 10 வயதிருக்கும் போது நீரில் மூழ்கி உயிரை மாய்த்துக் கொள்ள இருந்தார். எனினும் பெற்றோர் மீது கொண்டிருந்த அளவில்லா அன்பு அவரை அப்படிச் செய்யவிடாமல் தடுத்தது. கையும் காலும் வளர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு தன் வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். ஊனமாய் இருந்தவர் அப்போது முதற்கொண்டு மாற்றுத் திறனாளியாக மாறினார். உடல் ஊனம் நம்மைப் பாதிப்பதில்லை ஆனால் மன ஊனமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்து கொண்டார். உடல் ஊனமுற்றோர் கூட வாழ்கையில் சாதிக்க முடியும் என்பதை பத்திரிகைகள் மூலம் தெரிந்து கொண்ட பின்னர் அவருடைய முன்னேற்றம் பெரிதும் முடுக்கப் பட்டது.
ஒரு காலில் சூம்பிப் போயிருந்த இரு விரல்களைக் கொண்டு எழுதும் முறையைக் கற்றுக் கொண்டார். மற்றொரு காலால் பக்கங்களைப் புரட்டவும் .கம்பியூட்டரை இயக்கவும் ,இசைக் கருவிகளை வாசிக்கவும், தனக்கு வேண்டிய உதவிகளைத் தானே செய்து கொள்ளவும் ,போன் பேசவும் பழகிக் கொண்டார். மனமிருந்தால் எப்போதும் மார்க்கமுண்டு என்ற வாழ்வியல் உண்மைக்கு அவர் ஓர் உதாரணமாக விளங்கினார். அவருடைய அசாத்தியமான திறமைகளைக் கண்டு வகுப்பில் மாணவர் தலைவராக நியமிக்கப் பட்டார் அப்போது சோர்வுற்ற மாணவர்களுக்கு ஞான உபதேசம் , நல்ல காரியங்களுக்காக நிதி திரட்டுதல், ஊனமுற்றோர் நலக் கூட்டம் என அடுக்கடுக்காக முயற்ச்சிகளை மேற்கொண்டார் தன்னுடைய 17 வது வயதில் "life without limb " என்ற அமைப்பின் மூலம் மக்களை உற்சாகப் படுத்தும் சொற்பொழிவுகளை வழங்கினார். 24 நாடுகளில் நூற்றுக் கணக்கான சொற்பொழிவு மூலம் 3 -4 மில்லியன் ரசிகர்களை இன்றைக்குப் பெற்றுள்ளார். குறும்படங்களை எடுத்து மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.
இரண்டு கையும் காலும் இல்லாமல் ஒருவர் தன் வாழ்கையில் இவ்வளவு சாதித்திருக்கும் போது நம்மால் முடியாதா என்ன ? ஊனம் உடலில் இருக்கலாம் ஆனால் மனதில் இருக்கவே கூடாது. ஊனமான மனமே தவறான முடிவுகளுக்கு முதற் காரணமாக அமைகிறது .
தொடரும் ...
No comments:
Post a Comment