Saturday, April 28, 2012

vethith thanimangal-Chemistry

வேதித் தனிமங்கள் போரானின் பயன்கள் போரான் பொடியை வான வேடிக்கைக்கான வெடிபொருட்களில் பச்சை நிறம் பெறப் பயன்படுத்துகிறார்கள்.எவூர்திகளில் தீப்பற்றவைக்க போரான் நுண் பொடி பயன்தருகிறது. தனிம போரானை விட போரான் சேர்மங்கள் பல நன்மைகளைத் தருகின்றன. எக்கை உறுதியூட்டவும், பளபளப்பான வண்ணப் பூச்சுகள்,சிறப்பு வகைக் கண்ணாடிகளை உற்பத்தி செய்யவும் போரான் முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது. போரான் வேகங் குறைந்த நியூட்ரான்களை உட்கிரகிப்பதால்,இதன் எக்கு கலப்பு உலோகங்கள் அணு உலைகளில் காட்மியத்திற்குப் பதிலாக நியூட்ரான்களின் பாயத்தைக் கட்டுப்படுத்தும் தண்டுகளில் பயன்படுத்தப் படுகிறது. போரிக் அமிலம் அல்லது போராசிக் அமிலம் போராக்ஸிலிருந்து உற்பத்தி செய்யப் படுகிறது. இதைப் பல்வேறு தொழிற்சாலைகளில் ஒரு மென்மையான கிருமி நாசினியாகப் பயன்படுத்துகிறார்கள்.போராக்ஸ் என்பது சோடியம் டெட்ரா போரேட்டாகும். இயற்கையில் இது டின்கால்(tincal)என்ற கனிமமாகக் கிடைக்கிறது. இதைச் சூடுபடுத்த நீர் நீக்கப் பெற்று களிம்பு போன்ற பாகு கிடைக்கிறது. இதைக் கிருமி நாசினியாகவும் ,தீக்காப்புப் பொருளாகவும் ,கண்ணாடி மற்றும் பீங்கான் உற்பத்தியில் ஒரு மூலப் பொருளாகவும் பயன் படுத்துகிறார்கள்,பற்ற வைப்பு முறையில் தூய்மையூட்டியாகவும் சலவைச் சோப்புத் தூள் தயாரிப்பில் நீரை மென்மைப் படுத்தவும் பயன்படுகிறது.சாயத்தைக் கெட்டிப் படுத்தவும்,அட்டை,சோப்பு, கண்ணாடி போன்ற பொருட்களின் புறப் பரப்பை வளவளப்பூட்டவும் ,மெருகூட்டவும் பயன்படுகிறது. குளிர் சாதனப் பெட்டி ,சலவை இயந்திரம் போன்றவற்றின் எக்குப் பகுதிகளை பூச்சிட்டுப் பாதுகாக்க சில போரான் கூட்டுப் பொருட்கள் நன்மை அளிக்கின்றன. போரான் நைட்ரைடு ,போரான் கார்பைடு போன்றவை வைரம் போன்று மிகவும் கடின மிக்க பொருட்களாகும். போரான் நைட்ரைடு மின்சாரத்தைக் கடத்துவதில்லை. ஆனால் வெப்பத்தைக் கடத்துகிறது. மேலும் இது கிராபைட்டு போல மசகுத் தன்மையை வேறு கொண்டுள்ளது.போரான் கார்பைடு 2450 டிகிரி சென்டி கிரேடு வெப்ப நிலையில் உருகுகின்றது .இதைத் தேய்ப்புப் பொருளாகவும் அணு உலைகளில் வேக மட்டுப் படுத்தியாகவும் (Moderator) பயன்படுத்துகிறார்கள். போரானின் ஹைட்ரைடுகள் குறிப்பிடும்படியான அளவில் ஆற்றலை வெளியேற்றி மிக எளிதில் ஆக்ஸிஜனேற்றம் பெறுவதால் அவற்றை ஏவூர்திகளில் திண்ம எரி பொருளாகப் பயன்படுத்த முடிகிறது.
போரான் மந்த வேக நியூட்ரான்களை உட்கவருவதால் அதன் சில கூட்டுப் பொருட்கள் அணு ஆய் கருவிகளில் பயன் படுத்தப் படுகிறது. BF3 எண்ணி (Counter) என்பது போரான் ட்ரை புளூரைடு பூச்சிட்ட கெய்கர் முல்லர் எண்ணியாகும்.
நியூட்ரான் மின்னூட்டமற்ற துகளாக இருப்பதால் அதை இனமறிவது எளிதல்ல.நேரிடையாக அதை அறிய முடியாததால் BF3 எண்ணி மூலம் ஆராய்கின்றனர். நியூட்ரான்களை உட்கவர்ந்த போரான் நிலையற்று இருப்பதால் ஆல்பாக் கதிரை உமிழ அதை இனமறிந்து நியூட்ரான் பாய்மத்தை மதிப்பிடுகின்றார்கள். போரான் தனிமம் நச்சுத் தன்மை கொண்டதில்லை. எனினும் அதன் கூட்டுப் பொருட்கள் ஜீரனிக்கப் படும் போது படிப்படியான நச்சுத் தன்மை யை வெளிப்படுத்துகின்றன.
மக்னீசியம் டை போரைடு (MgB2) 2001 ல் ஜப்பான் நாட்டில் மீக் கடத்தியாகக் (super conductor) கண்டறியப் பட்டது . இது வெறும் இரு தனிமங்களால் ஆனதாக் இருப்பதாலும் ,இதை எளிதாக உற்பத்தி செய்ய முடிவதாலும் இதன் பெயர்ச்சி வெப்ப நிலை (Transition temperature) 39 K ஆக இருப்பினும் ,பல உயர் வெப்ப் நிலை மீக் கடத்திகளுக்கு உகந்த மாற்றுப் பொருளாக விளங்குகிறது

Friday, April 27, 2012

vinveliyil ulaa -Space Science

ஓரியன் (Orion) பிரபஞ்சத்தின் நடு வரைக் கோட்டுப் பகுதியில் அதாவது அண்டத் தளத்தில் அமைந்துள்ள ஓரியன் மிகவும் கவர்ச்சி மிக்க வட்டார விண்மீன் கூட்டமாகும்.இதை இரவு நேரத்தில் பூமியின் பெரும்பாலான பகுதியிலிருந்து காண முடியும். ஜவவரி15 - பிப்ரவரி15 ல் இரவு எட்டு மணிக்குப் பிறகு கிழக்கு நோக்கி நின்று கொண்டு வானத்தை நிமிர்ந்து பார்த்தால் ஆல்பா(α),பீட்டா(β),காமா(γ) மற்றும் கெப்பா(κ) விண்மீன்களாலான ஒரு சிறிய செவ்வக வடிவமும் அதன் நடுவில் சற்று சாய்வாக ஒரு வரிசையில் மூன்று விண்மீன்களும் பளிச் சென்று மின்னுவதைக் காணலாம் இவ் வட்டாரத்தில் மொத்தம் 120 விண்மீன்கள் உள்ளன .இந்த வட்டார விண்மீன் கூட்டம் வேட்டைக்காரனைக் குறிப்பதாகக் கற்பனை செய்யப் பட்டுள்ளது .அவனது குதி காலுக்கு அடியில் படுத்துக் கிடக்கும் இரண்டு நாய்களும் கானிஸ் மேஜர்(Canis Major) மற்றும் கானிஸ் மைனர்(Canis Mainor) வட்டார விண்மீன் கூட்டங்களைக் குறிப்பிடுகின்றன. கிரேக்க புராணத்தில் ஓரியன் என்ற வேட்டைக்காரன் கடலுக் குரிய கடவுளான பொசிடனின் மகனாவான். இவன் தேளால் கொட்டப் பட்டு இறந்து விடுவான் என்று தவறாகக் கூறப்பட்டதால் ,விண்ணில் ஸ்கார்பியன்(Scorpius) வட்டார விண்மீன் கூட்டம் உதிக்கும் போது ஓரியன் மறையுமாறு ,அவனது அமைவிடம் உள்ளது என்று சிலர் கூறுவார்கள் .இது பற்றி வேறொரு கதையும் சொல்லப்படுகிறது. இதற்கு அருகிலுள்ள டார்ஸ் வட்டார விண்மீன் கூட்டத்திலுள்ள சப்த கன்னிகள் எனப்படும் 7 கன்னிப் பெண்கள் அடங்கிய ஒரு சிறிய தனிக் கொத்து விண்மீன் கூட்டம் உள்ளது .இதை நாம் பிளியாடெஸ் என்று நாம் முன்பு குறிப்பிட்டோம். இவர்களைக் கண்டு மயங்கிய ஓரியன் அவர்களுக்கு அருகில் வந்தான் என்றும் சிலர் புனைந்து கூறுவர்.
செவ்வக வடிவத்தைத் தரக்கூடிய நான்கு மூலை விண்மீன்களும் ஒரு மனித உருவத்தின் உடலை ஏற்படுத்துமாறு அமைந்துள்ளன. மேற்புறமுள்ள இரு விண்மீன்கள் தோளையும்,அடிப்புறமுள்ள இரு விண்மீன்கள் பாதத்தையும் நடுவில் வரிசையாக அமைந்துள்ள மூன்று விண்மீன்கள் 'பெல்ட்' டையும் உருவகப் படுத்துகின்றன பெடல்ஜியூஸ் கையைக் குறிப்பிடும் அரேபிய மொழிச் சொல்லிலிருந்து தோள் பட்டையிலுள்ள பிரகாசமான ஆல்பா ஒரியானிஸ் . என்ற முதன்மை விண்மீனுக்கு பெடல்ஜியூஸ் எனப் பெயரிட்டனர். ஆனால் உண்மையில் இவ்வட்டாரத்தில் பீட்டா ஒரியானிஸ் என்ற ரீகல் விண்மீனே மிகவும் பிரகாசமானது. பெடல்ஜியூஸ் செந்நிறமான மாபெரும் விண்மீனாக ,விண்ணி ல் தெரியும் விண்மீன்களுள் 10 வது பிரகாசமிக்க விண்மீனாக உள்ளது வடமொழியில் இதை ஆருத்ரா என்றும் தமிழில் திருவாதிரை என்றும் அழைப்பர். இது ரீகலை விடவும் விஞ்சி ஒளிர்ந்தாலும், அவைகளுக்கிடையே நிற வேறுபாடு குறிப்பிடும் படியாக உள்ளது. அகச் சிவப்பு அலை நீள நெடுக்கையில் (இரண்டு மைக்ரான் அலைநீளத்தில் ) பெடல்ஜியூஸ் விண்ணில் பிரகாசமிக்க விண்மீனாகத் தெரிகிறது. 4.7 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள பெடல்ஜியூஸிந் ஆரம் 2 .9 வானியல் அலகுஆகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு ஒரு வானியல் அலகு என்பதால் ,இதன் ஆரம் 4.3 x 108 கிமீ எனலாம். அல்லது சூரியனின் ஆரத்தைப் போல 600 மடங்கு எனலாம் சூரியன் இருக்குமிடத்தில் இது அமைந்திருந்தால் ,இது செவ்வாய் வரை விரிந்திருக்கும் . மாபெரும் சிவப்பு விண்மீனாக இருந்தாலும் இது ஓரளவு இளமையானதே. நிறமாலை வகையில் இது M வகையைச் சேர்ந்தது.

