Thursday, April 5, 2012

vinveliyil ulaa


சூரியன் தன் மூலப் பொருட்களை புறப் பரப்பிலிருந்து சீராக வெளியே
உமிழ்கிறது.ஒளியோடு இதுவும் சூரியக் குடும்பத்தை ஊடுருவிக் கடந்து
செல்கிறது.இதையே சூரியக் காற்று என்று கூறுகிறார்கள் .இதிலுள்ள
அணுக்கள் யாவும் மின் நடுநிலையில் இருப்பதில்லை.சூரியனின்
புறப் பரப்பு வெப்பநிலை 6000 டிகிரி கெல்வின்.இது அணுக்களின் புறக்கூடுகளில் உள்ள எலெக்ட்ரான்களை வெளியேற்றி அயனியாக்குவதற்கு
போதுமானதாக இருக்கிறது. அதாவது சூரியக் காற்று என்பது வெப்பமும் அடர்த்தியும் குறைந்த ஒரு பிளாஸ்மா(Plasma)எனலாம்.சூரியனின்
மையத்தில் வெப்பமும் அடர்த்தியும் மிகுந்த பிளாஸ்மா இருக்கின்றது
சூரியக் காற்றிலுள்ள பிளாஸ்மாவின் அடர்த்தி,அது சூரியனிலிருந்து
விலகிச் செல்லச்செல்ல குறைகிறது.இதனால் ஏற்படும் ஒரு விளைவு
என்னவென்றால்,பிளாஸ்மா வழியாக ஊடுருவிச் செல்லும் ரேடியோ
அலைகளின் செறிவை சிறிய அளவில் மாற்றுவதாகும்.இதனால்
ஒளி மூலம் மினுமினுக்கிறது.இது ஏறக்குறைய விண்மீனின் ஒளி
புவி வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளை ஊடுருவிச் செல்லும் போது ஏற்படும் சலனத்தால் மினுமினுப்பதை ஒத்தது.ஆனால் சூரியக்
கோள்களின் எதிரொளிப்பு ஒளி புள்ளி மூலத்திலிருந்து வரும் விண்மீனின் ஒளியைப் போலன்றி,ஒரு சிறிய பரப்பிலிருந்து வரும் கற்றையாக
இருப்பதால்,தனியொரு கற்றை சலனப்பட்டாலும்,சராசரி கற்றையில்
அது சமன் செய்யப்பட்டு விடுகிறது.அதனால் கோள்கள் மினு மினுப்பதில்லை .

இதே விதி ,சூரியக் காற்றால் பாதிப்பிற்கு உள்ளாகும் ரேடியோ மூலங்களுக்கும் பொருந்தும்.எனினும் இது ரேடியோ மூலத்தைப் பற்றிக் கூடுதலான விவரங்களையும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
ஏனெனில் ரேடியோ மூலங்கள் சில விண்மீன்கள் போல புள்ளியாகவும்
வேறு சில விரிந்தும் உள்ளன.இதனால் ஆரம்ப காலத்தில் ரேடியோ
அலைகள் புள்ளி மூலத்திலிருந்தா அல்லது விரிந்துள்ள மூலத்திலிருந்தா வருகிறது என்பதைக் கணிப்பது கடினமாக இருந்தது.இப்போது
இது ஓரளவு மட்டுமே எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.எனினும் மினுமினுக்கும்,அதாவது விட்டுவிட்டு ஒளிர்வன புள்ளி மூலங்களாகவே இருக்கும் என்றும் அப்படி மினுமினுக்காதவை விரிந்துள்ள மூலம்
என்றும் கூறலாம்.இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்ட போது மினுமினுக்கும் ரேடியோ ஒளி மூலங்கள் எல்லாம் வெகு தொலைவு தள்ளி உள்ளன என்ற உண்மையைத் தெரிந்து கொண்டனர்

