துடிப்பு விண்மீன்கள் (Pulsars)
கட்புலனுணர் ஒளியைக்கொண்டு விண்மீன்களை ஆராய்ந்த போது
பேரண்டத்தின் கட்டமைப்பு மற்றும் தோற்றம்,வளர்ச்சி பற்றிய முழு
விவரங்கள் தெரியாமலிருந்தது.அனுமானங்களின் அடிப்படையிலேயே கருத்துக்களை சொல்லி வந்தனர்.மின்காந்த அலைத்தொகுப்பிலுள்ள
கட்புலனுணரா ஒளியைக் கொண்டும் வானத்தை ஆராயலாம் என்பதைத்
தெரிந்து கொண்டவுடன் இத்துறையில் மகத்தான வளர்ச்சி
முடுக்கப்பட்டது.அண்மைக் காலங்களில் எக்ஸ் கதிர்,காமாக் கதிர்,
நுண் அலைகள்(Microwave),அகச்சிவப்புக் கதிர்,புறஊதாக் கதிர் போன்ற அலைகளில் விண்வெளியையும் விண்மீன்களையும் ஆராயும் வானவியல் முறைகள் வளர்ச்சி பெற்றன.இவற்றை பூமியின் வளி மண்டலத்திற்கு அப்பாற்பட்ட உயரங்களிலிருந்து கொண்டே செய்ய முடிகிறது.முதலில் பலூன்கள் மூலமாகவும்,பின்னர் செயற்கைக் கோள்கள் மூலமாகவும்,
தற்போது விண்வெளி ஆய்வுக் கூடங்கள் மூலமாகவும் இதை
வெற்றிகரமாகச் செய்து வருகின்றார்கள் இந்த ஆய்வுகள் நாம் சிறிதும் எதிர்பாராத ,பேரண்டம் பற்றிய பல உண்மைகளைத் தெரியப்படுத்தியிருக்கின்றன.
ரேடியோ அலைகள் அல்லது நுண் அலைகள் என்பன ரேடார் மற்றும்
வானொலி நிலையங்களில் பயன்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இது அகச் சிவப்புக் கதிர்களை விட அலைநீளம் மிக்கவை.
இவற்றின் அலைநீளம் ஒரு மில்லி மீட்டரிலிருந்து நூறு மீட்டர் வரை
நீண்ட நெடுக்கையில் உள்ளது.ரேடியோ வானவியல் 1960-70 ல் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.முதலாவது
குவாசார்(Quasar) என்ற மிகவும் பிரகாசமும்,ஆற்றல் உமிழும் திறனும்
கொண்ட ஆனால் சிறிய உருவ அளவு உடைய விண்ணுறுப்பாகும்.
இரண்டாவது அண்ட வெளியில் எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் பின்புலக் கதிர்வீச்சு (Background radiation),மூன்றாவது துடிப்பு விண்மீனாகும்.
இது செறிவான ரேடியோ அலைகளை விட்டுவிட்டு உமிழும் மூலமாக
உள்ளது.இதன் ஒளிர் திறன் மாறி மாறி ஒளிர்வதால் இது மாறொளிர் விண்மீன்களில்(Variable star) ஒரு வகையாகும்.
1967 -68 ல் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழகத்தின் முல்லார்டு ரேடியோ வானவியல் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த ஆண்டனி ஹிவிஷ்(A.Hewish)
மற்றும் ஜோசிலின் பெல்(J.C.Bell)என்பாரால் துடிப்பு விண்மீன்கள்
முதன் முதலில் இனமறியப்பட்டன.இன்றைக்கு விண்வெளியில் 500
க்கும் மேற்பட்ட துடிப்பு விண்மீன்களைக் கண்டறிந்துள்ளனர். நம் பால்
வெளி மண்டலத்தில் குறைந்தது பல்லாயிரக் கணக்கில் துடிப்பு
விண்மீன்கள் இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.வெகு தொலைவில் இருப்பதால் இன்றைக்கு நம்மிடம் உள்ள பயனுறுதிறன் மிக்க ரேடியோ
தொலை நோக்கிகளினாலும் இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.பல்சார் என்பதே பல்சேட்டிங் ரேடியோ சோர்சஸ் என்பதின் முதலெழுத்துச் சுருக்கமாகும்.