vethith thanimangal - chemistry

போரான்(Boron) கண்டுபிடிப்பு : போரான் தனிமமாகக் கண்டு பிடிக்கப்படுவதற்கு வெகு காலம் முன்பாகவே போரான் சேர்மங்கள் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தன. போரான் இயற்கையில் தனித்துக் காணப்படவில்லை. சில எரிமலைப் பகுதிகளில் உள்ள வெந்நீர் ஊற்றுக்களில் ஆர்த்தோ போரிக் அமிலமாகவும் ,சில ஏரிகளில் போராக்ஸ் என்றழைக்கப்படுகின்ற சோடியம் போரேட்டாகவும் காலமெனைட் என்ற கால்சியம் போரேட்டாகவும் கிடைக்கின்றது. இது இயற்கை ஒளி இழை(Optical fibre)போலச் செயல்பட்டு இழப்பின்றி ஒளியை ஒரு முனையிலிருந்து மறு முனைக்குக் கடத்திச் செல்கிறது. இயற்கையில் கிடைக்கும் போரானில் 19 .78 % நிறை எண் 10 கொண்ட அணு எண்மங்களாகவும் 80 .22 % நிறையெண் 11 கொண்ட அணு எண்மங்களாகவும் உள்ளன . போரிக் ஆக்ஸைடுடன் மக்னீசியம் பொடியக் கலந்து பழுக்கச் சூடுபடுத்த, மக்னீசியாவும் (மக்னீசியம் ஆக்சைடு) போரானும் விளைகின்றன. இதை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க மக்னீசியா மட்டும் கரைந்து படிக உருவமற்ற (amorphous ) போரான் கறுப்புப் பொடியாக வீழ்படிகிறது.
15௦௦ o C வெப்ப நிலையில் அலுமினியத்துடன் சூடுபடுத்தி படிகப் போரானைப் பெறலாம்.குளிர்ந்த பிறகு அலுமினியத்தை ஹைட்ரோ குளோரிக் அமிலத்தில் கரைக்க படிக போரான் எஞ்சுகிறது . 1808 ல் சர் ஹம்ப்ரி டேவி பொட்டாசியத்தையும் போரிக் அமிலத்தையும் ஒரு குழலிலிட்டு சூடுபடுத்தி தூய்மையற்ற போரானை முதன் முதலாகப் பெற்ற போது அது ஒரு புதிய உலோகம் என்றெண்ணி அதற்கு போராசியம் (Boracium) எனப் பெயரிட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அது ஓர் அலோகம் (Non-metal) என உறுதி செய்த பின்னர் கார்பனுக்கு இணையாக போரான் எனப் பெயரிட்டனர். பண்புகள்
அணு எண் 5 ஆக உள்ள போரானின் அணு நிறை 10 .81 .இதன் அடர்த்தி 3120 கிகி /கமீ. உருகு நிலை 2573 K,கொதி நிலை 3973 K என உள்ளது சாதாரண வெப்ப நிலைகளில் இது காற்று வெளியில் பாதிக்கப் படுவதில்லை.ஒரளவு உயர் வெப்ப நிலைகளில் இது எரிந்து ஆக்சிடு, நைட்ரைடு கலவையைத் தருகிறது .700o C வெப்ப நிலையில் ஆக்சிஜனில் எரிந்து ட்ரை ஆக்சைடை உண்டாக்குகின்றது .வெகு சில தனிமங்களுள் ஒன்றாக போரான் நைட்ரஜனுடன் நேரடியாக இணைகிறது .நைட்ரிக் அமிலமும் கடிய கந்தக அமிலமும் போரானை ஆக்சிஜனேற்றம் செய்கின்றன. சூடு படுத்தும் போது போரான்,சிலிகான் மற்றும் கார்பனை அவற்றின் ஆக்சைடுகளிலிருந்து இடம் பெயரச் செய்கிறது படிக நிலையில் உள்ள போரான் கடினமாகவும் உறுதிமிக்கதாகவும் இருக்கிறது. வெப்பத்தினாலும் அமிலங்களாலும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் மென் காரங்களில் கரைகிறது. போரான் தனிமத்தின் ஆற்றல் பட்டையின் இடைவெளி 1.50 - 1.56 எலெக்ட்ரான் வோல்ட்(electron volt).இது சிலிகான் ஜெர்மானியத்தைவிடச் சிறிது அதிகம்.இது சில சிறப்பான ஒளியியல் பண்புகளைப் பெற்றுள்ளது. அகச்சிவப்புக் கதிர்களின் ஒரு பகுதியை இது கடத்திச் செல்கிறது. இதனால் அகச்சிவப்புக் கதிர்கள் பற்றிய ஆய்வுக்கான சாதனங்களில் இது இடம் பெறுகிறது. அறை வெப்ப நிலையில் ஏறக்குறைய மின்சாரத்தை அரிதில் கடத்திகள் போலக் கடத்தும் போரான் உயர் வெப்ப நிலையில் எளிதில் கடத்தியாகச் செயல்படுகிறது.வெப்ப நிலைக்கு ஏற்ப அதன் படிக நிலையில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக் காரணமாகின்றது

