இது தினமலர் செய்தித் தாளில் (25 ஜூன்) வெளியான செய்தி மாணவர்களிடையே தற்கொலை நிகழ்வுகள் நடைபெறாது தடுக்கும் முயற்சிகளில் ஆசிரியர்கள் புத்துணர்வுடன் கடமை உணர்வோடும் மனித நேயத்தோடும் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் அண்ணா பல்கலைக் கழகம் பல்வேறு திட்டங்கள் வகுத்து ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சியும் அளித்து வருகிறது
தன் பிள்ளையைச் சான்றோன் எனக் கேட்டு மகிழவே பெற்றோர்கள் எல்லோரும் விரும்புவார்கள்.ஒரு பிள்ளை சிறந்து விளங்க வேண்டுமானால் அப்பிள்ளை
தன்தூண்டலால் சுயஅறிவையும் அகஆற்றலையும் பெருக்கிக் கொள்ள ஆர்வமும் அளவில்லாத முயற்சியும் கொண்டிருக்க வேண்டும்.இவை குறைவாக இருந்தால் ஒரு புறத் தூண்டுதல் அவசியமாகிறது.இது முதலில் பெற்றோர்களாலும்,பின்னர் ஆசிரியர்களாலும்,நல்ல நண்பர்களாலும்,புற உந்தற்காரணிகளாலும் தூண்டப்பட்டு நிலைப்படுகிறது.நண்பர்கள் ஒரு சிலரையும் ஆசிரியர்கள் பல மாணவர்களையும் ஒரே சமயத்தில் கருத்தில் கொள்வதாலும்,மனம் மயங்கி சிந்தனையில் வேண்டாத எண்ணங்களை பிள்ளைகள் பதிய வைத்துக் கொண்டதாலும் தன் பிள்ளையை முழு அக்கறையோடும், ஈடுபாடோடும் கவனித்து வளர்க்கக் கடமைப்பட்ட பெற்றோர்களுக்கே இதில் முக்கியப் பங்கிருக்கிறது.மேலும் ஆசிரியர்களும் நண்பர்களும் பெற்றோர்களுக்குப் பிறகே தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக இருக்கின்றார்கள் .
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளின் முன்னேற்றத்தில் எவ்வளவு உண்மையான பங்களிப்புச் செய்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே பிள்ளைகளின் முன்னேற்றம் தீர்மானிக்கப் படுகிறது.இந்த உண்மையை வெகு சில பெற்றோர்களே புரிந்து வைத்திருகின்றார்கள். .
தேர்வில் தோல்வி என்றால் பிள்ளைக்கு எதிர்காலமே இல்லை என்று பெரும்பாலான பெற்றோர்கள் தவறாக முடிவு செய்கின்றார்கள் .இவர்கள் தோல்வியின் அருமை பெருமை தெரியாதவர்கள் .உண்மையில் வெற்றியை விட தோல்வியின் வலிமை மிகவும் அதிகம் தோல்விகளே நிச்சியமான வெற்றிக்கு வழிகாட்டும் உறுதியான பாடங்களாக இருக்கின்றன. . அதனால் வெற்றி பெற்றவர்களை விட தோல்விகளைச் சந்தித்து முழுமையாகப் பாடம் கற்றுக் கொண்டவர்களே வெற்றியை வெகு இயல்பாகவும் ,வெற்றிக்கு மேல் வெற்றிகளைப்பெற்று சாதனை படைப்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்
தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கைக்குத் தோல்வி இல்லை என்பதை இவர்கள் முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். கஜினி முகமது பலமுறை தோல்வி கண்டு 17 வது முறைதான் வெற்றி கொண்டான். தாமஸ் ஆல்வா எடிசன் என்ற விஞ்ஞானி 7000 முயற்சிகளில் 6999 முறை தோற்றுப் போன பின்பே ஒளிஇழை விளக்கை கண்டுபிடித்தார். இவர் மட்டுமல்ல எல்லா விஞ்ஞானிகளுமே தோல்விகளுக்குப் பின்னரே அவர்களுடைய முயற்சிகளில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள் நாம் கூட நடக்கப் பழகும் போதும்,சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போதும் கீழே விழுந்து அடிபட்டு அப்புறம் தான் முழுமையாகத் தெரிந்து கொண்டோம்.காயம் பட்டது அப்போது தோல்வியாக இருந்தால் இப்போது வீர நடை போட முடியுமா ? வேகமாக சைக்கிள் ஓட்டி வித்தைகள் காட்ட முடியுமா ? தோல்விகளைப் புரட்டிப் பார்த்தால் அவை வெற்றிகளின் பாடம் என்பது தெரியவரும்
அன்பார்ந்த பெற்றோர்களே,உங்கள் பிள்ளைகள் தேர்வில் தோல்வியடையாமல் இருக்க உங்களுடைய கட்டுப்பாடோடு கூடிய அன்பும்,வழிகாட்டலும் தேவை இதையும் மீறி தேர்வில் தோல்வி அடைந்து விட்டால் அந்தத் தோல்வியையே ஒரு பாடமாக மாற்றிக் காட்டுங்கள்.மாறாக நீங்கள் வசை பாடுவதால் தோல்வி தொடர்ந்து உங்களையும் பற்றிக் கொள்ளும்.பிள்ளைக்குத் தேர்வில் மட்டும் தோல்வி ,உங்களுக்கோ பிள்ளையை இழந்ததால் வாழ்கையே தோல்வி.பிள்ளையின் தோல்வியை மீட்டுப் பெறமுடியும் ஆனால்
உங்களுடைய தோல்வியால் ஏற்பட்ட இழப்பை ஒருகாலத்திலும் ஈடு செய்யவே முடியாது .
No comments:
Post a Comment