Saturday, June 23, 2012

Vinveliyil Ulaa

விண்வெளியில் உலா சிரியஸின் சீர் குலைவுற்ற இயக்கத்திற்கு என்ன காரணம்? இதற்குக் காரணம் சிரியசுடன் ஒரு சிறிய ஆனால் நிறை மிக்க விண்ணுறுப்பு இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று பேசல் நிறுவினார்.எனினும் அப்போது அவருக்கு இருந்த சோதனைக் கூட வசதிகளைக் கொண்டு,இதை இனமறிந்து மெய்ப்பிக்க முடியவில்லை. அவருடைய கணக்கீடுகள்,கண்ணுக்கு எளிதில் புலப்பட்டுத் தெரியாத அதன் நிறை சூரியனின் நிறைக்குச் சமமாக இருப்பதைத் தெரிவித்தன.இந்த அளவிற்கு ஒரு கோள் நிறைமிக்கதாக இருக்க முடியாது என்பதால்அது உறுதியாக சிரியஸ்ஸைச் சுற்றி வரும் ஒரு கோள் இல்லை என்பதை அப்போது அவர் தெரிவித்தார்.இறுதியில் சிரியஸின் துணை உறுப்பு ஒரு விண்மீனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தார்.எனினும் இறுதி வரை பிரகாசமிக்க சிரியசுக்கு அருகில் இருக்கும் அதைப் பற்றி ஏதும் தெரிவிக்க முடியாது போனார். அவருடைய கெட்ட நேரம்,அவர் ஆராய்ந்த காலத்தில் சிரியஸின் துணை விண்மீன்,சிரியசுக்கு மிக நெருக்கமாக இருந்தது எனினும் கணக்கீடுகளின் துணை கொண்டு,துணை விண்மீன் சிரியஸ்ஸை 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது எனத் தெரிவித்தார். பெசலின் மறைவிற்குப் பின் 1862 ல் அல்வான் ஜி கிளார்க் என்ற அமெரிக்க வானவியலார் ஒரு புதிய தொலை நோக்கியை வடிவமைத்து,சிரியசின் துணை விண்மீனைக் கண்டு பிடித்தார். இதன் பின்னர் முதன்மை விண்மீனை சிரியஸ் A என்றும் துணை விண்மீனை சிரியஸ் B என்றும் குறிப்பிடுவது வழக்கமாயிற்று.சிரியஸ் A யை நாய் என்று அழைக்கப் பட்டதால் சிரியஸ் B யை குட்டி என அழைத்தனர். சிரியஸ் B சிரியஸ் B மிகவும் மங்கலானது என்று கூறமுடியாது.இதன் தோற்ற ஒளிப்பொலிவெண் 8.6 ஆகும். இது பிரகாசமிக்க சிரியசுக்கு அருகில் இல்லாது தனித்திருக்குமானால் அதை எளிதாக இனமறிந்திருக்க முடியும்.நெருக்கமாக இருக்கும் நிலையில்(1996) அவற்றின் கோண விலக்கம் 3 வினாடிகள் மட்டுமே.விலகிய நிலையில்(2021) இது 11.5 வினாடிகள்.இது போன்ற நிலைகள் 25 ஆண்டு கால இடைவெளியில் மாறி மாறி ஏற்படுகின்றன. பெசல் அனுமானித்தது போல சிரியஸ் B ன் நிறை கிட்டத்தட்ட சூரியனின் நிறைக்குச் சமமாக (98 சதவீதம் சூரிய நிறை )இருப்பது அறியப்பட்டது அதன் ஒளிர் திறன் குறைவாக இருந்ததால் வானவியலார் அதன் புறப் பரப்பு வெப்ப நிலையும்குறைவாக இருக்க வேண்டும் என்றும்,எனவே அது ஒரு குளிர்ச்சியான விண்மீனாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். அப்படி இல்லா விட்டால்,அதன் உருவ அளவு மிகவும் சிறியதாக iருக்கும் என்றும் அப்போது அதன் அடர்த்தி நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.1915 ல் டபிள்யு எஸ் ஆதம்ஸ் என்பார் சிரியஸ் B ன் நிறமாலை யைப் பெற்று அதன் புறப் பரப்பு வெப்ப நிலை சூரியனை விடவும் சற்று அதிகம் எனத் தெரிவித்த போது எல்லோரிடமும் பெரு வியப்பே மேலிட்டது.ஏனெனில் அப்போது அதன் தாழ்வான பிரகாசத்திற்கு விளக்கம் அறியப் படாமல் இருந்தது. தொடரும் ...

No comments:

Post a Comment