Thursday, April 26, 2012

Creative thoughts - arika ariviyal

அறிக அறிவியல் ஓர் எறும்பு தன எடையை விட பல மடங்கு அதிகமான எடையைத் தூக்கிச் செல்கிறது. ஆனால் அறிதிறன் மிக்க உயர்திணை மனிதர்களால் அப்படிச் செய்ய முடியவில்லையே .ஏன் வண்ணத்துப் பூச்சி, ஈ ,தட்டான் ,கொசு ,கரப்பான் பூச்சி ,வெட்டுக் கிளி ,விட்டில் பூச்சி போல எறும்பு பூச்சியினத்தைச் சேர்ந்தது. ஓர் எறும்பு தன் எடையைப் போல 50 மடங்கு எடையுள்ள பொருளை தூக்கி எடுத்துச் செல்லக் கூடியது. இது சில சினிமாப் படத் தயாரிப்பாளர்கள் கற்பனையால் படம் பிடித்துக் காட்டுவதைப் போல ,ஒரு மனிதன் ஒரு காரை த் தூக்குவதற்கு ஒப்பானது. அட்லஸ் , ஹெர்குலஸ் ,சூப்பர் மேன்,ஹல்க் ,அனுமன் போன்ற கற்பனைக் காதாபாத்திரங்களால் மட்டுமே இப்படிச் செய்ய இயலும். இரு கால்களை உடைய எந்த மனிதனாலும் இப்படிச் செய்யவே முடியாது. ஒரு கிராமிற்கும் குறைவான எடை யுடைய எறும்பு தான் பெற்றிருக்கின்ற ஆறு கால்களினால் இத்தகைய செயல்களை வெகு இயல்பாகச் செய்கிறது. இப்படி எறும்பு செய்ய அதன் ஒரு கிராம் உடல் எடைக்கு அதன் தசையின்(Muscle) இழுவிசைத் திறன் குறைந்தது 20000 கிராம் என்ற அளவில் இருக்க வேண்டும் என்று கணித்துள்ளனர். தசையின் செயல் திறன் அதன் குறுக்கு வெட்டுப் பரப்பிற்கு ஏற்ப மாறுபடுகிறது .அதாவது அதன் ஒற்றைப் பரிமாணத்தின் இருமடிக்கு ஏற்ப இருக்கிறது .உடலின் பருமன் அல்லது உடல் நிறை என்பது ஒற்றைப் பரிமாணத்தின் மும்மடியைப் பொறுத்து மாறுபடுகிறது.எனவே சிறிய அளவிலான உடலுக்கு அதன் தசைகள் ஒரளவு மிகவும் திறன் மிக்கவைகளாகும்.உடல் கூறியல் படி ,பூச்சிகளின் தசை னார்கள் மிகவும் சிறியவை .அதனால் அவைகள் மிகவும் நெருக்கமாக திணிக்கப் பட்டிருக்கின்றன. மனிதனின் தசைகளில் இல்லாத சில சிறப்புத் தன்மைகள் பூச்சிகளின் தசைகளில் உள்ளன. தூண்டி ஊக்கமூட்டிக்கொள்வதால் இதன் தசைகளின் வலிமை அதிகமாக இருப்பதுடன் களைப்பின்றி நெடு நேரம் ஏறும்பால் வேலை செய்யவும் முடிகிறது
எழுதாத கடிதம். நாம் முன்னேறுகிறோம், இந்தியா முன்னேறிக் கொண்டே இருக்கிறது என்று மேடைப் பேச்சாளர் பேசும் போதெல்லாம் எனக்குள் ஓர் உறுத்தல் தலை தூக்கும்.சும்மா இருந்தாலே உடம்பு வளரும் ,நாளும் பொழுதும் மலரும். அதையெல்லாம் முன்னேற்றம் என்று கூறிவிட முடியாது என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நாம் உண்மையிலேயே முன்னேறி இருந்தால் நேற்று வாழ்ந்ததை விட இன்று இன்னும் வளமாக அல்லவா வாழவேண்டும் . நிலைமை அப்படியா இருக்கிறது ஒரு தனி மனிதனின் முன்னேற்றம் என்பது மூளை வளர்ச்சி, செயலாற்றும் திறன் மட்டுமே இன்றைக்கு மின்சாரம் முழு அளவில் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. நாளைக்கு சில நாள் அப்படிக் கிடைத்தாலும் தொடர்ந்து அப்படியே கிடைக் குமா என்பதும் ஐயமே , சிலவிடங்களில் உணவுப் பஞ்சம். பல இடங்களில் உணவு சரியாகக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் பலருக்கும் சரியான அளவில் சரியான சத்துணவு கிடைப்பதில்லை. தூய குடிநீர் எப்போதும் பிரச்சனைதான் .நீரும் தாராளமாகக் கிடைப்பதில்லை. அத்தியாவசியப் பண்டங்கள் சரிவரக் கிடைப்பதில்லை .கட்டுப் படுத்த முடியாத கலப்படத்தின் ஆதிக்கம் எரிபொருள் தட்டுபாடு. .பெட்ரோல் ,டீசல் பற்றாக்குறை .மின்சாரம் நாள் முழுதும் கிடைப்பதில்லை . மோசமான சாலை வசதிகள் சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லை. பராமரிப்பும் இல்லை. எங்கும் எதிலும் எல்லோரும் ஏமாற்றப் படும் நிலை தலை விரித்தாடும் இலஞ்சம் ,ஊழல் . மனிதர்களுக்கு மனிதர்களே எதிரிகளாகிப் போனதால் ,குற்றங்களின் பெருக்கம் .தாய் நாட்டிற்கு விசுவாசமில்லாத தலைவர்கள் - உழைப்பில்லாமலே ஊதியம் பெற விரும்பும் அதிகாரிகள்,அலுவலர்கள்., இப்பொழுத் சொல்லுங்கள் நாடு முன்னேறுகிறதா ? எல்லாப் புள்ளி விவரங்களுமே உண்மை நிலையை சித்தரிப்பதாகக் கூற முடியாது. அதற்குக் காரணம் புள்ளி விவரங்கள் நம்பகத் தன்மையை இழந்து வருவதுதான்.பொதுவாக புள்ளி விவரங்கள் என்பது வாய்ப்புகள் பற்றிய அறிவியலே ஒழிய உண்மை நிலையைப் படம் பிடித்துக் காட்டும் மாயக் காண்ணாடி இல்லை. இன்றைய அரசியல் வாதிகளும் ,அதிகாரிகளும் சாதாரண மக்களுக்குப் புரியாதபடி புள்ளி விவரங்களை பெரிய பெரிய எண்ணிக்கையால் சொல்லி மலைப்பை ஏற்படுத்தி பெரிய அளவில் முன்னேற்றத்தை அடைந்து விட்டதாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மை நிலை உண்மையிலேயே வேறு. பல நமக்குத் தெரியாமலேயே நடைபெறுகின்றன .பல நமக்குத் தெரிந்து நடந்தாலும் அல்லது தெரிய வந்தாலும் நாம் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கண்டு கொள்ளாமல் சும்மா இருந்து விடுகின்றோம். சிலர் நம்மை அது நேரடியாகப் பதிக்கவில்லை என்று ஒதுங்கிக் கொண்டு விடுகின்றார்கள். சிலவற்றை நிரூபிக்க முடியாததால் விட்டு விடுகின்றார்கள் .சிலவற்றை நிரூபிக்க முடிந்தாலும் வலிமையான எதிரியைச் சமாளிக்கப் பயந்து தவிர்த்து விடுகின்றார்கள். அல்லது எதிரி தன் செல்வாக்கினால் தப்பித்துக் கொள்கிறார். இப்படிப் பட்ட சூழலில் நாம் தயாரிக்கும் எந்தப் புள்ளி விவரங்களும் முழு அளவில் உண்மையாக இருக்கவே முடியாது

Wednesday, April 25, 2012

cartoon

இரண்டு எம் எல் ஏ க்களின் அப்பாக்கள் வாக்கிங் போய்கொண்டிருந்த போது எதேச்சையாக சந்தித்துக் கொண்டார்கள். முதல் அப்பா : என்ன சௌகரியமா ? உங்கள் மகன் விரைவில் அமைச்சராகி விடுவார் என்று பேசிக்கொள்கின்றார்களே.வாழ்த்துக்கள். இரண்டாவது அப்பா : சும்மா நக்கல் பண்ணாதிங்க.அப்போ பள்ளிக் கூடத்திலே தூங்கின மாதிரி இப்ப சட்ட சபையிலும் தூங்கிறான். அதை டிவீ யில வேற அப்பட்டமாக காண்பித்து விட்டார்கள் .எப்படி அமைச்சர் பதவி கிடைக்கும் ? அமைச்சர் பதவிக்கு உங்கள் மகன்தான் கிளிக் லிஸ்டில் இருப்பதாக எங்கள் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றார்களே முதல் அப்பா : அட நீங்க ஒன்னு.இவன்தான் சட்ட சபையில் செல்போனில் செக்ஸ் படம் பார்த்துக் கொண்டிருந்ததை அப்படியே படம் பிடித்து ஒளிபரப்பி விட்டார்களே.அதே கதைதான் இங்கும் .

eluthaatha kaditham

பள்ளிக் கூடத்தில் தமிழாசிரியர் "தலைவர்கள் -அன்றும் இன்றும் " என்ற தலைப்பில் ஓரிரு வார்த்தைகளில் கருத்து கூறுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டார். துப்புரவுப் பணியாளரின் மகன் அன்றையத் தலைவர்கள் சந்தனம் ,இன்றையத் தலைவர்கள் சாக்கடை வானிலை மைய அதிகாரியின் மகள் அவர்கள் தென்றல் இவர்கள் பூகம்பத்தோடு வரும் புயல் பத்திரப் பதிவு எழுத்தரின் மகன் அவர்கள் இந்தியாவின் சொத்து ,இவர்களுக்கு இந்தியாவே சொத்து பூக்கடைக்காரரின் மகள் அவர்கள் பூமாலை இவர்கள் வெறும் நார் காவல்காரரின் மகள் அவர்கள் நிஜம் இவர்கள் நிழல் தொழிலாளியின் மகன் அவர்கள் உழைக்க வந்தவர்கள் இவர்கள் பிழைக்க வந்தவர்கள் வேதியியல் பேராசிரியரின் மகன் அவர்கள் ஓசோன் படலம் இவர்கள் புளுரோ கார்பன் ஏலக்காய் வியாபாரியின் மகள் அவர்கள் ஏலக்காய் இவர்கள் எட்டிக்காய் குறும்படத் தயாரிப்பாளரின் மகன் அவர்கள் சபையில் மக்களுக்காக குரல் எழுப்புவார்கள் ,இவர்கள் மறைவாக செல்போனில் படம் பார்ப்பார்கள் சொல்லும் விதம் வேறுவேறாக இருந்தாலும் சொல்ல வரும் கருத்து ஒன்றுதான்

cartoon

அடுத்த வீட்டில் அப்பாவும் LKG படிக்கும் பாலகனும் பேசிக்கொண்டது. அப்பா : மணியாச்சு .இன்னும் பள்ளிக் கூடம் போகலையா ? மகன் :இல்லப்பா ,இன்னிக்கு பள்ளிக் கூடம் போகலப்பா அப்பா :நீ வாங்குற முட்டைகளை (மார்க்குகளை) அந்த அலமாரியில் உடையாம அடுக்கிவை ,சரியா ? மகன் :சரிப்பா, ஆனா நீங்க வாங்கி முன்னமே அடுக்கி வைத்திருக்கும் முட்டைகளை வெளியே எடுத்தாதான் நான் வைக்கமுடியும்ப்பா

