Monday, April 16, 2012

vethith thanimangal

லித்தியம் (Lithium )

கண்டுபிடிப்பு

பீட்டாலைட் என்ற தாதுவை பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin)
என்பார் அதில் அலுமினா,சிலிகா தவிர்த்து காரஉலோகம்
இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக
அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக
அளித்து லித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த
பெருமையைத் தட்டித் சென்றவர் ஸ்வீடன் நாட்டின் வேதியல்
அறிஞரான அர்ப் வெட்சன்(Arfvedson)என்பாராவர்.பீட்டாலைட்
தாதுவில் 80 % சிலிகான் ஆக்சைடும்,17 % அலுமினியமும்
3 % அப்புதிய காரஉலோகமும் இருக்கின்றது. பீட்டாலைட்டை ,
பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து
லித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.இதற்கு லித்தியம் என்று
பெயரிட்டவர் அர்ப் வெட்சன்.இது பாறை என்று
பொருள்படும் 'லித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச்
சொல்லிலிருந்து உருவானது.

1855 ல் ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் புன்செனும் ,
இங்கிலாந்து நாட்டு இயற்பியல் அறிஞர் மாதீசனும்
உருக்கப்பட்ட லித்தியம் குளோரைடை மின்னார் பகுப்பிற்கு
உட்படுத்தி வர்த்தக முறையில் லித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.

பண்புகள்

தனிம அட்டவணையில் ஹைட்ரஜன்,ஹீலியத்திற்கு அடுத்து
மூன்றாவதாக இடம் பெற்றுள்ள,மிக லேசான உலோகம்
லித்தியம். பூமியில் லித்தியத்தின் தாதுக்கள் மிக அரிதாகவே
காணப்படுகின்றன.இதன் செழுமை சோடியம்,பொட்டாசியத்தை
விட மிகவும் குறைவு.

லித்தியம் இயற்கையில் தங்கம்,வெள்ளி போலத் தனித்து தூய
நிலையில் கிடைப்பதில்லை.இது மென்மையான வெள்ளி
போன்று பளபளக்கின்ற உலோகமாகும்.வேதியியலின் படி இது
சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது.
இதை விட லேசான உலோகம் வேறெதுவும் இல்லை.லித்தியம்
நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி,நீரின் அடர்த்தியில்
பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.ஆனால் நீர் கார
உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது .

சாதாரண வெப்ப நிலையில் லித்தியம் காற்றில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜனுடன் வினை புரிகின்றது.ஒரு கண்ணாடிக் குப்பியில்
சிறிதளவு லித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால்
அதிலுள்ள காற்றையெல்லாம் லித்தியம் உட்கிரகித்துக் கொண்டு
விடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது.
சோடியத்தை மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலில் பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள முடிவதைப் போல லித்தியத்தை முழுமையாகப்
பாதுகாக்க முடிவதில்லை.இதற்காக லித்தியத்தை குச்சிகளாக்கி
வாசிலின்(Vaseline)அல்லது பாரபின் மெழுகில் புதைத்து
வைக்கின்றார்கள் .

இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் அணு வெண் 3,அணு நிறை
6.94,அடர்த்தி 530 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே
453.2 K,1603 K ஆகும்.

பயன்கள்

லித்தியம்,ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து லித்தியம்
ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை
பிரிகின்றன.ஒரு கிலோ லித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர்
ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில்
தருகிறது.ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக
இதைக் கொள்கின்றனர்.லித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக்
கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது.வெப்ப மண்டலங்களில்
கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் ,வெப்பமானிகள்
(Thermometers) தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும்
சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப்
பொருளாகவும் லித்தியம் கண்ணாடி பயன் தருகிறது.லித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை
மிகைப் படுத்துகின்றது புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில்
இது பயன்தருகிறது. இதயத் துடிப்பு சீராக்கி (Pace Maker) போன்ற
பல சாதனங்களுக்கு லித்தியம் மின்கலம் (lithium cell)
அனுகூலமிக்கதாய் உள்ளது .இதில் நேர்மின் வாயாக லித்தியமும்
மின்னார் பகுபொருளாக லித்தியக் கூட்டுப் பொருளான லித்தியம்
புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றன இதன் எதிர் மின்
வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்
படுகின்றது. இது 1.5-3.௦ வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது.
எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை.
40 டிகிரி செல்சியசுக்கு மேலும் - 20 டிகிரி செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன் படுத்த முடிவதில்லை.

லித்தியம் ஹைட்ராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து
சூடு படுத்த லித்தியம் சோப்பு கிடைக்கின்றது.இது எண்ணையின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது.இதனால் கொழுப்புப் பசை(Grease)
தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது.ஸ்டேரேட்
stearate),பல்மிடேட்(Palmitate) போன்ற சில கரிம லித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மாசகுப் பொருட்களாக விளங்குகின்றன.

1 comment: