Saturday, April 21, 2012

மென்ஹானா (Menkahna) எனப்படும் பீட்டா (β) ஔரிகே இவ்வட்டார விண்மீன் கூட்டத்தில் இரண்டாவது பிரகாசமான விண்மீனாகும். 82 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 1.90 .இதன் பிரகாசம் சீரான கால இடைவெளியில் மாறிக் கொண்டிருப்பதால் இதன் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்தனர். அப்போது இது ஒரு மறைப்பு மாறொளிர் விண்மீன் எனத் தெரிந்து கொண்டனர். இதிலுள்ள இரு விண்மீன்களும் ஏறக் குறைய ஒரே மாதிரியான வெப்ப மிக்க ,நீல நிறங் கொண்ட பெரு விண்மீன்களாகும் இவற்றின் ஆரம் 1.9 மில்லியன் கிலோ மீட்டர் ஆகவும்,சூரியனைப் போல 2.4 மடங்கு நிறைமிக்கனவாகவும் உள்ளன. இவை யிரண்டிற்கும் சற்றேறக் குறைய சமமான அடர்த்தியும் , ஒளிர் திறனும் கொண்டுள்ளன. இவையிரண்டும் 12.5 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியுடன் ஒன்றை ஒன்று 3.96 நாளில் ஒரு முறை என்ற வீதத்தில் வலம் வருகின்றன. அப்போது ஒன்றையொன்று இடை மறைப்பதால் ,அதன் பிரகாசத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படுகின்றது . ஐங்கோண உருவத்தில் அமைந்திருக்கும் இதன் பிரகாசமான விண்மீன்களில் பீட்டா ஔரிகேக்கு எதிர்பக்கத்தில் ஹய்டெஸ் (Haedus ) எனப்படும் சீட்டா (ς ) ஔரிகே என்ற மறைப்பு இரட்டை விண்மீன் உள்ளது. இதிலுள்ள இரு விண்மீன்களும் முற்றிலும் மாறுபட்டவை .789 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள முதன்மை விண்மீன் ஒரு K வகை மாறொளிர் விண்மீனாகும். இது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்துடன் மாபெரும் விண்மீனாக உள்ளது, இதன் நிறை சூரியனைப் போல 5 .8 மடங்கு ,ஆரம் சூரியனைப் போல 148 மடங்கு .அதாவது இதன் உருவம் நமது சூரியக் குடும்பத்தில் பூமியின் சுற்றுப் பாதைக்கு இணையாக இருக்கின்றது. .இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 3960 டிகிரி கெல்வினாகும்.இதன் துணை விண்மீன் நீல நிறமும் 15300 டிகிரி கெல்வின் புறப் பரப்பு வெப்ப நிலையும் கொண்டுள்ள B வகை விண்மீனாகும் முதன்மை விண்மீன் சூரியனைப் போல 4800 மடங்கு பிரகாச மிக்கதாகவும் ,துணை விண்மீன் 1000 மடங்கு பிரகாச மிக்கதாகவும் உள்ளன. இவ்விரு விண்மீன்களும் ஒன்றை யொன்று 2 .7 ஆண்டுகளில் (972 நாட்களில் ) சுற்றி வர ,மறைப்பு நிலை நாற்பது நாட்கள் வரை நீடிக்கின்றது . அப்போது அதன் ஒளிப் பொலிவெண் 3 .7 முதல் 4 .0 வரை மாற்றம் பெறுகிறது.இதன் சுற்றுப் பாதை ஏறக்குறைய நமது வியாழனின் வட்டப் பாதைக்கு இணையானது .இவை சுற்றி வரும் பாதையின் தளமும்,பூமியிலிருந்து நோக்கும் திசையும் ஒன்றாக இருப்பதால் ,அவை சுற்றி வரும் பொது மறைப்பு ஏற்படுகின்றது.