Tuesday, April 24, 2012

vethith thanimangal-Chemistry

பெர்லியத்தின் பயன்கள் பெர்லியம் உயரளவு உருகுநிலையும் எக்கை விட உறுதியாகவும் இருப்பதால் வானவூர்தி ,விண்ணூர்தி ,ஏவூர்தி போன்றவைகளின் கட்டமைப்பிற்கு பயன்தருகிறது. பீற்று வழி(Nozzle) பற்சக்கரத் தொகுதி(Gears)வேகத்தடையூட்டி(Break) போன்றவைகளில் பெர்லியத்தின் பயன்பாடு குறிப்பிடத்தக்கது .
ஹைட்ரஜனுக்கு அடுத்தபடியாக ஆக்சிஜனில் எரிந்து மிகஅதிக வெப்பம் வெளியிடும் தனிமம் பெர்லியமாகும். ஒரு கிராம் பெர்லியம் 17 .2 கிலோ காலரி வெப்பத்தை வெளியிடுகின்றது. இது அலுமினியத்தைக் காட்டிலும் அதிகமாகும். இதனால் எவூர்த்திக்கான திண்ம எரிபொருளாக பெர்லிய உலோகப் பொடியைப் பயன்படுத்த முடிகிறது. பெர்லியம் ஆற்றல் மிக்க எரிபொருளாயினும் இதன் எரி விளைமங்கள் (products) நச்சுத்தன்மை உடையன.பெர்லியோசிஸ் என்ற பாதிப்பைத் தூண்டுகின்றன. இதனை அடுக்கு எவூர்திகளில்(Multistage rockets) மேனிலை அடுக்குகளில் மட்டுமே எரிபொருளாகப் பயன்படுத்துவது உகந்தது . பெர்லியத்தின் நியூட்ரான் உட்கவர் வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதால் ,நியூட்ரான்களை அணு உலைக்குள்ளேயே வைத்திருக்கச் சரியான நியூட்ரான் எதிரோளிப்பானாக பெர்லியம் பயனளிக்கிறது. பெர்லியத்தை விட பெர்லியம்-செம்பு கலந்த கலப்பு உலோகம் நற்பயனளிக்கிறது. அணு உலையைச் சுற்றி பெர்லியத்தாலான மெல்லிய சுவர் நியூட்ரான் கசிவைத் தடுக்கிறது. பெர்லியத்தின் பரப்பைத் தேய்த்து வளவளப்பூட்டமுடியும் .இதனால்தான் அதை ஓர் உலோக எதிரோளிப்பானாகப் (metal reflector) பயன்படுத்த முடிகிறது.விண்கலம் தொடர்பான கட்டமைப்புகளில் பெர்லியத்தைப் பயன்படுத்துவதினால் 30 -60 % மூலப் பொருள் மிச்சமாகிறது .நியூட்ரான் கற்றைக்கு உகந்த மூலமாக பெர்லியம் விளங்குகிறது. .அணு உலையில் செயல்பாட்டைத் தொடங்கி வைப்பதற்கு இது பயன் தருகிறது. பெர்லியம் எக்ஸ் கதிர்களுக்கு ஊடுருவும் பொருளாக இருக்கிறது. அலுமினியத்தை விட 17 மடங்கு எக்ஸ் கதிர்களை உட்செல்ல அனுமதிக்கிறது. இதனால் எக்ஸ் கதிர் உபகரணங்களில் சன்னல்களை அமைத்து எக்ஸ் கதிர்களை ஒரு திசையில் செலுத்த பெர்லியம் பயனளிக்கிறது. பெர்லியம் ஆக்சைடு ஒரு வெப்பங் கடத்தாப் பொருள் மின் சாதனங்களுக்கான துணைக் கூறுகளை உற்பத்தி செய்ய இது ஒரு மூலப் பொருளாக உள்ளது. மின் காப்புப் பொருட்கள் ,மின் பொறித் தக்கைகள்
(spark plug ) உயர் அதிர் வெண் (frequency) இராடருக்கான ஏமச் சாதனங்கள் (Insulator) பீங்கான் போன்றவைகள் பெர்லியம் ஆக்சைடால் உற்பத்தி செய்யப்படுகின்றன.பெர்லியமும் செம்பும் கலந்த கலப்பு உலோகமான பெர்லிய வெண்கலம் பெற்றிருக்கும் உயர் திண்ம உரவு ,முறிவு மற்றும் அரிமானத்தி ற்குஎதிர்ப்பு நீண்ட வெப்ப நிலை நெடுக்கையில் மீள் திறன் ,உயர் மின் மற்றும் வெப்பங் கடத்தும் திறன் போன்ற பண்புகளினால் இது பல இயந்திர உதிரி உருப்புக்களைச் செய்வதற்குப் பயன்படுகிறது. தேய்மானம் குறைவாக இருப்பதால் நீண்ட நாள் பயனுக்கு வருகிறது. உயர் மீள் திறனால்(Elasticity ) இது சுருள் வில்களை உருவாக்கப் பயன்தருகிறது. அதனால் இதை சுருள் வில் உலோகம் (spring metal ) என்பர். கைக் கடிகாரங்களிலும் ,கன இரக வண்டிகளிலும் ,இரயில் வண்டிகளிலும் தேவைப்படுகின்ற வலுவான முறிவிலாத சுருள் வில்களுக்கு இது பயனளிக்கிறது.
பெர்லிய வெண்கலம் உறையும் போது ஏற்படும் வெப்பத்தால் தீப் பொறியை ஏற்படுத்துவதில்லை .இதனால் எண்ணெய் கிடங்குகள் எரிபொருள் மற்றும் எரி வளிம சுத்திகரிப்பு ஆலைகள் ,எரி வளிமப் பொதிகலன் ,வெடி மருந்துக் கலன் போன்றவைகளுக்கு இது அனுகூலமாய் இருக்கிறது. கார்பன் எக்குடன் சிறிதளவு பெர்லியத்தைச் சேர்க்க அதன் முறிவு எதிர்ப்புத் தன்மை பல மடங்கு அதிகரிக்கின்றது. எக்குப் பரப்புக்களை பெர்லியனேற்றம் (beryllization) செய்வதால் அதன் வலிமை, கடினத்தன்மை ,தேய்மானமின்மை போன்ற தன்மைகள் அதிகரிக்கின்றன. மக்னீசியம் காற்று வெளியில் எரிந்து சாம்பலாகக் கூடியது. மக்னீசியக் கலப்பு உலோகங்களில் 0 .01 % பெர்லியம் கலந்தாலே உலோகப் பற்ற வைப்புப் பயனின் போது அது எரிந்து சாம்பலாகி விடுவதில்லை. பெர்லியமும் லிதியமும் கலந்த கலப்பு உலோகம் நீரில் மூழ்குவதில்லை .இதன் பயன் கடல் சார்ந்த ஆய்வுகளிலும் ,படகு, கப்பல் கட்டுமானத் துறைகளிலும் ,மிதவை உடைகள் தயாரிப்பதிலும் பெரிதும் உணரப்பட்டுள்ளது.

creative thoughts-kettavai

creative thoughts கேட்டவை எனக்கு இலக்கியத்தில் அதிக ஈடுபாடு இல்லை. சமீபத்தில் ஒரு நாள் காரைக்குடியில் மாதாமாதம் நடைபெறும் கம்பன் கருத்தரங்கச் சொற்பொழிவுக்கு நண்பருடன் சேர்ந்து கேட்கும் கட்டாயம் ஏற்பட்டது .அப்போது சொற்பொழிவாளர் ஒரு கதையைக் கூறினார். " கம்ப ராமாயணச் சொற்பொழிவு நடந்து கொண்டிருக்கும் போது இடையில் சொற்பொழிவாளர் அரங்கத்தில் இருப்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ராமாயணத்தில் உங்களுக்குப் பிடித்த காதாபாத்திரம் யார் ? சிலர் ராமன் என்றும் ,சிலர் இலக்குவன் என்றும் ,வேறு சிலர் விபிஷணன் என்றும் பலவாறாகக் கூறினார். அப்போது ஒருவர் எழுந்து எனக்குப் பிடித்த கதாபாத்திரம் தசரதன் என்று கூற சொற்பொழிவாளர் அதை எதிர்பார்க்காததால் திகைத்துப் போனார். ஏன் உங்களுக்கு தசரதனை மிகவும் பிடித்திருக்கின்றது என்று கேட்க பார்வையாளரும் இப்படிக் கூறினார். இராமன் ஏக பத்தினி விரதன். இருந்தும் தன்னுடைய ஒரே மனைவியான சீதையை சந்தேகப்பட்டான் . அதனால் அவள் தீக்குழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது . இது இல்வாழ்கைக்குச் சிறப்பு இல்லை. ஆனால் தசரதன் ஆயிரம் மனைவி மார்களைக் கொண்டவன் என்று கூறுவார்கள் .அது உண்மையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது .ஆனால் அவர் தன் மனைவிகளில் யாரையும் சந்தேகப் படவில்லை என்பது மட்டும் தெரியும் . என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தார், கணவன்- மனைவிக்கு இடையே இருக்க வேண்டிய அடிப்படையான புரிதல் என்பது தசரதனிடம் இருந்தது, இராமனிடம் இல்லை.அதனால் எனக்குத் தசரதனைப் பிடிக்கும் என்று கூற அவையோர் அனைவரும் இதைக் கேட்டு ரசித்தனர்.இக் கருத்து ஏற்புடையதாக இருந்ததோ இல்லையோ சொற்பொழிவாளர் இதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்க வில்லை .