1950 களில் ஆண்டனி ஹிவிஷ் ((Anthony Hewish ) என்ற இளம் ரேடியோ வானவியலார்,மினுமினுப்பைக் கொண்டு ரேடியோ மூலங்களின் இயல்பைக் கண்டறியும் முறையில் ஈடுபட்டார்.அதற்காக ஒரு புதிய ரேடியோ தொலை நோக்கி ஒன்றை உருவாக்கினார்.இதன் மூலம் அவருடைய ஆராய்ச்சி மாணவரான ஜோசிலின் பெல்(Jocelyn Bell)என்பார் 1967 ல் முதலாவது
துடிப்பு விண்மீன்களை(Pulsar) கண்டறிந்தார் .இவர் தன்னுடைய ஆராய்ச்சிப் பட்டத்திற்காக ஒரு புதிய ரேடியோ தொலை நோக்கியை வடிவமைத்தார்.இது சற்றேறக் குறைய ஒரு கோப்பை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது.4.5 ஏக்கர் நிலப்பரப்பில் சம இடைவெளியுடன் நிறுவப்பட்ட 2048 ஆண்டனாக்களுடன் இது அமைக்கப்பட்டது.புற வெளியிலிருந்து வரும்
ரேடியோ அலை இரைச்சலின் செறிவில் ஏற்படும் விரைவான ஏற்றத்
தாழ்வுகளை காலதாமதமின்றி உடனே உணரக்கூடியவாறு இருக்க
வேண்டுமானால் மூலங்களின் மினுமினுப்பை ஆராயும் ஒரு ரேடியோ தொலை நோக்கியின் வடிவமைப்பு சிறப்பாக இருக்கவேண்டும்.கட்புலனறி ஒளியால் கண்கள் மினுமினுக்கும் விண்மீனை உணர்கின்றன.ஏனெனில் ஒளிச்
செறிவின் மாற்றத்திற்கு ஏற்ப கண்கள் செயல்படுகின்றன.ஆனால் பல நிமிடங்கள் அல்லது பல மணி நேரம் பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட ஒளிப்படத் தட்டு இதை உணர்வதில்லை.அதைப் போல நீண்ட நேரத்திற்கு நெடுந் தொலைவிலுள்ள விண்ணுறுப்பிலிருந்து கிடைக்கும் ரேடியோ சமிக்கை அலைகளை ரேடியோ தொலை நோக்கி தொகுத்தளிப்பதால்,அந்த ரேடியோ மூலத்தின் இடத்தை இனமறியப் பயனுள்ளதாக இருக்கிறது .ஜோசிலின் பெல்லின் புதிய ரேடியோ தொலை நோக்கி இதற்கு அனுகூலமாக இருந்தது.சூரியக் காற்றினால் ரேடியோ மூலத்தின் மினுமினுப்பு
உண்டாவதால் இது சூரியன் பூமிக்கு நேர்குத்தான உயரத்தில் இருக்கும்
போது வலுவாகவும் குறிப்பிடும் படியாகவும் இருக்கிறது .
கட்டமைக்கப் பட்ட இந்த ஆண்டனா அணி வகுப்பை நிரந்தரமாகச் செயல்படும் நிலையில் நிறுத்திவைக்க,அது பூமியின் தற்சுழற்சி இயக்கத்தினால்,24 மணி நேரத்திற்கு ஒரு முறை விண்வெளியை ஒரு குறிப்பிட்ட கோணத் திசையில் கண்ணோட்டமிடுகிறது.ஆண்டனா
அணிவகுப்பைத் தக்கவாறு மாற்றி அமைத்துக் கொண்டு வெவ்வேறு
கோணத் திசைகளில் கண்ணோட்டமிடமுடியும் .இது ஒரு நாளில் 30
மீட்டர் நீளமுள்ள சுருள் தாளில் அலைவு முனையால் வரிக் கோடுகளை இட்டு ,அதன் மூலம் ரேடியோ மூலங்களைச் சுட்டிக் காட்டுகிறது .

ரேடியோ அலை
செறிவு

நேரம்


1967 ல் ஆகஸ்ட் 6 -ம் நாளில் பதிவு செய்யப்பட்ட வரைகோட்டுப் படத்தில்,ஏறக் குறைய ஒரு செண்டி மீட்டர் நீளமுள்ள மிக நுண்ணிய அளவு செறிவில் ஏற்றத் தாழ்வுகள் காணப்பட்டன .இது மிகச் சரியாக நடு இரவில் சூரியனுக்கு எதிர்புறத்தில் தொலைநோக்கியால் காணப்பட்ட மங்கலான ஒரு ரேடியோ மூலத்தினால் ஏற்பட்டதாக இருக்கலாம்.இருப்பினும் தொடக்கத்தில் இது பூமியில் மனிதச் செயல்பாட்டின் குறுக்கீட்டினால் ஏற்பட்டிருக்கலாம்
என்று இதற்கு முக்கியத்துவம் அளிக்காது விட்டுவிட்டனர் .
ஆனால் ஒவ்வொரு நாளும் எடுக்கப்பட்ட வரைபடத்தில் ,மிகச் சரியாக அதே இரவு நேரத்தில் இது போன்ற முகடு தோன்றி இருந்தது விண்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து வரும் ரேடியோ அலைகளே இதற்குக் காரணம் என்பது அப்போது அறியப்பட்டது.இதன் பிறகு இந்த ஏற்றத் தாழ்வுகளை விரைந்த வேகத்தில் பதிவு செய்யக்கூடிய சாதனத்தைக் கொண்டு மேலும் நுட்பமாக ஆராய்ந்தனர்,அப்போது வரைபடத்தில் காணப்பட்ட முகடு உண்மையில் 1.33 வினாடிகள் என்ற அலைவு நேரத்துடன்
செறிவில் ஏற்ற இறக்கம் காட்டும் ஒரு ரேடியோ மூலத்தால் உண்டானது என்பதைத் தெரிந்து கொண்டனர்.
இதனால் துடிப்பு விண்மீன் அல்லது பல்சார் என்ற ஒரு புதிய விண்மீன்
நிலை அறியப்பட்டது.இதன் பிறகு வானவியலார் விண்வெளியில் பல துடிப்பு விண்மீன்களை இனமறிந்தனர்.அதிலொன்றே நண்டு வடிவ
நெபுலாவிற்கு மத்தியில் அமைந்துள்ள துடிப்பு விண்மீனாகும்.

No comments:

Post a Comment