நியான் (Neon) கண்டுபிடிப்பு
மந்த வளிமமான நியான் மிக அரிதாகக் கிடைக்கும் வளிமங்களுள் ஒன்று.வளிமண்டலக் காற்றில்
65000 ல் ஒரு பங்கே நியான்.ஹீலியம்,கிரப்பிடான்,செனான் போன்ற வளிமங்களின்
செழுமை இதை விடக் குறைவு.வளி மண்டலக் காற்றை நீர்மமாக்கி ,பகுதிக் காய்ச்சி வடித்தல் மூலம் அதிலுள்ள கூறுகளைத்
தனித்துப் பிரித்தெடுத்து விடுகின்றார்கள்.இந்த வழிமுறையை வெற்றிகரமாகச் செய்து நியான்,ஆர்கன்,கிரப்பிட்டான்,
செனான் போன்ற மந்த வளிமங்களை அடுத்தடுத்துக் கண்டுபிடித்தவர் சர் வில்லியம் ராம்சே என்ற இங்கிலாந்து நாட்டு அறிஞராவார். கிரேக்க
மொழியில் நியோஸ் என்றால் புதிய என்று பொருள். அச் சொல்லே இதற்குப் பெயர் தந்தது .
பண்புகள்
Ne என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய நியானின் அணுவெண் 10,அணு எடை 20.18,அடர்த்தி 0.839கிகி/கமீ.இதன் உறை நிலையும்,கொதி நிலையும் முறையே 24.55 K,27.05 K ஆகும்.
இது மந்த வளிமம் என்றும் வேதி வினைகளில் ஈடுபடாது என்றும் சொல்லப்பட்டாலும்
புளூரினுடன் சேர்ந்து கூட்டுப்பொருளை உற்பத்தி செய்கிறது என்பதை சோதனைக் கூடத்தில் நிரூபித்துள்ளனர். நிலையற்ற ஹைட்ரேட்டுக்களை நியான் உண்டாகுகிறது. Ne2+,(NeAr)+, (NeH)+ மற்றும்(NeHe)+ போன்ற அயனிகளை நிற மற்றும் நிறமாலை மானிகளின் ஆய்வில் அறிந்துள்ளனர்
பயன்கள்
வெற்றிட மின்னிறக்க குழாயில்,நியான்,சிவப்பு-ஆரஞ்சு கலந்த ஒளியைத் தருகிறது. எல்லா மந்த வளிமங்களிலும், நியான் வழி செய்யப்படும் மின்னிறக்கமே சாதாரண மின்னழுத்தம் மற்றும் மின்னோட்ட நிலையில் செறிவு மிக்க ஒளியைத் தருகிறது. இதனால் இது விளம்பரத் தட்டிகளில் பயன்படுத்த அனுகூலமிக்கதாய் இருக்கிறது.
இடிதாங்கி ,உயர் மின்னழுத்தம் காட்டி (indicator ) தொலைக்காட்சிப் பெட்டிகள் போன்ற பல சாதனங்களில்
நியான் வழி மின்னிறக்கம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.
நியானும் ஹீலியமும் சேர்ந்த வளிம நிலை ஊடகம் லேசராகப் பயன்தருகிறது.இதில் நியானும் ஹீலியமும் 1:10
என்ற விகிதத்தில் கலக்கப்பட்டிருக்கும்.முதலில் ஹீலியம்
மின்னிறக்கக் குழாயில் வெளிப்படும் ஏலக்ட்ரான்களோடு மோதிகிளர்ச்சியுறுகிறது
இது பின்னர் மீட்ச்சியிலா(inelastic)மோதலினால் நியானுக்கு கிளர்ச்சி யாற்றலை பரிமாற்றம் செய்கிறது. நியானின் கிளர்ச்சியாற்றலும் , ஹீலியத்தின் கிளர்ச்சியாற்றலும் மிக நெருக்கமாகச் சமமாக இருப்பதால்,ஆற்றல் பரிமாற்றம் முழுமையானதாக இருக்கிறது. வெளியீட்டுத்திறன் அதிகமாக இருப்பதால் இது திறந்த வெளியில் செய்திப் பரிமாற்றத்திற்கும் ,முப்பரிமான ஒளிப்படப் பதிவுகளுக்கும் (holograms) பயன்படுகிறது.
நீர்ம நிலையில் பொருளாதாரச் சிக்கன மிக்க மிகச் சிறந்த குளிரூட்டியாக (refrigerants) உள்ளது. நியானின் குளிரூட்டுந்த் திறன் ஹீலியத்தை விட 40 மடங்கு அதிகமாகவும், ஹைட்ரஜனை விட 3 மடங்கு அதிகமாகவும் இருக்கிறது )
No comments:
Post a Comment