Vinveliyil Ulaa- Space science

எப்சிலான் ஔரிகே 1937 ல் அமெரிக்க வானவியலாரான கெய்பர்(D .Kuiper), ஸ்ட்ரூவ்(Struve) மற்றும் ஸ்ட்ரோம்கிரண் (B .Stromgren) போன்றவர்கள் இவ்விந்தை மிகு விண்மீனின் நிறமாலையைப் பகுப்பாய்வு செய்தனர் .அதன் மூலம் இவ் விண்மீனைப் பற்றிய பல புதிய உண்மைகளைத் திரட்டித் தந்துள்ளனர். பொதுவாக பெரிய உருவங் கொண்ட முதன்மைத் தொடர் விண்மீன்களின் புறப் பரப்பு அதிகமாக இருப்பதால் ,உமிழப்படும் ஒளியும் அதிகமாக இருக்கும். அதனால் அவற்றின் பிரகாசமும் அதிகமாக இருக்கும் எனலாம். ஆனால் எப்சிலான் A விண்மீன் பெரியதாக இருந்தும்,குறைந்த ஒளிர்திறனைப் பெற்றிருப்பதேன்? இதற்குக் காரணம் இந்த விண்மீன் ஒரு குளிர்ச்சியான புறப்பரப்பு வெப்ப நிலை 1350 டிகிரி கெல்வினாக உள்ள ஒரு விண்மீனாக இருப்பதும் ,அது கட்புலனுக்கு உட்படாத அகச் சிவப்புக் கதிர்களை அதிகம் உமிழ்வதும் தான் மேலும் இதன் சராசரி அடர்த்தி மிகவும் குறைவாக இருப்பதால் ஒளி ஊடுருவக் கூடிய ஓர் ஊடகம் போலச் செயல் படுகிறது. அதனால் தான் முதன்மை விண்மீனை (எப்சிலான் B ) துணை விண்மீன் (எப்சிலான் A ) இடை மறைப்பு செய்யும் போது அதன் நிறமாலையில் குறிப்பிடும் படியான மாற்றம் காணப்படுவதில்லை. அப்படியானால் எப்சிலான் B ன் பிரகாசத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு என்ன காரணம் என்பதற்குத் தகுந்த விளக்கம் கொடுக்க வேண்டியிருகின்றது . அமெரிக்க ஆய்வாளர்கள் எப்சிலான் B,சூரியனை விட 47000 மடங்கு ஒளியை உமிழ்கிறது என்றும் இது தனக்கு அருகாமையிலுள்ள அகச் சிவப்பு எப்சிலான் A விண்மீனின் அருகிலுள்ள புறக்கூட்டுப் பகுதியை அயனித்து விடுகிறது என்றும் கூறுகின்றார்கள் . எப்சிலான் B ,A க்குப் பின்னால் இருக்குப் போது அயனிக்கப்பட்ட பகுதி பூமியிலுள்ள பார்வையாளர்களுக்கு மறைக்கப் பட்டுவிடுகிறது. அயனிக்கப்பட்ட ஊடகம் அயனிக்கப்படாத ஊடகத்தை விட ,ஒளி ஊடுருவலை அதிகம் தடுப்பதால் எப்சிலான் B மங்கலாகத் தெரிகிறது. எப்சிலான் A யின் கண்ணுக்குப் புலப்படாத இருண்ட பொருட்கூறுகளாலான பகுதிகள் உள்ளன இது விண்மீனின் விளிம்பைச் சுற்றி தடித்த வளையமாக இருக்கிறது .தூசிகளடங்கிய இந்த வளையம் 20 வானியல் தொலைவு வரை விரிந்துள்ளது. இந்த வளையத்தின் மையத்தில் ஒரு இடைவெளி காணப்படுகிறது. எப்சிலான் B மறைப்பின் மைய நிலையில் இதை ஓரளவு ஒளிர்வூட்டும்போது ,கண்ணால் காண முடியாத வளையத்தின் மையத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள முடிகிறது. தீட்டா(θ) ஔரிகே இவ் வட்டாரத்திலுள்ள தீட்டா(θ) ஔரிகே 173 ஒளி ஆண்டுகள் தொலைவில் , தோற்ற ஒளிப்பொலிவெண் 2 .65 உடன் உள்ளது. தனிக் கொத்து விண்மீன் கூட்டங்கள் ஔரிகா வட்டார விண்மீன் கூட்டத்தில் பல முரண்பாடான மறைப்பு மாறொளிர் விண்மீன்கள் மட்டுமின்றி ,பல தனிக் கொத்து விண்மீன் கூட்டங்களும் காணப் படுகின்றன.இதில் M.36(NGC 1960),M.37 (NGC.2098),M.38 (NGC 1912) எனப் பதிவு செய்யப்பட்ட மூன்று கொத்து விண்மீன் கூட்டங்களை இனமறிந்துள்ளனர். M.36 ம்,M.37 ம் தீட்டா ஔரிகே மற்றும் பீட்டா டாரி இணைப்புக் கோட்டிற்கு இரு பங்கங்களிலும் அமைந்துள்ளன. . M .36 ஐங்கோணத்திற்குள்ளும் ,M 37 வெளியில் தீட்டா ஔரிகேவிற்கு சற்று நெருக்கமாகவும் இருக்கின்றன. M.36, M.37 ஐ விட உருவ அளவில் சிறியது என்றாலும் இதில் பிரகாசமிக்க விண்மீன்கள் அதிக முள்ளன. M.36 ல் 60 விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் ,விட்டம் 20 ஒளி ஆண்டுகள் என்றும்,இதன் சராசரி ஒளிப்பொலிவெண் 6.3 என்றும் M.37 ல் 500 விண்மீன்கள் வரை இருக்கலாம் என்றும் இதில் 120 விண்மீன்கள் மங்கலாகவும் ஒளிப்பொலி வெண் 12 .5 என்ற அளவிலும் பிற பிரகாசமிக்கவைகளாகவும் ஒளிப் பொலி வெண் 6 .2 என்ற அளவிலும் உள்ளது. என்றும் விட்டம் 36 ஒளி ஆண்டுகள் என்றும் ஐந்துள்ளனர். மங்கலான தனிக் கொத்து விண்மீன் கூட்டத்தில் M.37 ம் ஒன்று. அதனால் இருண்ட பின் புலத்தில் மட்டுமே இதைத் தெளிவாகக் காண முடியும். இவ்விரு கொத்து விண்மீன் கூட்டங்களும் 3800 - 4000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.M .38 ஐங்கோண வடிவத்திற்குள் தீட்டா மற்றும் அயோட்டா (i) ஔரிகேக்கு இடையில் உள்ளது .இது 3200 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது. இதன் விட்டம் சுமார் 42 ஒளி ஆண்டுகள். இதில் உள்ள பிரகாசமான விண்மீன்கள் X வடிவில் தோன்றியிருக்கின்றன .

Monday, April 23, 2012

creative thoughts- kettavai

சூரியன் எழுவதற்கு முன்னர் எழ வேண்டும் என்று சான்றோர்கள் கூறுவார்கள் . இறைக்கு பெரும்பாலான மாணவர்கள் இரவில் வெகு நேரம் தூங்காமல் பொழுதைக் கழித்தாலும் கழிபார்கள் ஆனால் விடியற் காலையில் சீக்கிரமாக படுக்கையை விட்டு எழ மாட்டார்கள். எங்கள் ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்புரை ஆற்றிய திருச்சி ஓய்வு பெற்ற டி எஸ் பி திரு A .கலியமூர்த்தி இதையே வேடிக்கையாகவும் விவரமாகவும் கூறிய போது மாணவர்கள் அதை சிரிப்பொலியுடன் உள்வாங்கிக் கொண்டார்கள் . காலையில் 3 மணிக்கு எழுந்திருப்பவன் முனிவன் ,4 மணிக்கு எழுந்திருப்பவன் ஞானி ,5 மணிக்கு எழுந்திருப்பவன் அறிஞன் , 6 மணிக்கு எழுந்திருப்பவன் மனிதன் ,7 மணிக்கு எழுந்திருப்பவன் எருமை என்று சொல்லிவிட்டு இதில் நீங்கள் எந்த இரகம் என்று கேட்க மாணவர்கள் சிரிப்போடு சிந்திக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்

