எப்சிலான் ஔரிகே
1937 ல் அமெரிக்க வானவியலாரான கெய்பர்(D .Kuiper), ஸ்ட்ரூவ்(Struve) மற்றும் ஸ்ட்ரோம்கிரண் (B .Stromgren) போன்றவர்கள் இவ்விந்தை மிகு விண்மீனின் நிறமாலையைப் பகுப்பாய்வு செய்தனர் .அதன் மூலம் இவ் விண்மீனைப் பற்றிய பல புதிய உண்மைகளைத் திரட்டித் தந்துள்ளனர்.
பொதுவாக பெரிய உருவங் கொண்ட முதன்மைத் தொடர் விண்மீன்களின் புறப் பரப்பு அதிகமாக இருப்பதால் ,உமிழப்படும் ஒளியும் அதிகமாக இருக்கும். அதனால் அவற்றின் பிரகாசமும் அதிகமாக இருக்கும் எனலாம். ஆனால் எப்சிலான் A விண்மீன் பெரியதாக இருந்தும்,குறைந்த ஒளிர்திறனைப் பெற்றிருப்பதேன்? இதற்குக் காரணம் இந்த விண்மீன் ஒரு குளிர்ச்சியான புறப்பரப்பு வெப்ப நிலை 1350 டிகிரி கெல்வினாக உள்ள ஒரு விண்மீனாக இருப்பதும் ,அது கட்புலனுக்கு உட்படாத அகச் சிவப்புக் கதிர்களை அதிகம் உமிழ்வதும் தான் மேலும் இதன் சராசரி அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதால் ஒளி ஊடுருவக் கூடிய ஓர் ஊடகம் போலச் செயல் படுகிறது. அதனால் தான் முதன்மை விண்மீனை (எப்சிலான் B ) துணை விண்மீன் (எப்சிலான் A ) இடை மறைப்பு செய்யும் போது அதன் நிறமாலையில் குறிப்பிடும் படியான மாற்றம் காணப்படுவதில்லை. அப்படியானால் எப்சிலான் B ன் பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம் என்பதற்குத் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டியிருகின்றது .
அமெரிக்க ஆய்வாளர்கள் எப்சிலான் B,சூரியனை விட 47000 மடங்கு ஒளியை உமிழ்கிறது என்றும் இது தனக்கு அருகாமையிலுள்ள அகச் சிவப்பு எப்சிலான் A விண்மீனின் அருகிலுள்ள புறக்கூட்டுப் பகுதியை அயனித்து விடுகிறது என்றும் கூறுகின்றார்கள் . எப்சிலான் B ,A க்குப் பின்னால் இருக்குப் போது அயனிக்கப்பட்ட பகுதி பூமியிலுள்ள பார்வையாளர்களுக்கு மறைக்கப் பட்டுவிடுகிறது. அயனிக்கப்பட்ட ஊடகம் அயனிக்கப்படாத ஊடகத்தை விட ,ஒளி ஊடுருவலை அதிகம் தடுப்பதால் எப்சிலான் B மங்கலாகத் தெரிகிறது. எப்சிலான் A யின் கண்ணுக்குப் புலப்படாத இருண்ட பொருட்கூறுகளாலான பகுதிகள் உள்ளன இது விண்மீனின் விளிம்பைச் சுற்றி தடித்த வளையமாக இருக்கிறது .தூசிகளடங்கிய இந்த வளையம் 20 வானியல் தொலைவு வரை விரிந்துள்ளது. இந்த வளையத்தின் மையத்தில்
ஒரு இடைவெளி காணப்படுகிறது. எப்சிலான் B மறைப்பின் மைய நிலையில் இதை ஓரளவு ஒளிர்வூட்டும்போது ,கண்ணால் காண முடியாத வளையத்தின் மையத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது.
தீட்டா(θ) ஔரிகே
இவ் வட்டாரத்திலுள்ள தீட்டா(θ) ஔரிகே 173 ஒளி ஆண்டுகள் தொலைவில் , தோற்ற ஒளிப்பொலிவெண் 2 .65 உடன் உள்ளது.
தனிக் கொத்து விண்மீன் கூட்டங்கள்
ஔரிகா வட்டார விண்மீன் கூட்டத்தில் பல முரண்பாடான மறைப்பு மாறொளிர் விண்மீன்கள் மட்டுமின்றி ,பல தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களும் காணப் படுகின்றன.இதில் M.36(NGC 1960),M.37 (NGC.2098),M.38 (NGC 1912) எனப் பதிவு செய்யப்பட்ட மூன்று கொத்து விண்மீன் கூட்டங்களை இனமறிந்துள்ளனர். M.36 ம்,M.37 ம் தீட்டா ஔரிகே மற்றும் பீட்டா டாரி இணைப்புக் கோட்டிற்கு இரு பங்கங்களிலும் அமைந்துள்ளன. .
M .36 ஐங்கோணத்திற்குள்ளும் ,M 37 வெளியில் தீட்டா ஔரிகேவிற்கு சற்று நெருக்கமாகவும் இருக்கின்றன. M.36, M.37 ஐ விட உருவ அளவில் சிறியது என்றாலும் இதில் பிரகாசமிக்க விண்மீன்கள் அதிக முள்ளன. M.36 ல் 60 விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் ,விட்டம் 20 ஒளி ஆண்டுகள் என்றும்,இதன் சராசரி ஒளிப்பொலிவெண் 6.3 என்றும் M.37 ல் 500 விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் இதில் 120 விண்மீன்கள் மங்கலாகவும் ஒளிப்பொலி வெண் 12 .5 என்ற அளவிலும் பிற பிரகாசமிக்கவைகளாகவும் ஒளிப் பொலி வெண் 6 .2 என்ற அளவிலும் உள்ளது. என்றும் விட்டம் 36 ஒளி ஆண்டுகள் என்றும் ஐந்துள்ளனர். மங்கலான தனிக் கொத்து விண்மீன் கூட்டத்தில் M.37 ம் ஒன்று. அதனால் இருண்ட பின் புலத்தில் மட்டுமே இதைத் தெளிவாகக் காண முடியும்.
இவ்விரு கொத்து விண்மீன் கூட்டங்களும் 3800 - 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.M .38 ஐங்கோண வடிவத்திற்குள் தீட்டா மற்றும் அயோட்டா (i) ஔரிகேக்கு இடையில் உள்ளது .இது 3200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. இதன் விட்டம் சுமார் 42 ஒளி ஆண்டுகள். இதில் உள்ள பிரகாசமான விண்மீன்கள் X வடிவில் தோன்றியிருக்கின்றன .
No comments:
Post a Comment