மாபெரும் சிவப்பு விண்மீன்.சிறிய நீல நிற விண்மீனை மறைக்கும் போது பிரகாசத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே ஏற்படுகின்றது .சிவப்பு நிற விண்மீனைச் சுற்றி போர்வை போல ஒரு மங்கலான மேகம் காட்சி தருகிறது. இது நீல நிற விண்மீனின் ஒளியால் ஒளிரும் மாபெரும் சிவப்பு விண்மீனின் பரந்த வளிமண்டலமாகும் .நிறமாலை ஆய்வுகள் இதில் கால்சியம் செறிவுற்றிருப்பதை த் தெரிவித்துள்ளன. இந்த இரட்டை விண்மீன் 80 மில்லியன் ஆண்டுகள் வயதானவை என்று அறிந்துள்ளனர். 2040 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள அல்மாஸ் (Alma'az ) எனப்படும் எப்சிலான்(ε) ஔரிகே காபெல்லாவிற்கு அருகாமையில் சிறிய முக்கோண வடிவத்தை ஏற்படுத்தும் மூன்று விண்மீன்களில் ஒன்றாகும். அரேபிய மொழியில் அல்மாஸ் என்றால் ஆண் ஆட்டைக் குறிக்கும் .இதுவும் மறைப்பு வகை இரட்டை விண்மீனாகும். இரட்டை விண்மீன்களில் இது சற்று வேறுபட்டதாகக் காட்சியளிக்கிறது. .இதில் மஞ்சளும் வெண்ணிறமும் கொண்ட ஒரு மாபெரும் விண்மீன் உள்ளது. இதை எப்சிலான் B என்று குறிப்பிடுவர். இது கண்களுக்குப் புலப்பட்டுத் தெரிகிறது. இதன் சராசரி ஒளிப்பொலி வெண் 4 ஆகவும் புறப் பரப்பு வெப்பநிலை 7800 டிகிரி செல்சியஸ் ஆகவும் F வகை விண்மீ னாகவும் உள்ளது. இதன் நிறை சூரிய நிறை அலகில் 15 -19 ஆகவும் விட்டம் சூரிய விட்டத்தைப் போல 100 மடங்காகவும் இதன் பிரகாசம் 47000 சூரியப் பிரகாசத்திற்குச் சமமாகவும் உள்ளது. இதன் துணை விண்மீன் (எப்சிலான் A ) கண்ணுக்குத் தெரிவதில்லை .எனினும் இதன் உருவ அளவு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் என அறிந்துள்ளனர். இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 2700 மடங்கு ,இது வரை அறியப்பட்ட விண்மீன்களுள் இதுவே உருவத்தால் பெரியது .இது நமது சூரியக் குடும்பத்தில் சனிக் கோள் வரை உள்ள வெளியை உள்ளடைக்கியது ,அதாவது இதன் விட்டம் ஒரு வானியல் தொலைவிற்கும் (astronomical distance - பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ) அதிகமானது. இவ்வளவு பெரியதாக இருப்பினும் இதன் ஒளிர் திறன் மிகவும் குறைவு சற்றேறக் குறைய சூரியனைப் போல பிரகாசிக்கின்றது. இதன் ஒளிப் பொலி வெண் சுமார் 16 என மதிப்பிட்டுள்ளனர். இவ் விரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளி ௦. 03 வினாடி என்றும் இடைத் தொலைவு 30 வானியல் அலகு என்றும் கணக்கிட்டுள்ளனர். மிக நெருக்கமாகவும் ,பிரகாசத்தில் மிகுந்த வேறுபாடும் கொண்டு விளங்கும் இந்த இரட்டை விண்மீன்களை ஒளியால் பகுத்துணர்வது இயலாதது .எல்லா மறைப்பு வகை இரட்டை விண்மீன்களில் இது தான் அதிகமாக 27 .1 ஆண்டுகள் அலைவு காலத்தைப் பெற்றுள்ளது. மேலும் மறைப்பு நிலை ஏறக்குறைய 2 ஆண்டுகள் வரை நீடித்திருக்கிறது .பெருமப் பிரகாசம் ,சிறுமப் பிரகாசத்தை விட இரு மடங்காக உள்ளது. அப்போது அதன் ஒளிப்பொலி வெண் 3 .8 லிருந்து 2 .9 ஆக மாறுகிறது. இதன் மறைப்பு நிலையை 1982 -1984 லும்,2009 -2011 லும் கண்டனர்.

No comments:

Post a Comment