Sunday, April 22, 2012

vethith thanimangal -Chemistry

பெர்லியம் (Beryllium) கண்டுபிடிப்பு 1798 ல் பெரைல்(Beryl)என்று அழைக்கப்பட்ட பெர்லியம் அலுமினியம் சிலிகேட் என்ற கனிமத்தில் ஒரு புதிய தனிமம் இருக்க வேண்டும் என்று அதன் ஆக்சைடை மட்டும் பிரித்தெடுத்தவர் பிரஞ்சு நாட்டு வேதியியல் அறிஞரான நிக்கோலஸ் லூயிஸ் வாக்குலின் இதைக் குளுசினியம்(Glucinium)என அழைக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.இச் சொல் இனிப்பு என்று அர்த்தப்படும் கிரேக்க மொழிச் சொல்லான கிளைகைஸ்(glykys)என்ற சொல்லிலிருந்து உருவானது. இன்றைக்கு இப் பெயர் பிரான்சு நாட்டில் மட்டும் புழக்கத்தில் உள்ளது .பிற நாடுகளில் கலாப்ரோத் என்ற வேதியியலார் சூட்டிய பெர்லியம் என்ற பெயரே நிலைபெற்றது .இது பெரைல் என்ற சொல்லிலிருந்து வந்தது. என்றாலும் இதன் மூலச்சொல் மரகதம் என்று பொருள்படும் பெரைலோஸ் என்ற கிரேக்க மொழிச் சொல்லாகும்.
பெர்லியத்திற்கு 30-ம் மேற்பட்ட கனிமங்கள் அறியப்பட்டிருந்தாலும் இவற்றுள் பெரைல்,பினாசைட்,கிரைசோ பெரைல் மற்றும் பெர்ட்ரான்டைட் போன்றவை முக்கியமானவை ஆகும்.பெரைலில் 11 - 13 % பெர்லியம் ஆக்சைடு உள்ளது. இந்த உலோகம் பூமியின் மேலோட்டுப் பகுதியில் பரவலாக 0 .001 % செழிப்புடன் காணப்படுகின்றது .இந்தியா, பிரேசில் அர்ஜென்டினா,கனடா,அமெரிக்கா,காங்கோ.தென்ஆப்ரிக்கா,உகண்டா,மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெரைல் கனிமம் மிகுதியாகக் கிடைக்கின்றது 1928 ல் வோலர் (F.Wohler) மற்றும் புஸ்சி(A.A.Bussy)பெர்லியத்தைத் தனித்துப் பிரித்தெடுக்கும் வழி முறையைக் கண்டறிந்தனர். எனினும் சில ஆண்டுகளுக்குப் பிறகு லிபியூ(P.Lebeau) என்ற பிரஞ்சு நாட்டு விஞ்ஞானியே தூய பெர்லியத்தை உப்பூட்டிய மின்னாற் பகு நீர்மத்திலிருந்து பிரித்தெடுக்கும் வழி முறையைக் கண்டறிந்தார்.இன்றைக்கு வர்த்தக அடிப்படையில் பெர்லியம் புளுரைடை ஆக்சிஜனிறக்க வினைக்கு மக்னீசியத்தால் உட்படுத்தி பெர்லியத்தைப் பெறுகின்றார்கள் . பண்புகள்
இதன் வேதிக் குறியீடு Be. இதன் அணு வெண் 4, அணு நிறை 9.012 ,அடர்த்தி 1850 கிகி /கமீ.உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1553 K ,2773 K ஆகும். இது எக்கைப்(Steel) போன்று சாம்பல் நிறத்தில் பளபளப்பாய்த் தோன்றுகிறது. இது லித்தியத்திற்கு அடுத்து லேசான உலோகம் என்றாலும் அதன் உருகு நிலை வேறு பல லேசான உலோகங்களை ஒப்பிட மிகவும் அதிகம் .பெர்லியத்தை உருக்கி வார்ப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. எனினும் இப்படி வார்க்கப்பட்ட பெர்லியம் அறை வெப்ப நிலையில் தடாக அடிப்பதற்கும் ,கம்பியாக இழுப்பதற்கும் இணக்கமாக இருப்பதில்லை .இதனால் பொடித்துகள் உலோகவியல்(Powder mettalurgy) வழிமுறைகளைப் பின் பற்றி ஒருபடித்தான துகள் படிவுப் பொருளைப் பெற்றுச் சிக்கலை எதிர் கொள்கின்றார்கள் . இதன் மீள் திறன் (Elasticity ) எக்கைக் காட்டிலும் அதிகம் எக்கை விட 33 % கூடுதலாகப் பெற்றுள்ளது. இது காந்தப் பண்பைக் கொண்டிருக்க வில்லை ,இதன் வெப்பங் கடத்தும் திறன் மிகவும் அதிகம் .அடர் நைட்ரிக் அமிலத்தின் தாக்கத்தால் சிறிதும் பாதிக்கப் படுவதில்லை .எக்ஸ் கதிர்களை உட்புக அனுமதிக்கிறது. இதன் மீது ஆல்பா கதிர்கள் விழுமாறு செய்தால் ,நியூட்ரானை உமிழ்கிறது .ஒரு மில்லியன் ஆல்பாத் துகள்கள் விழும் போது 30 நியூட்ரான்கள் வெளிப்படுகின்றன. என்றாலும் இதுவே நியூட்ரா னுக்கு வலுவான மூலமாகும். பெர்லியத்தின் வேதிப் பண்புகள் பெரும்பாலும் அலுமினியத்தை ஒத்திருக்கின்றன.அலுமினியத்தைப் போல பெர்லியமும் ஆக்சைடு கவசப் படலத்தைத் தன புறப் பரப்பின் மீது காற்று வெளியில் ஏற்படுத்திக் கொள்கிறது.இது ஆக்சிஜனேற்றத்தால் ஏற்படும் அரிமானத்தைத் தடுக்கிறது. எனினும் படலத்தால் கவரப்பட்ட பெர்லியம் நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் ,கந்தக அமிலங்களோடு வினை புரிகின்றது எனவே இந்த ஆக்சைடு மேற்படலம் அமில அரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில்லை . 900 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலைக்கு அப்பால் நைட்ரஜன் பெர்லியத்தோடு வினை புரிந்து பெர்லியன் நைட்ரைடை உண்டாக்குகின்றது.காரக் கரைசல்கள் பெர்லியத்துடன் வினை புரிந்து ஹைட்ரஜன் வளிமத்தை வெளியேற்று கின்றன. .

