பெர்லியத்தின் பயன்கள்
பெர்லியம் உயரளவு உருகுநிலையும் எக்கை விட உறுதியாகவும் இருப்பதால் வானவூர்தி ,விண்ணூர்தி ,ஏவூர்தி போன்றவைகளின் கட்டமைப்பிற்கு பயன்தருகிறது. பீற்று வழி(Nozzle) பற்சக்கரத் தொகுதி(Gears)வேகத்தடையூட்டி(Break) போன்றவைகளில் பெர்லியத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது .
ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக ஆக்சிஜனில் எரிந்து மிகஅதிக வெப்பம் வெளியிடும் தனிமம் பெர்லியமாகும். ஒரு கிராம் பெர்லியம் 17 .2 கிலோ காலரி வெப்பத்தை வெளியிடுகின்றது. இது அலுமினியத்தைக் காட்டிலும் அதிகமாகும். இதனால் எவூர்த்திக்கான திண்ம எரிபொருளாக பெர்லிய உலோகப் பொடியைப் பயன்படுத்த முடிகிறது. பெர்லியம் ஆற்றல் மிக்க எரிபொருளாயினும் இதன் எரி விளைமங்கள் (products) நச்சுத்தன்மை உடையன.பெர்லியோசிஸ் என்ற பாதிப்பைத் தூண்டுகின்றன. இதனை அடுக்கு எவூர்திகளில்(Multistage rockets) மேனிலை அடுக்குகளில் மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்துவது உகந்தது .
பெர்லியத்தின் நியூட்ரான் உட்கவர் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் ,நியூட்ரான்களை அணு உலைக்குள்ளேயே வைத்திருக்கச் சரியான நியூட்ரான் எதிரோளிப்பானாக பெர்லியம் பயனளிக்கிறது. பெர்லியத்தை விட பெர்லியம்-செம்பு கலந்த கலப்பு உலோகம் நற்பயனளிக்கிறது. அணு உலையைச் சுற்றி பெர்லியத்தாலான மெல்லிய சுவர் நியூட்ரான் கசிவைத் தடுக்கிறது.
பெர்லியத்தின் பரப்பைத் தேய்த்து வளவளப்பூட்டமுடியும் .இதனால்தான் அதை ஓர் உலோக எதிரோளிப்பானாகப் (metal reflector) பயன்படுத்த முடிகிறது.விண்கலம் தொடர்பான கட்டமைப்புகளில் பெர்லியத்தைப் பயன்படுத்துவதினால் 30 -60 % மூலப் பொருள் மிச்சமாகிறது .நியூட்ரான் கற்றைக்கு உகந்த மூலமாக பெர்லியம் விளங்குகிறது. .அணு உலையில் செயல்பாட்டைத் தொடங்கி வைப்பதற்கு இது பயன் தருகிறது.
பெர்லியம் எக்ஸ் கதிர்களுக்கு ஊடுருவும் பொருளாக இருக்கிறது. அலுமினியத்தை விட 17 மடங்கு எக்ஸ் கதிர்களை உட்செல்ல அனுமதிக்கிறது. இதனால் எக்ஸ் கதிர் உபகரணங்களில் சன்னல்களை அமைத்து எக்ஸ் கதிர்களை ஒரு திசையில் செலுத்த பெர்லியம் பயனளிக்கிறது.
பெர்லியம் ஆக்சைடு ஒரு வெப்பங் கடத்தாப் பொருள் மின் சாதனங்களுக்கான துணைக் கூறுகளை உற்பத்தி செய்ய இது ஒரு மூலப் பொருளாக உள்ளது. மின் காப்புப் பொருட்கள் ,மின் பொறித் தக்கைகள்
(spark plug ) உயர் அதிர் வெண் (frequency) இராடருக்கான ஏமச் சாதனங்கள் (Insulator) பீங்கான் போன்றவைகள் பெர்லியம் ஆக்சைடால் உற்பத்தி செய்யப்படுகின்றன.பெர்லியமும் செம்பும் கலந்த கலப்பு உலோகமான பெர்லிய வெண்கலம் பெற்றிருக்கும் உயர் திண்ம உரவு ,முறிவு மற்றும் அரிமானத்தி ற்குஎதிர்ப்பு நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் மீள் திறன் ,உயர் மின் மற்றும் வெப்பங் கடத்தும் திறன் போன்ற பண்புகளினால் இது பல இயந்திர உதிரி உருப்புக்களைச் செய்வதற்குப் பயன்படுகிறது. தேய்மானம் குறைவாக இருப்பதால் நீண்ட நாள் பயனுக்கு வருகிறது. உயர் மீள் திறனால்(Elasticity ) இது சுருள் வில்களை உருவாக்கப் பயன்தருகிறது. அதனால் இதை சுருள் வில் உலோகம் (spring metal ) என்பர். கைக் கடிகாரங்களிலும் ,கன இரக வண்டிகளிலும் ,இரயில் வண்டிகளிலும் தேவைப்படுகின்ற வலுவான முறிவிலாத சுருள் வில்களுக்கு இது பயனளிக்கிறது.
பெர்லிய வெண்கலம் உறையும் போது ஏற்படும் வெப்பத்தால் தீப் பொறியை ஏற்படுத்துவதில்லை .இதனால் எண்ணெய் கிடங்குகள் எரிபொருள் மற்றும் எரி வளிம சுத்திகரிப்பு ஆலைகள் ,எரி வளிமப் பொதிகலன் ,வெடி மருந்துக் கலன் போன்றவைகளுக்கு இது அனுகூலமாய் இருக்கிறது.
கார்பன் எக்குடன் சிறிதளவு பெர்லியத்தைச் சேர்க்க அதன் முறிவு எதிர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கின்றது. எக்குப் பரப்புக்களை பெர்லியனேற்றம் (beryllization) செய்வதால் அதன் வலிமை, கடினத்தன்மை ,தேய்மானமின்மை போன்ற தன்மைகள் அதிகரிக்கின்றன.
மக்னீசியம் காற்று வெளியில் எரிந்து சாம்பலாகக் கூடியது. மக்னீசியக் கலப்பு உலோகங்களில் 0 .01 % பெர்லியம் கலந்தாலே உலோகப் பற்ற வைப்புப் பயனின் போது அது எரிந்து சாம்பலாகி விடுவதில்லை.
பெர்லியமும் லிதியமும் கலந்த கலப்பு உலோகம் நீரில் மூழ்குவதில்லை .இதன் பயன் கடல் சார்ந்த ஆய்வுகளிலும் ,படகு, கப்பல் கட்டுமானத் துறைகளிலும் ,மிதவை உடைகள் தயாரிப்பதிலும் பெரிதும் உணரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment