Friday, April 27, 2012

vinveliyil ulaa -Space Science

ஓரியன் (Orion) பிரபஞ்சத்தின் நடு வரைக் கோட்டுப் பகுதியில் அதாவது அண்டத் தளத்தில் அமைந்துள்ள ஓரியன் மிகவும் கவர்ச்சி மிக்க வட்டார விண்மீன் கூட்டமாகும்.இதை இரவு நேரத்தில் பூமியின் பெரும்பாலான பகுதியிலிருந்து காண முடியும். ஜவவரி15 - பிப்ரவரி15 ல் இரவு எட்டு மணிக்குப் பிறகு கிழக்கு நோக்கி நின்று கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்தால் ஆல்பா(α),பீட்டா(β),காமா(γ) மற்றும் கெப்பா(κ) விண்மீன்களாலான ஒரு சிறிய செவ்வக வடிவமும் அதன் நடுவில் சற்று சாய்வாக ஒரு வரிசையில் மூன்று விண்மீன்களும் பளிச் சென்று மின்னுவதைக் காணலாம் இவ் வட்டாரத்தில் மொத்தம் 120 விண்மீன்கள் உள்ளன .இந்த வட்டார விண்மீன் கூட்டம் வேட்டைக்காரனைக் குறிப்பதாகக் கற்பனை செய்யப் பட்டுள்ளது .அவனது குதி காலுக்கு அடியில் படுத்துக் கிடக்கும் இரண்டு நாய்களும் கானிஸ் மேஜர்(Canis Major) மற்றும் கானிஸ் மைனர்(Canis Mainor) வட்டார விண்மீன் கூட்டங்களைக் குறிப்பிடுகின்றன. கிரேக்க புராணத்தில் ஓரியன் என்ற வேட்டைக்காரன் கடலுக் குரிய கடவுளான பொசிடனின் மகனாவான். இவன் தேளால் கொட்டப் பட்டு இறந்து விடுவான் என்று தவறாகக் கூறப்பட்டதால் ,விண்ணில் ஸ்கார்பியன்(Scorpius) வட்டார விண்மீன் கூட்டம் உதிக்கும் போது ஓரியன் மறையுமாறு ,அவனது அமைவிடம் உள்ளது என்று சிலர் கூறுவார்கள் .இது பற்றி வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள டார்ஸ் வட்டார விண்மீன் கூட்டத்திலுள்ள சப்த கன்னிகள் எனப்படும் 7 கன்னிப் பெண்கள் அடங்கிய ஒரு சிறிய தனிக் கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது .இதை நாம் பிளியாடெஸ் என்று நாம் முன்பு குறிப்பிட்டோம். இவர்களைக் கண்டு மயங்கிய ஓரியன் அவர்களுக்கு அருகில் வந்தான் என்றும் சிலர் புனைந்து கூறுவர்.
செவ்வக வடிவத்தைத் தரக்கூடிய நான்கு மூலை விண்மீன்களும் ஒரு மனித உருவத்தின் உடலை ஏற்படுத்துமாறு அமைந்துள்ளன. மேற்புறமுள்ள இரு விண்மீன்கள் தோளையும்,அடிப்புறமுள்ள இரு விண்மீன்கள் பாதத்தையும் நடுவில் வரிசையாக அமைந்துள்ள மூன்று விண்மீன்கள் 'பெல்ட்' டையும் உருவகப் படுத்துகின்றன பெடல்ஜியூஸ் கையைக் குறிப்பிடும் அரேபிய மொழிச் சொல்லிலிருந்து தோள் பட்டையிலுள்ள பிரகாசமான ஆல்பா ஒரியானிஸ் . என்ற முதன்மை விண்மீனுக்கு பெடல்ஜியூஸ் எனப் பெயரிட்டனர். ஆனால் உண்மையில் இவ்வட்டாரத்தில் பீட்டா ஒரியானிஸ் என்ற ரீகல் விண்மீனே மிகவும் பிரகாசமானது. பெடல்ஜியூஸ் செந்நிறமான மாபெரும் விண்மீனாக ,விண்ணி ல் தெரியும் விண்மீன்களுள் 10 வது பிரகாசமிக்க விண்மீனாக உள்ளது வடமொழியில் இதை ஆருத்ரா என்றும் தமிழில் திருவாதிரை என்றும் அழைப்பர். இது ரீகலை விடவும் விஞ்சி ஒளிர்ந்தாலும், அவைகளுக்கிடையே நிற வேறுபாடு குறிப்பிடும் படியாக உள்ளது. அகச் சிவப்பு அலை நீள நெடுக்கையில் (இரண்டு மைக்ரான் அலைநீளத்தில் ) பெடல்ஜியூஸ் விண்ணில் பிரகாசமிக்க விண்மீனாகத் தெரிகிறது. 4.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெடல்ஜியூஸிந் ஆரம் 2 .9 வானியல் அலகுஆகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு வானியல் அலகு என்பதால் ,இதன் ஆரம் 4.3 x 108 கிமீ எனலாம். அல்லது சூரியனின் ஆரத்தைப் போல 600 மடங்கு எனலாம் சூரியன் இருக்குமிடத்தில் இது அமைந்திருந்தால் ,இது செவ்வாய் வரை விரிந்திருக்கும் . மாபெரும் சிவப்பு விண்மீனாக இருந்தாலும் இது ஓரளவு இளமையானதே. நிறமாலை வகையில் இது M வகையைச் சேர்ந்தது.

No comments:

Post a Comment