Saturday, April 21, 2012

மென்ஹானா (Menkahna) எனப்படும் பீட்டா (β) ஔரிகே இவ்வட்டார விண்மீன் கூட்டத்தில் இரண்டாவது பிரகாசமான விண்மீனாகும். 82 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இதன் தோற்ற ஒளிப் பொலி வெண் 1.90 .இதன் பிரகாசம் சீரான கால இடைவெளியில் மாறிக் கொண்டிருப்பதால் இதன் நிறமாலையை நுட்பமாக ஆராய்ந்தனர். அப்போது இது ஒரு மறைப்பு மாறொளிர் விண்மீன் எனத் தெரிந்து கொண்டனர். இதிலுள்ள இரு விண்மீன்களும் ஏறக் குறைய ஒரே மாதிரியான வெப்ப மிக்க ,நீல நிறங் கொண்ட பெரு விண்மீன்களாகும் இவற்றின் ஆரம் 1.9 மில்லியன் கிலோ மீட்டர் ஆகவும்,சூரியனைப் போல 2.4 மடங்கு நிறைமிக்கனவாகவும் உள்ளன. இவை யிரண்டிற்கும் சற்றேறக் குறைய சமமான அடர்த்தியும் , ஒளிர் திறனும் கொண்டுள்ளன. இவையிரண்டும் 12.5 மில்லியன் கிலோ மீட்டர் இடைவெளியுடன் ஒன்றை ஒன்று 3.96 நாளில் ஒரு முறை என்ற வீதத்தில் வலம் வருகின்றன. அப்போது ஒன்றையொன்று இடை மறைப்பதால் ,அதன் பிரகாசத்தில் ஏற்றத் தாழ்வு ஏற்படுகின்றது . ஐங்கோண உருவத்தில் அமைந்திருக்கும் இதன் பிரகாசமான விண்மீன்களில் பீட்டா ஔரிகேக்கு எதிர்பக்கத்தில் ஹய்டெஸ் (Haedus ) எனப்படும் சீட்டா (ς ) ஔரிகே என்ற மறைப்பு இரட்டை விண்மீன் உள்ளது. இதிலுள்ள இரு விண்மீன்களும் முற்றிலும் மாறுபட்டவை .789 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள முதன்மை விண்மீன் ஒரு K வகை மாறொளிர் விண்மீனாகும். இது சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்துடன் மாபெரும் விண்மீனாக உள்ளது, இதன் நிறை சூரியனைப் போல 5 .8 மடங்கு ,ஆரம் சூரியனைப் போல 148 மடங்கு .அதாவது இதன் உருவம் நமது சூரியக் குடும்பத்தில் பூமியின் சுற்றுப் பாதைக்கு இணையாக இருக்கின்றது. .இதன் புறப் பரப்பு வெப்ப நிலை 3960 டிகிரி கெல்வினாகும்.இதன் துணை விண்மீன் நீல நிறமும் 15300 டிகிரி கெல்வின் புறப் பரப்பு வெப்ப நிலையும் கொண்டுள்ள B வகை விண்மீனாகும் முதன்மை விண்மீன் சூரியனைப் போல 4800 மடங்கு பிரகாச மிக்கதாகவும் ,துணை விண்மீன் 1000 மடங்கு பிரகாச மிக்கதாகவும் உள்ளன. இவ்விரு விண்மீன்களும் ஒன்றை யொன்று 2 .7 ஆண்டுகளில் (972 நாட்களில் ) சுற்றி வர ,மறைப்பு நிலை நாற்பது நாட்கள் வரை நீடிக்கின்றது . அப்போது அதன் ஒளிப் பொலிவெண் 3 .7 முதல் 4 .0 வரை மாற்றம் பெறுகிறது.இதன் சுற்றுப் பாதை ஏறக்குறைய நமது வியாழனின் வட்டப் பாதைக்கு இணையானது .இவை சுற்றி வரும் பாதையின் தளமும்,பூமியிலிருந்து நோக்கும் திசையும் ஒன்றாக இருப்பதால் ,அவை சுற்றி வரும் பொது மறைப்பு ஏற்படுகின்றது.
மாபெரும் சிவப்பு விண்மீன்.சிறிய நீல நிற விண்மீனை மறைக்கும் போது பிரகாசத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே ஏற்படுகின்றது .சிவப்பு நிற விண்மீனைச் சுற்றி போர்வை போல ஒரு மங்கலான மேகம் காட்சி தருகிறது. இது நீல நிற விண்மீனின் ஒளியால் ஒளிரும் மாபெரும் சிவப்பு விண்மீனின் பரந்த வளிமண்டலமாகும் .நிறமாலை ஆய்வுகள் இதில் கால்சியம் செறிவுற்றிருப்பதை த் தெரிவித்துள்ளன. இந்த இரட்டை விண்மீன் 80 மில்லியன் ஆண்டுகள் வயதானவை என்று அறிந்துள்ளனர். 2040 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள அல்மாஸ் (Alma'az ) எனப்படும் எப்சிலான்(ε) ஔரிகே காபெல்லாவிற்கு அருகாமையில் சிறிய முக்கோண வடிவத்தை ஏற்படுத்தும் மூன்று விண்மீன்களில் ஒன்றாகும். அரேபிய மொழியில் அல்மாஸ் என்றால் ஆண் ஆட்டைக் குறிக்கும் .இதுவும் மறைப்பு வகை இரட்டை விண்மீனாகும். இரட்டை விண்மீன்களில் இது சற்று வேறுபட்டதாகக் காட்சியளிக்கிறது. .இதில் மஞ்சளும் வெண்ணிறமும் கொண்ட ஒரு மாபெரும் விண்மீன் உள்ளது. இதை எப்சிலான் B என்று குறிப்பிடுவர். இது கண்களுக்குப் புலப்பட்டுத் தெரிகிறது. இதன் சராசரி ஒளிப்பொலி வெண் 4 ஆகவும் புறப் பரப்பு வெப்பநிலை 7800 டிகிரி செல்சியஸ் ஆகவும் F வகை விண்மீ னாகவும் உள்ளது. இதன் நிறை சூரிய நிறை அலகில் 15 -19 ஆகவும் விட்டம் சூரிய விட்டத்தைப் போல 100 மடங்காகவும் இதன் பிரகாசம் 47000 சூரியப் பிரகாசத்திற்குச் சமமாகவும் உள்ளது. இதன் துணை விண்மீன் (எப்சிலான் A ) கண்ணுக்குத் தெரிவதில்லை .எனினும் இதன் உருவ அளவு மிகவும் பெரியதாக இருக்க வேண்டும் என அறிந்துள்ளனர். இதன் விட்டம் சூரியனின் விட்டத்தைப் போல 2700 மடங்கு ,இது வரை அறியப்பட்ட விண்மீன்களுள் இதுவே உருவத்தால் பெரியது .இது நமது சூரியக் குடும்பத்தில் சனிக் கோள் வரை உள்ள வெளியை உள்ளடைக்கியது ,அதாவது இதன் விட்டம் ஒரு வானியல் தொலைவிற்கும் (astronomical distance - பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ) அதிகமானது. இவ்வளவு பெரியதாக இருப்பினும் இதன் ஒளிர் திறன் மிகவும் குறைவு சற்றேறக் குறைய சூரியனைப் போல பிரகாசிக்கின்றது. இதன் ஒளிப் பொலி வெண் சுமார் 16 என மதிப்பிட்டுள்ளனர். இவ் விரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளி ௦. 03 வினாடி என்றும் இடைத் தொலைவு 30 வானியல் அலகு என்றும் கணக்கிட்டுள்ளனர். மிக நெருக்கமாகவும் ,பிரகாசத்தில் மிகுந்த வேறுபாடும் கொண்டு விளங்கும் இந்த இரட்டை விண்மீன்களை ஒளியால் பகுத்துணர்வது இயலாதது .எல்லா மறைப்பு வகை இரட்டை விண்மீன்களில் இது தான் அதிகமாக 27 .1 ஆண்டுகள் அலைவு காலத்தைப் பெற்றுள்ளது. மேலும் மறைப்பு நிலை ஏறக்குறைய 2 ஆண்டுகள் வரை நீடித்திருக்கிறது .பெருமப் பிரகாசம் ,சிறுமப் பிரகாசத்தை விட இரு மடங்காக உள்ளது. அப்போது அதன் ஒளிப்பொலி வெண் 3 .8 லிருந்து 2 .9 ஆக மாறுகிறது. இதன் மறைப்பு நிலையை 1982 -1984 லும்,2009 -2011 லும் கண்டனர்.

creative thoughts- kettavai

தமிழர்களின் தன்மான உணர்ச்சிக்கு ஈடு இணை இல்லை தமிழர்களின் வாழ்க்கையில் எப்போதும் உணர்சிகளுக்கு இடமுண்டு அதிலும் தமிழச்சிகளின் உணர்வுகள் வலிமயானது.உலகில் எந்த நாட்டினராயினும்,எந்த இனத்தவராயினும்,தமிழச்சிகளின் உணர்வுகளுக்கு மேலானது எதுவுமில்லை என்று எங்கள் ராஜ ராஜன் கல்லூரியின் ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த திருச்சி,டிஎஸ்பி ஆகப் பணியாற்றி ஓய்வு பெற்ற A.கலியமூர்த்தி ஓர் உண்மை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தார். "ஒரு முறை தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி காவல் துறைக் கண்காணிப்பாளர்களிடையே ஜம்முவில் நடை பெற்றது. மாநிலத்திற்கு இருவர் எனப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர். ஏற்கனவே மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றதால் அப் போட்டியில் கலந்து கொள்ள நான் தேர்வு செய்யப்பட்டேன். என்னுடன் சைலேந்திர பாபு,விஜயகுமார் மற்றும் ஜாங்கிட் போன்ற பலரும் வந்திருந்தனர். பல சுற்றுக்களுக்குப் பிறகு நானும் கேரளாவிலிருந்து வந்த அஞ்சலி என்ற பெண் காவல் கண்காணிப்பாளரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினோம். இறுதிப் போட்டியில் நான் சுட்ட 6 இரவைகளில் 5 இலக்கின் மையத்திலும் புல்)ஒன்று சற்று விலகியும் துளைத்திருந்தன.அஞ்சலியும் அதுபோலச் சுட்டதால் யார் வெற்றி பெற்றவர் என்று தீர்மானிப்பதில் சிக்கல் இருந்தது. அஞ்சலி சுட்ட இலக்கை நான் ஆராய்ந்த,அவர் என்னை விட வேகமாகவும் துல்லியமாகவும் சூடுகின்றார் எனத் தெரிந்தது.சீட்டுக் குலுக்கிப் போட்டு முடிவு செய்யலாமா என்று நடுவர் கேட்ட போது நான் அதற்கு உடனே ஒப்புக் கொண்டேன் .தொடர்ந்து மூன்று முறை தங்கப் பதக்கம் வாங்கிய நான் இம்முறை அதை இழக்க விரும்ப வில்லை.அதனால் சீட்டு எனக்கு சாதகமாக வரும் என்ற நம்பிக்கை எனக்குள் அப்போது பெரிதாய் தோன்றி இருந்தது. ஆனால் அதற்கு அஞ்சலி ஒப்புக் கொள்ளவில்லை “.இது ஒருவரின் திறமையை மதிப்பிடும் போட்டி .உண்மையான திறமையே ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்க வேண்டும், வாய்ப்புகள் அல்ல” என்றார் . எனவே மீண்டும் போட்டி தொடங்கியது,இம் முறை 10 இரவைகள்,தொலைவு 300 மீட்டரிலிருந்து 500 மீட்டர் . அதில்"நான் 9 இரவைகளை இலக்கின் மையத்திலும் ஒன்றை சற்று விலகியும் சுட்டேன் . எனக்கே வெற்றி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அஞ்சலி 10 இரவைகளையும் மிகச் சரியாக இலக்கின் மையத்தில் சுட்டதால் அவரே போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டார்" . வருத்தமாக இருந்த என்னை நோக்கி வந்த அஞ்சலி" ஐயா கலியமூர்த்தி அவர்களே,இதற்காக வருத்தப் படாதீர்கள்.நான் கேரளாவிலிருந்து வந்திருந்தாலும்,உண்மையில் நான் ஒரு தமிழச்சி.நீங்கள் மூன்று முறை என் தந்தையை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றீர்கள்.என் தந்தையை வென்ற உங்களை வெல்ல வேண்டும் என்பதே என் குறிக்கோளாக இருந்தது.அதற்காக நான் தந்தையிடம் தீவிரமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றேன்" என்று சொன்னார். "அவர் வெற்றி பெற்றதற்கு பயிற்சி மட்டும் காரணமில்லை உணர்சிக்களும்தான் என்பதைப் புரிந்து கொண்டேன் ஒரு தமிழச்சியின் வலிமையான உணர்சிகளுக்கு முன்னால் நான் தோற்று நின்றேன்"

