Monday, June 11, 2012

Vethith Thanimangal-Chemistry

சோடியம்(பயன்கள்) கரிம வினைகளில் சோடியம் செரிவித்தலுக்கும், தொகுப்பாக்கத்திற்கும் ஆக்சிஜனிறக்கத்திற்கும் பயன் படுகிறது. பெட்ரோல் என்ஜின்களில் இயக்கத் திறனைச் செம்மைப்படுத்த உதவும் டெட்ரா ஈதைல் ஈயம் என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்யும் வழி முறையில் சோடியம் பெரும் பங்கேற்றுள்ளது. சோடியம் தந்த பயன்களுள் மற்றொன்று சோடிய ஆவி விளக்காகும்.சோடிய ஒளி ஒற்றை நிறங் கொண்டது. சோடியத்தின் மஞ்சள் நிற ஒளி ,காற்றின் ஈரத்தாலும்,மூடுபனியாலும்குறைவாகவே உட்கிரகித்துக் கொள்ளப் படுவதால் நெடுந் தொலைவு ஒளி பரவுகிறது .இதனால் குளிர் மிகுந்த இரவிலும், பனி மழை பெய்யும் காலங்களிலும் சோடிய ஒளியால் தெருக்களைத் தெளிவாகப் பார்க்க முடியும்.சோடிய ஒளி விளக்குகள் சோதனைக் கூடங்களில்ஒரு படித்தர விளக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. சோடியம் ஒளி மின் விளைவினால் (Photo electric effect)ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்கிறது.சோடியம் கட்புலனறி ஒளிக்கு மட்டுமின்றி புறஊதாக் கதிர்களுக்கும் ஒளி மின் எலெக்ட்ரான்களை உமிழ்வதால்,இது ஒளியியல் கருவிகளில் ஒளிச் செறிவை மதிப்பிடப் பயன் படுகிறது சோடியமும் பாதரசமும் சேர்ந்த இராசக் கலவை (amalgam)ஆக்சிஜனிறக்கஊக்கியாகப் பயன்படுகிறது.இதை நீரோடு சேர்க்கும் போது உடனடியாக ஹைட்ரஜனை வெளிப்படுத்துகிறது.இப் பண்பு டைட்டானியம்,ஸிர்கோனியம் போன்ற வற்றை அவற்றின் டெட்ரா குளோரைடு களிலிருந்து பிரித்தெடுக்க உறுதுணையாக விளங்குகிறது. சோடியம் கூட்டுப் பொருட்களின் பயன்கள் மஞ்சள் நிறங்கொண்ட சோடியம் பெராக்சைடு ஒரு வலுவான ஆக்சிஜனேற்ற ஊக்கியாகும்.ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்த இதன் கரைசல் துணிகளுக்கு வெளுப்பூட்டும் முறையில் பயன்படுத்தப் படுகிறது.கார்பன்டைஆக்சைடை உட்கவர்ந்து ஆக்சிஜனை விடுவிக்கிறது என்பதால் நீர் மூழ்கிக்கப்பல் மற்றும் அடைத்த ஆய்வறைகளில் உள்ள காற்றை தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் சோடியம் ஹைட்ராக்சைடு,சோப்பு,காகிதம்,ஒளிப்படச் சுருள்,ரயான் செயற்கை இழை போன்றவற்றின் உற்பத்தி முறையில் பங்கு பெற்றுள்ளது.இதன் அடர் கரைசல் தோலை அரித் தெடுத்து விடும்.பாசம் பிடித்த தரை,கழிவு நீர் சாக்கடை போன்ற அசுத்தமான இடங்களைச் சுத்தம் செய்ய இதைப் பயன் படுத்துகிறார்கள். சோடியம் சயனைடு மிகவும் நஞ்சானது.இது தங்கம்,வெள்ளியைப் பிரித்தெடுக்கும் வழி முறையிலும்,மின் முலாம் பூச்சுத் தொழிலிலும் பயன் தருகிறது. சோடியம் அசைடு,சோடியம் குளோரேட்,சோடியம் நைட்ரேட் போன்றவை வெடி பொருட்களின் தயாரிப்பிலும்,சோடியம் பாஸ்பேட் உர உற்பத்தியிலும்,காகிதங்களுக்கு வெளுப்பூட்டுவதிலும்,சோடியம் பென்சோயேட் உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவதிலும் பயன் படுகின்றன.சோடியம் ப்ளூரைடு பூச்சி கொல்லி மருந்தாகவும்,சோடியம் சிலிகேட் தீப்பற்றிக் கொள்ளாத ஆடை உற்பத்தியிலும்,சோடியம் தயோ சல்பேட் ஒளிப் படப் பதிவு முறையிலும்,சோடியம் பை கார்பனேட் தீயணைப்புக் கருவியிலும்,அமில நீக்கி மருந்தாகவும் பயன் தருகின்றன சமையலில் பயன் படுத்தும் உப்பு என்பது சோடியம் குளோரைடுதான் . உப்பினால் நமக்குக் கிடைக்கும் சோடியம் நம்உடலில் உள்ள நீர்மங்களில் ஒரு முக்கியமான சேர்மானப் பொருளாக உள்ளது. இதுவே நம் உடலில் இருக்கும் நீரின் மொத்த அளவைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கின்றது.பொட்டசியத்துடன் இணைந்து உடலில் உள்ள நீர்மங்களின் சமனிலை யைக் கட்டுப் படுத்துகிறது.அதனால் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கக் உதவுகிறது.உபரியாகச் சோடியம் உடலில் சேரும் போது சிறு நீர்ப் போக்குத் தடைப் பட்டு உடலில் நீர் அதிகமாகிறது. கால்சியத்தின் வெளியேற்றத்தை வலிமையாகத் தூண்டி விடுகிறது.இதனால் எலும்புகள் வலுவிழக்கின்றன.இதயமும்,சிறு நீரகமும் பாதிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment