Tuesday, April 10, 2012

vethith thanimangal

ஹீலியம்(Helium)

கண்டு பிடிப்பு

பூமியின் கடல்மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஹீலியம் 6 வதாக, நைட்ரஜன்,ஆக்சிஜன்,ஆர்கான்,கார்போ டை ஆக்சைடு,நியானுக்கு
அடுத்ததாகச் செரிவுற்றுள்ளது.இதன் செழுமை 5.2 ppm ஆகும்.
பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் பிரபஞ்சவெளியில் ஹைட்ரஜனுக்கு
அடுத்து மிகுதியாக இருப்பது ஹீலியமாகும்.இதன் பங்கு 7 %.
ஹைட்ரஜனும் ஹீலியமும் சேர்ந்து பிரபஞ்ச வெளியில் 99.9 %ஆக
உள்ளது.

(discoverer of Helium- Pierre Jonsson)

ஹீலியம் பூமியில் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னால் அது இருப்பதாக
இனமறியப் பட்டது. 1868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான
பியர் ஜோன்சன் (Pierre Jonsson ) என்பார் சூரிய கிரகணத்தைப் பற்றி
ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக மஞ்சள் பகுதியில் ஒரு புதிய
நிறமாலை வரியைக் கண்டார் .அது அப்போது கண்டறியப் பட்ட
எத்தனிமத்திற்கும் ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி ஒரு புதிய
மூலத்தினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.


அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த இயற்கை(Nature)
என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான லாக்கியர் (Lockyer) மற்றும்
பிராங் லாண்டு (Frankland)என்பார்,இதற்கு ஹீலியம் எனப் பெயரிட்டார் .
கிரேக்க மொழியில்,ஹீலியோஸ் என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும்.

ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1895 ல் ஸ்காட்லாந்தின்
வில்லியம் ராம்சே (William Ramsay ) என்பார் ,தோரியம் மற்றும்
உரேனியத்தின் ஒரு சில கனிமங்கள் மந்த வளிமங்களை
வெளியிடுவதாகக் கண்டறிந்தார். கதிரியக்கத் தனிமங்கள் உமிழ்ந்த
மந்த வளிமங்களை நிறமாலைக்கு உட்படுத்த அது ஹீலியம் என்று உறுதி செய்தார்.அதன் நிறமாலை பியரி ஜோன்சன் இனமறிந்த நிறமாலையின்
வரிகளோடு ஒத்துப் போயிற்று.பூமியில் ஹீலியம்
தனிமத்தை முதன் முதலாக உறுதியுடன் அறிவித்ததால்,அதை
கண்டுபிடித்த பெருமை ராம்சேக்குக் கிடைத்தது. 1907 ல் ரூதர்போர்டு கதிரியக்கக் கதிர்களைப் பற்றி ஆராய்ந்து அயனியாக்கப்பட்ட ஹீலியமும்,ஆல்பாக் கதிரும் ஒன்றே என்று நிறுவினார்.உண்மையில் ஹீலியம் அணுக்கரு என்பதை முதலில் அறியாததால் இதற்கு ஆல்பாத் துகள் எனப் பெயரிட்டார்.

No comments:

Post a Comment