துடிப்பு விண்மீன்களின் ஒளிச் செறிவு ஒரு காலச் சுற்று முறையில்
மாறிமாறிக் காணப்படுகிறது இம் மாற்றமும் சீர்மை யுடையதாக
இருக்கின்றது. அதாவது ஒளிச் செறிவின் ஏற்றத் தாழ்வுகளுக்கு
இடைப்பட்ட காலம் ஒரு துடிப்பு விண்மீனுக்கு ஒரு நீண்ட கால
நெடுக்கையில் மாறாததாக இருக்கின்றது. ரேடியோ தொலை
நோக்கியால் பெறப்பட்ட ஒரு துடிப்பு விண்மீனின் ஒளிச் செறிவு மாற்றம் படத்தில் காட்டப் பட்டுள்ளது.
இது துடிப்பு விண்மீன்களின் ஒளிச்செறிவு ஒரே சீராக இல்லாது,
அடுத்தடுத்து பெருமங்களையும் சிறுமங்களையும் கொண்டதாகவும்
இருக்கிறது எனக் காட்டுகின்றது.இருப்பினும் அடுத்தடுத்து
வரும் பெருமங்கள் அல்லது சிறுமங்களுக்குக் இடைப்பட்ட காலம்
மாறாததாக இருகின்றது.மேலும் துடிப்பலைகள் அலைவீச்சு
amplitude)சீரான மாற்றத்திற்கு உட்பட்டிருக்கின்றது. காலத்தை மேலும் துல்லியமாகப் பகுத்து இவற்றில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தால்,
அவை ஒவ்வொன்றும் ஓரளவு அகன்ற அதிர்வெண் நெடுக்கைக் குட்பட்ட ரேடியோ அலைகளாக இருப்பதும் தெரிய வந்தது.அதாவது
ஒவ்வொரு ரேடியோ அலையும் அடுத்தடுத்த பல அதிர்வெண் கொண்ட அலைகளின் சேர்க்கையாக இருக்கின்றது.
துடிப்பு விண்மீன்கள் உமிழும் துடிப்பலைகளை நுட்பமாக ஆராய்ந்த
போது ஒரு துடிப்பலை வந்து சேரும் காலம் வெவ்வேறு அதிர்வெண் அலைகளுக்கு வெவ்வேறாக இருப்பது தெரிய வந்தது.
தாழ்ந்த அதிர்வெண் கொண்ட துடிப்பலைகள் உயர்அதிர்வெண் கொண்டவைகளைவிடத் தாமதமாக வந்து சேருவதால் அவற்றின்
கட்டமைப்பு அப்படி அமைந்திருந்தது.இதற்குக் காரணம் விண்மீனிடை
ஊடக வெளியில் விரவியுள்ள பிளாஸ்மாவில் இந்த ரேடியோ அலைகள் ஊடுருவிச் செல்லும் போது பரவுதல் வேகம் வெவேறு அதிர்வெண் அலைகளுக்கு வெவ்வேறானதாக இருப்பதுதான்.பிளாஸ்மாவின் இப்
பண்பின் அடிப்படையில் துடிப்பு விண்மீனின் தொலைவை ஓரளவு
தோராயமாக மதிப்பிடும் வழிமுறையை ஹிவிசும் பெல்லும்
தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்த முதல் துடிப்பு விண்மீன் பால் வெளி மண்டலத்திற்குள் இருப்பது
உறுதி செய்யப்பட்டது. மேலும் இது போன்று வேறு சில விண்ணுறுப்புக்களையும் அடுத்தடுத்து பலராலும் கண்டுபிடிக்கப்பட்டதால்,
இது இயல்பானது என்றும் நிறுவினார்கள்
இதன் கதிர்வீச்சுடன் தொடர்புடைய குறுகியகால அளவு முறைகள்,
இந்த விண்ணுருப்பு அளவில் மிகச் சிறியதாக இருக்க வேண்டும் எனச்
சுட்டிக் காட்டுகின்றன.அதாவது ஒரு துடிப்பு விண்மீனின் பரிமாணம்
பூமியைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் எனலாம்.
இல்லாவிட்டால் அவவிண்மீனின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஒளி,மேற்பொருந்தி குறுகிய துடிப்பலைகளைத் தனித்து அறியமுடியாதபடி அழித்துவிடும்.மிக அதிக அளவில் ஆற்றல் வெளியிடும் துடிப்பலைகளின் அலைவுக் காலம் மாறாது நிலைத்திருப்பதும்,துடிப்பு விண்மீன்கள்
சூரியனை விடக் கூடுதலான நிறை கொண்டதாக இருக்க வேண்டும்
என்று தெரிவிக்கின்றன.இத்தகைய தன்மைகள் பொதுவாக நியூட்ரான் விண்மீன்களுக்கு உண்டு என்பதால்,துடிப்பு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக இருக்கலாம் என்று கருதுகின்றார்கள். வேறு சிலர்
அவை சிறு வெள்ளை விண்மீன்களாக இருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.
No comments:
Post a Comment