வேதித் தனிமங்கள்
போரானின் பயன்கள்
போரான் பொடியை வான வேடிக்கைக்கான வெடிபொருட்களில் பச்சை நிறம் பெறப் பயன்படுத்துகிறார்கள்.எவூர்திகளில் தீப்பற்றவைக்க போரான் நுண் பொடி பயன்தருகிறது. தனிம போரானை விட போரான் சேர்மங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. எக்கை உறுதியூட்டவும், பளபளப்பான வண்ணப் பூச்சுகள்,சிறப்பு வகைக் கண்ணாடிகளை உற்பத்தி செய்யவும் போரான் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.
போரான் வேகங் குறைந்த நியூட்ரான்களை உட்கிரகிப்பதால்,இதன் எக்கு கலப்பு உலோகங்கள் அணு உலைகளில்
காட்மியத்திற்குப் பதிலாக நியூட்ரான்களின் பாயத்தைக் கட்டுப்படுத்தும் தண்டுகளில் பயன்படுத்தப் படுகிறது.
போரிக் அமிலம் அல்லது போராசிக் அமிலம் போராக்ஸிலிருந்து உற்பத்தி செய்யப் படுகிறது. இதைப் பல்வேறு தொழிற்சாலைகளில் ஒரு மென்மையான கிருமி நாசினியாகப் பயன்படுத்துகிறார்கள்.போராக்ஸ் என்பது சோடியம் டெட்ரா போரேட்டாகும். இயற்கையில் இது டின்கால்(tincal)என்ற கனிமமாகக் கிடைக்கிறது. இதைச் சூடுபடுத்த நீர் நீக்கப் பெற்று களிம்பு போன்ற பாகு கிடைக்கிறது. இதைக் கிருமி நாசினியாகவும் ,தீக்காப்புப் பொருளாகவும் ,கண்ணாடி மற்றும் பீங்கான் உற்பத்தியில் ஒரு மூலப் பொருளாகவும் பயன் படுத்துகிறார்கள்,பற்ற வைப்பு முறையில் தூய்மையூட்டியாகவும் சலவைச் சோப்புத் தூள் தயாரிப்பில் நீரை மென்மைப் படுத்தவும் பயன்படுகிறது.சாயத்தைக் கெட்டிப் படுத்தவும்,அட்டை,சோப்பு, கண்ணாடி போன்ற பொருட்களின் புறப் பரப்பை வளவளப்பூட்டவும் ,மெருகூட்டவும் பயன்படுகிறது. குளிர் சாதனப் பெட்டி ,சலவை இயந்திரம் போன்றவற்றின் எக்குப் பகுதிகளை பூச்சிட்டுப் பாதுகாக்க சில போரான் கூட்டுப் பொருட்கள் நன்மை அளிக்கின்றன.
போரான் நைட்ரைடு ,போரான் கார்பைடு போன்றவை வைரம் போன்று மிகவும் கடின மிக்க பொருட்களாகும். போரான் நைட்ரைடு மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ஆனால் வெப்பத்தைக் கடத்துகிறது. மேலும் இது கிராபைட்டு போல மசகுத் தன்மையை வேறு கொண்டுள்ளது.போரான் கார்பைடு 2450 டிகிரி சென்டி கிரேடு வெப்ப நிலையில் உருகுகின்றது .இதைத் தேய்ப்புப் பொருளாகவும் அணு உலைகளில் வேக மட்டுப் படுத்தியாகவும் (Moderator) பயன்படுத்துகிறார்கள்.
போரானின் ஹைட்ரைடுகள் குறிப்பிடும்படியான அளவில் ஆற்றலை வெளியேற்றி மிக எளிதில் ஆக்ஸிஜனேற்றம் பெறுவதால் அவற்றை ஏவூர்திகளில் திண்ம எரி பொருளாகப் பயன்படுத்த முடிகிறது.
போரான் மந்த வேக நியூட்ரான்களை உட்கவருவதால் அதன் சில கூட்டுப் பொருட்கள் அணு ஆய் கருவிகளில் பயன் படுத்தப் படுகிறது. BF3 எண்ணி (Counter) என்பது போரான் ட்ரை
புளூரைடு பூச்சிட்ட கெய்கர் முல்லர் எண்ணியாகும்.
நியூட்ரான் மின்னூட்டமற்ற துகளாக இருப்பதால்
அதை இனமறிவது எளிதல்ல.நேரிடையாக அதை அறிய முடியாததால் BF3 எண்ணி மூலம் ஆராய்கின்றனர்.
நியூட்ரான்களை உட்கவர்ந்த போரான் நிலையற்று இருப்பதால் ஆல்பாக் கதிரை உமிழ அதை இனமறிந்து நியூட்ரான்
பாய்மத்தை மதிப்பிடுகின்றார்கள்.
போரான் தனிமம் நச்சுத் தன்மை கொண்டதில்லை. எனினும் அதன் கூட்டுப் பொருட்கள் ஜீரனிக்கப்
படும் போது படிப்படியான நச்சுத் தன்மை யை வெளிப்படுத்துகின்றன.
மக்னீசியம் டை போரைடு (MgB2) 2001 ல் ஜப்பான் நாட்டில் மீக் கடத்தியாகக் (super conductor) கண்டறியப் பட்டது .
இது வெறும் இரு தனிமங்களால் ஆனதாக் இருப்பதாலும் ,இதை எளிதாக உற்பத்தி செய்ய முடிவதாலும்
இதன் பெயர்ச்சி வெப்ப நிலை (Transition temperature) 39 K ஆக இருப்பினும் ,பல உயர் வெப்ப் நிலை மீக்
கடத்திகளுக்கு உகந்த மாற்றுப் பொருளாக விளங்குகிறது
No comments:
Post a Comment