Wednesday, April 18, 2012

vethith thanimangal

லித்தியம் (பயன்கள்)

உலோகப் பரப்புகளை மெருகூட்டுவதற்கும்,வண்ணப்பூச்சிடுவதற்கும்,
இனாமல் மற்றும் உயர் வகை பீங்கான் பொருட்களைத்
தயாரிப்பதற்கும் நெசவுத் தொழிலில் துணிகளுக்கு வெண்மை யூட்டுவதற்கும்,சாயங்களைக் கெட்டிப்படுத்துவதற்கும் லித்தியக்
கூட்டுப் பொருட்கள் பயன் படுகின்றன
அலுமினிய -லித்தியக் கலப்பு உலோகம் தாழ்ந்த அடர்த்தியும் மிகுந்த
உறுதியும் கொண்டது. இலேசாகவும்,உறுதியாகவும் இருக்க வேண்டிய விண்கலம், வானவூர்தி, விண்னூர்தி போன்றவற்றை வடிவமைக்க
இது பயன்தருகிறது.50 % மக்னீசியத்துடன் லித்தியம் சேர்ந்த ஒரு
கலப்பு உலோகம் நீரில் மிதக்கின்றது அனால் இது காற்றிலுள்ள
ஆக்ஸிஜனைக் கவர்ந்து அரிக்கப்படுகின்றது.எனினும் ஒரு குறிப்பிட்ட நெடுக்கைக்கு உட்பட்ட விகிதத்தில் மக்னீசியத்தைச் சேர்க்கும் போது
அது பழுதுறாமல் நீண்ட காலப்பணிக்கு உகந்ததாக இருக்கின்றது.

அலுமினிய உற்பத்தி முறையில் லித்தியம் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது .மின்னார் பகுப்புத்தொட்டியில் சிறிதளவு லித்தியம்
கூட்டுப் பொருளைச் சேர்க்கும் போது,அது அலுமினிய உற்பத்தியைக்
குறிப்பிடும்படியாக அதிகரிக்கின்றது.தொட்டியின் வெப்ப நிலையைத்
தாழ்வாக வைத்திருப்பதுடன்,மின்சாரத்தையும் குறைந்த அளவில்
எடுத்துக் கொள்கிறது.

லித்தியத்தின் மருத்துவப் பயன்கள்

இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும்.
இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல்,மன நோய்,மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய லித்தியம் கார்போனேட்
மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு
சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் லித்தியம் கார்போனேட் பயன்படுகின்றது

லித்தியத்தின் அணு இயற்பியல் பயன்கள்

ஒளிப்பொறிச் சிதறல் எண்ணி(Scintillation counter) களில் உடன்
ஒளிர்வுப் பொரு ட்கள் (Phosphor) பயன்படுகின்றன.இதில் துத்தநாக சல்பைடு,பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருட்களின் பூச்சுகள் பயன்படுத்தப் படுகின்றன.இவை கதிரியக்கக் கதிர்களுள் ஒன்றான ஆல்பா கதிர்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும் ,பீட்டா மற்றும் காமாக்
கதிர்களுக்குப் பயனுறு திறன் குறைவாகப் பெற்றுள்ளன. தாலியம் கூடிய லித்தியம் அயோடைடுப் படிகம் இக் குறைபாட்டை நீக்கியுள்ளது.



