Friday, June 1, 2012

eluthatha kaditham

குற்றவாளிகள் குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை,உருவாக்கப் படுகின்றார்கள் என்று சொல்வார்கள்.குற்றவாளிகளே இல்லாத ஒரு சமுதாயத்தில் ஒரு கால கட்டத்தில் எப்படி குற்றவாளிகள் உருவானார்கள்.ஒரு மனிதனைக் குற்றவாளியாக உருவாக்கியது எது? ஒருவனுடைய நல்லதற்கும் கெட்டதற்கும் அவனே காரணமாக இருக்கிறான் என்பதால் ஒருவன் கெட்டுப் போனதற்கு அவன் மனமே காரணமாக அமைகிறது.ஒருவனுடைய மனம் கெட்டுப் போவதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.அதில் முதன்மையாக இருப்பது குற்றங்கள் பெருகும் போது அவை தவறு எனத் திருத்தத் தவறியதுதான்.குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது சமுதாயத்தின் நலத்தைக் கட்டிக் காக்கும் முயற்சிகளில் ஒன்றாகும்.இது இன்றைக்கு கேலிக் கூத்தாகி வருகிறது என்பது தான் உண்மை.உண்மையான குற்றவாளி தண்டனையின்றி தப்பிப்பதும்,பெரிய குற்றவாளிகளை விட சிறிய குற்றவாளிகள் உடனடியாகவும்,கடுமையாகவும் தண்டனை பெறுவதும் மக்களிடையே வெட்ட வெளிச்சமாகி வருகிறது.அதனால் சமுதாயத்தின் நலன் தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது.இது எந்த இக்கட்டான நிலையில் போய் முடியும் என்று கற்பனை செய்து பார்க்கவே முடியவில்லை.எண்ணத்தின் அதிர்ச்சி அலைகள் ஏற்படுத்தும் பயத்தினால் பாதியிலேயே அவைகள் மனத் திரையிலிருந்து அகன்று விடுகின்றன.குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரமுள்ளவர்களில் பெரும்பாலானோர் தாங்களும் மறைமுகக் குற்றவாளிகளாக இருக்கிறோம் என்ற உள்ளுணர்வுடன் செயல்படுவதால்,குற்றங்களுக்கு எதிராக முழுமனதுடன் செயல்பட முடிவதில்லை.அதனால் நாட்டில் குற்றவாளிகளே இல்லாமல் செய்ய எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் பெரும்பாலும் பயனற்றுப் போவதுடன்,மக்களின் மன நலத்தையும் பாதிக்கின்றது.இதனால் மக்கள் நேர்மையான வழிமுறைகளில் மீது கொள்ளும் நம்பிக்கையை மெல்ல மெல்ல இழந்து வருகின்றார்கள் கிளர்ச்சியுற்ற அகமனதின் தூண்டுதல் மிக வலிமையானது. அதை எந்த வலிமையான புறச் சக்தியாலும் கட்டுப்படுத்த முடியாது. முடிந்த வரை அப்படிப்பட்ட நிலையை எட்டுவதை தவிர்க்க வேண்டும் அதுவே நல்ல அரசின் கடமையாக இருக்கும்.

No comments:

Post a Comment