வேதித் தனிமங்கள்
மக்னீசியம் (Magnesium )
கண்டுபிடிப்பு
1808 ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியான சர் ஹம்ப்ரி டேவி என்பார் மக்னீசியம் ஆக்சைடு என்ற என்ற வெள்ளை மக்னீசியாவை மின்னார் பகுப்பிற்கு உட்படுத்தி ஒரு புதிய தனிமத்தைப் பிரித்தெடுத்தார்.இதற்கு மக்னீசியம் என்ற பெயரையும் சூட்டினார்.
நீர் மூலக்கூறு நீக்கப்பட்ட மக்னீசியம் குளோரைடை உருக்கி மின்னார் பகுப்பு மூலம் மக்நீசியத்தை உற்பத்தி செய்ய முடியும்.கார்பனை 2000 டிகிரி C வரை சூடு படுத்தி மக்னீசிய ஆக்சைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு உட்படுத்தி,வெளியேறும் மக்னீசிய ஆவியை ஹைட்ரஜன் வெளியில் சுருக்கி மக்னீசியத்தை உற்பத்தி செய்யலாம்
பண்புகள் .
பூமியின் மேலோட்டுப் பகுதியில் செழுமையின் வரிசையில் மக்னீசியம் 8 வது இடத்தில் உள்ளது. இது இலேசான,பளபளப்புடன் கூடிய வெள்ளி போன்ற உலோகமாகும். இது அலுமினியத்தைக் காட்டிலும் இலேசானது.இரும்பின் அடர்த்தியில் 9 ல் 2 பங்கு ,அலுமினியத்தின் அடர்த்தியில் 3 ல் 2 பங்கு.
இது கடல் நீரில் அதிகம் உள்ளது.கடல் நீரில் இது மக்னீசியம் குளோரைடாகவும் மக்னீசியம் சல்பேட்டாகவும் கரைந்துள்ளது.கடல் நீரில் அதிகமுள்ள சோடியம் குளோரைடுக்கு அடுத்து அதிகமாக உள்ளது மக்னீசியம் குளோரைடும் அடுத்ததாக மக்னீசியம் சல்பேட்டும் ஆகும்.
பொதுவாக பூமியில் கிடைக்கும் கடின நீரில்(Hard water) இந்த மக்னீசிய உப்புக்கள் கரைந்துள்ளன.கடின நீரில் சோப்பு நுரை வளம் தருவதில்லை. மெல்லிய கடின நீர் குடிப்பதற்குச் சுவையானது.கால்சிய உப்புக்களை விட மக்னீசிய உப்புக்கள் இரும்பை அரிக்கும் தன்மை கொண்டவை.மக்னீசியம் ஓரளவு மிதமாக வினை புரியக் கூடியது. வறண்ட காற்றில் நிலையானது.ஈரக் காற்றில் மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகிறது.இதைக் காற்றில் எரிக்கும் போடு கண்ணைப் பறிக்கும் பிரகாசத்துடன் எரிகிறது.
நைட்ரஜனுடன் நேரடியாக வினை புரியும் வெகு சில தனிமங்களுள் மக்னீசியமும் ஒன்று.மக்னீசியம் பெரும்பாலான அலோகங்களுடன் வினை புரிகிறது. மக்னீசியம் ஆக்சிஜன் மீது கொண்டுள்ள நாட்டம் மிகவும் அதிகம்.அதனால் கார்பன்டை ஆக்சைடு வளிமத்தில் கூட இது தொடர்ந்து எரிகிறது.மக்னீசியத்தை எரியச் செய்ய அதைப் பற்ற வைக்க வேண்டும் என்பதில்லை.ஒரு எரியும் தீக்குச்சியை அதனருகே வைத்திருந்தாலே போதும்.குளோரின் நிறைந்த வெளியில் இது அறை வெப்ப நிலையிலேயே நிகழ்ந்து விடுகிறது. மக்னீசியம் எரியும் போது புற ஊதாக் கதிர்களையும்,வெப்பத்தையும் தருகிறது.இந்த வெப்பம் மிகவும் அதிகமானது.4 கிராம் மக்னீசியம் 250 மி.லி குளிர்ந்த நீரைக் கொதிக்க வைக்கப் போதுமானது.
காற்று வெளியில் மக்னீசியம் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் அது பொலிவின்றி மங்கிப் போய் விடுகிறது. இந்த ஆக்சைடு படலம் மக்னீசியத்தின் உட்புறம் மேலும் ஆக்சிஜனேற்றம் பெறாமல் தடை செய்யும் ஒரு காப்பாக அமைகிறது. .இதன் வேதிக் குறியீடு Mn .இதன் அணு எண் 12,அணு நிறை 24.31,அடர்த்தி 1740 கிகி/கமீ உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 923.2 K,1373 K ஆகும்.மக்னீசியத்தின் உருகு நிலை குறைவே என்றாலும் அதை உருக்குவது மிகவும் கடினம் .ஏனெனில் உருகுவதற்கு முன்பாகவே இது எரிந்து சாம்பலாகி விடுகிறது .தாழ்ந்த அழுத்தத்தில் மந்த வளிம வெளியில் இதை உருக்கலாம் .
No comments:
Post a Comment