லித்தியம் -6 என்ற அணு எண்மம்(Isotope)ஹைட்ரஜன் குண்டு
hydrogen bomb) தயாரிப்பில் முக்கியப் பங்கேற்றுள்ளது இது நியூட்ரானை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதால்,அதன் நிலைப்புத்
தன்மைமை அணுக்கருவிற்குள் ஓரிரெண்டு நியூட்ரான்களை உட்புகுத்தி
மாற்ற முடியும்.நிலையற்ற தன்மையால் அது சிதைந்து ஹீலியம் -4
ஆகவும் ஹைட்ரஜனின் கதிரியக்க அணு எண்மமான டிரைட்டானாகவும்
(triton) உருமாறுகின்றது.இது வெப்ப அணுக்கரு வினையில்
(Thermo nuclear reaction) முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.
அணுக் கருப் பிளப்பு ((Nuclear fission ) முறையை விட அணுக்கருப்
பிணைப்பு முறை (Nuclear fusion) அனுகூலமிக்கது என்றாலும் அணுக்கள் தானாகப் பிணைந்து கொள்வதற்கான வெப்ப நிலை ஒரு million டிகிரி செல்சியஸ் என்ற நெடுக்கையில் உள்ளது.ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும்
வழி முறையில் எட்வர்டு டெல்லர் என்ற விஞ்ஞானி ஒரு புதுமையைப் புகுத்தினார்.அவர் லித்தியம் டியூட்ரைடு என்ற கூட்டுப் பொருளைப் பயன்படுத்தினார்.அது குறைந்த வெளியில் அதிக அளவு டியூட்ரியத்தைப் பெற்றிருக்கின்றது. அத்திண்மத்தை நியூட்ரானின் வீச்சுக்கு உட்படுத்த,
அதிலுள்ள லித்தியம் நியூட்ரானை உட்கவர்ந்து அணுக்கரு வினையால்
டிரைட்டானை உருவாக்குகின்றது.அருகருகே உள்ள டியூட்ரானையும் டிரைட்டானையும் பிணைக்கத் தேவையான வெப்பத்தை ஒரு வழக்கமான யுரேனிய அணு குண்டால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.யுரேனிய அணு
குண்டில் நியூட்ரானின் செறிவை அதிகரிக்கும் போது அது பெருக்கமுற்று
ஒரு கட்டத்தில் தானாக வெடிக்கின்றது.யுரேனிய அணு குண்டைச் சுற்றி லித்தியம் டியூட்ரைடு படலத்தை ஏற்படுத்திக் கொண்டால்,யுரேனியக்
குண்டு வெடிக்கும் போது டிரைட்டான் உற்பத்திக்குத் தேவையான
நியூட்ரானை லித்தியம்-6 க்கு வழங்குவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட டிரைட்ரானும்,டியூட்ரானும் பிணையத் தேவையான உயர் வெப்ப
நிலையையும் தருகிறது .

அணு உலைகளில் நியூட்ரானின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி
கட்டுப் படுத்த காட்மியம் பயன் படுத்துகின்றார்கள் .இதற்கு
லித்தியம்-6 ஒரு மாற்றுப் பொருளாகும்

ஏவூர்திகளில் லித்தியம் திண்ம எரிபொருளாகப் பயன்படுகிறது.
இதன் எரிப்பாற்றல்(Combustion ) ஒரு கிலோ கிராமுக்கு 10270 கிலோ காலரி.இதை விட பெர்லியம் மட்டுமே கூடுதலான எரிப்பாற்றலைப்
பெற்றுள்ளது .

விண் இயற்பியலும் லித்தியமும்

விண்மீன்களின் வயதை மதிப்பிடும் ஒரு புதிய வழிமுறைக்கு லித்தியம் கைகொடுத்துள்ளது.விண்மீன்களில் தொடக்க எரிபொருளாக இருப்பது ஹைட்ரஜன் .ஹைட்ரஜனின் சேமிப்பு முழுவதும் தீர்ந்து போன நிலையில் அடுத்தடுத்த உயர் அணுவெண் அணுக்களும் வினையில்
ஈடுபடுகின்றன.ஹைட்ரஜன் எரிதல் நிறை எல்லையில் இருக்கும்
விண்மீன்களில் லிதியத்தின் செழுமை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.விண்மீன்களில் லித்தியத்தின் செழுமையை
அறிய நிறமாலையில் 6708 ஆங்ஸ்ட்ராம்(10^8m) அலை நீளத்தில் ஆராய்கின்றார்கள்.இதன் ஒப்புச்செறிவிலிருந்து லித்தியத்தின் செழுமையை மதிப்பிட முடியும்.அதிலிருந்து விண்மீனின் வயதைக் கணக்கிட முடிகின்றது .

No comments:

Post a Comment