Friday, April 20, 2012

creative thoughts-eluthaatha kaditham

எழுதாத கடிதம் "நல்லாப் படி,கெட்டிக்காரனாக இரு" வீட்டில் அப்பா அடிக்கடி கூறும் அறிவுரை. "படி,முயற்சி செய்,திறமையை வளர்த்துக் கொள்,வல்லவனாக இரு" பள்ளியில் ஆசிரியர் அடிக்கடி கூறும் வார்த்தைகள்.வீட்டிற்கு வரும் உறவினர்களும்,பெற்றோர்களின் நண்பர்களும் ,பள்ளி விழாக்களுக்கு வந்து செல்லும் சிறப்புச் செற்பொழிவாளர்களும் அடுக்கு மொழிகளுடன் இதையே கூறுகின்றார்கள்.அதற்கு அறிவியல் அறிஞர் அப்துல் கலாம்,காலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசன்,கணித மேதை இராமானுஜம்,நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வீ.ராமன் போன்ற நம்மவர்களையும்,அமெரிக்க ஜனாதிபதி அப்ரகாம் லிங்கன்,குத்துச் சண்டை வீரர் முகமது அலி,கணனித் துறையில் கோலோச்சும் பில் கேட்ஸ் போன்ற வெளிநாட்டுக்காரர்களையும் சிலர் உதாரணம் காட்டிக் கூறுவார்கள். வேறு சிலர் தங்கள் வாழ்கையில் சாதித்துக் காட்டிய நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் காட்டுவார்கள்.முன்னேறி வாழ்க்கையில் சிறப்படைவதற்கு முன்னோர்களால் தேர்வு செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்ட வழி முறை இதுதான், இதைவிட சிறந்த வேறு வழி வேறொன்றும் இல்லை என்பதைத்தான் இவை சொல்லாமல் சொல்கின்றன. ஒரு நாள் ஒரு மாணவன் என்னிடம் கேட்டான். " எல்லோரும் திறமை சாலிகளாகவும், வல்லவர்களாகவும் வளர்ந்து விட்டால் அதற்கான தேவை இந்த நாட்டில் இருக்கிறதா ?" இதில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதை அவன் உணர்ந்திருக்கின்றான் .அந்த இடைவெளி நாளுக்கு நாள் அகன்றும் ,ஆழமாகிக் கொண்டும் வருகிறது.அந்த இடைவெளியைத் தாண்ட முடியாமல் இடையில் விழுந்து புதைந்தவர்களின் மௌன மொழி யாருக்கும் கேட்க வில்லை,தமிழ் மொழியில் ஙகர வரிசை யில் உள்ள உயிர்மெய் எழுத்துக்களைப் போல . சம்பாதிப்பவன் தன்னுடைய தேவைக்காகத்தான் சம்பாதிக்க வேண்டும் .தேவை இல்லாமல் தேவைக்கு மேல் சம்பாதிப்பவன் மற்றவனுடைய சம்பாத்தியத்தில் கை வைக்கின்றான். . அதுபோல திறமையானவர்களும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்திக் காட்ட வாய்ப்புக்களைப் பெறவேண்டும் வாய்ப்புக்களைத் தேடுவது அவர்களுடைய பொறுப்பு என்றாலும் ,திறமையை ஊட்டும் நாமும் அவர்கள் தேடும் வாய்ப்புக்களை உருவாக்கி அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்யவேண்டும். போட்டா போட்டிகளில் எல்லா பொறியியல் கல்லூரிகளும் placement programme என்ற பெயரில் இதைத்தான் செய்துவருகின்றன. மக்களுக்காக நாடும் இதைச் செய்ய வேண்டும் .அந்த மாணவனுடைய மௌன மொழிக்கு இது தான் உரையோ .

Thursday, April 19, 2012

vinveliyil ulaa

ஔரிகா(Auriga)

இந்த வட்டார விண்மீன் கூட்டம் பெர்சியசுக்கும் அர்சா மேஜருக்கும் நடுவில் அமைந்துள்ளது.இது குதிரை பூட்டிய தேரின் தேரோட்டியாகக்(Charioteer) கற்பனை செய்யப்பட்டுள்ளது.கிரேக்க புராணத்தின் படி இது ஏதென்ஸ் நாட்டின் அரசனான எரிதொனியஸ்(Erichthonius) என்பவனைக் குறிக்கின்றது.
எனினும் புராணத்தில் அவன் விண்வெளியில் இடம் பெற்றதற்கான விளக்கமில்லை.
நான்கு குதிரைகள் பூட்டிய தேர் வண்டியைக் கண்டுபிடித்தவன் இவன்.இதைப் பயன்படுத்தி சட்ட விரோதமாக ஆட்சி புரிந்து வந்த ஆம்பிக்ட்யோன்(Amphictyon) என்பவனை போரில் வென்று ஏதென்ஸ் நகருக்கு அரசனானான்.நாட்டிற்கு
தன்னை அர்பணித்துக் கொண்டதால் ஜியஸ் கடவுள் அவனைப் பெருமைப் படுத்தும் விதமாக விண்ணில் ஒரு இடம் அளித்ததாக கூறுவார்கள்.

அவன் வலது கையில் ஓர் ஆடும் இடது கையில் அதன் குட்டியும் உள்ளன. இந்த வட்டாரத்தின் பிரகாசமான விண்மீனான காபெல்லலா ஆட்டை அலங்கரிகின்றது. இலத்தீன் மொழியில் காபெல்லா என்றால் பெண் ஆடு இதன் குட்டி சீட்டா மற்றும் ஈட்டா ஔரிகே விண்மீன்களால் கற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆல்பா ஔரிகே என்ற காபெல்லா மிகப் பிரகாசமான மஞ்சள் நிறங் கொண்ட தோற்ற ஒளிப்பொலிவெண் 0.09 உடைய ஒரு விண்மீன்.விண்ணில் தெரியும் 6 வது பிரகாசமான விண்மீன்.காபெல்லா பற்றி அதிகம் அறியப்படாத காலத்தில் இது சூரியனின் நகல் என நினைத்தனர்,இதற்குக் காரணம் இதன் நிறமும்,புற வெப்ப நிலையம்,சூரியனைப் போலவே இருந்ததுதான். இந்த ஒற்றுமையைத் தவிர வேறு எந்தப் பண்பும் இணையாக இல்லை. உண்மையில் காபெல்லா சூரியனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு விண்மீன் 42 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள காபெல்லா உண்மையில் மிக நெருக்கமாக அமைந்துள்ள மஞ்சள் நிறங்கொண்ட இரட்டைப் பெரு விண்மீன்களாகும் இதில் காபெல்லா என்ற முதன்மை விண்மீன்4.2 சூரிய நிறையுடன் சூரியனின் விட்டத்தைப் போல 12 மடங்கு விட்டத்துடன் உள்ளது .சூரியனை விட 8 மடங்கு பிரகாசமிக்கது .காபெல்லா B என்ற துணை விண்மீன் 3.3 சூரிய நிறையுடன் சூரியனின் விட்டத்தைப் போல 7 மடங்கு விட்டத்துடன் சூரியனை விட 50 மடங்கு பிரகாசத்துடன் காணப்படுகின்றது இவ்விரு பெரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட தொலைவு ஏறக்குறைய பூமியின் சுற்றுப் பாதையின் ஆரத்திற்குச் சமமானது .இரண்டும் சூரியனைப் போல G வகை விண்மீனாகவும் ஒத்த புறப் பரப்பு வெப்ப நிலையும் பெற்றுள்ளன.
காபெல்லாவில் உள்ள இரு விண்மீன்களுக்கும் இடைப்பட்ட கோண இடைவெளியில் 0.05 வினாடிகள் (1 வினாடி என்பது ஒரு டிகிரி கோணத்தில் 3600 ல் ஒரு பங்கு).இது மிகப் பெரிய தொலை நோக்கியின் பகுதிறனின்
வரம்பின் எல்லையில் இருப்பதால் இதைச் சாதாரணமாகப் பகுத்தறிவது கடினம். எனினும் நிறமாலைப் பகுப்பாய்வு ,காபெல்லாவின் இரட்டை விண்மீன்களைத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.நிறமாலையில் காணப்படும் அலைவு கால முறைப்படியான பெயர்ச்சியைக் கொண்டு இதில் ஒரு விண்மீன் மற்றொன்றை
104 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது என அறிந்துள்ளனர்.

காபெல்லா ஒரு எக்ஸ் கதிர் மூலமாக உள்ளது,சூரியனின் புறப் பரப்பில் காணப் படுவதைப் போல ஒரு காந்தப் புல இடை வினைகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஊகித்துள்ளனர். பெரிய வானத் தொலை நோக்கி மூலம் காபெல்லாவை ஆராய்ந்த போது அது நான்கு விண்மீன்களின் தொகுப்பு எனத் தெரிந்தது.பெரு மஞ்சள் இரட்டை விண்மீன்களைச் சுற்றி 0.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஒரு சிறிய சிவப்பு இரட்டை விண்மீன் வலம் வருகிறது. இவற்றின் நிறை முறையே 0.4 சூரிய நிறை, 0.1 சூரிய நிறையாக உள்ளன.

eluthaatha kaditham

எழுதாத கடிதம்
ஆசிரியர்கள் தங்களிடம் கல்வி கற்க வரும் மாணவிகளிடம்
தவறாக நடந்து கொள்ளவதும் ,ஒழுங்காகப் பாடம் கற்பிக்காமல்
தானே ஒழுக்கம் தவறுவதும் ,பயனற்ற பணி புரிவதும் இன்றைக்கு
அதிகமாகி வருகிறது. நாளிதழ்களில் இதைப் படிக்கும் போது
வருத்தம் மேலிட நாடித் துடிப்பு ஒரு நிமிடம் நின்று விடுகின்றதே .
போலீசே குற்றம் புரிவதும் ,குற்றம் புரிபவர்களுக்கு உற்ற
தோழனாய் இருப்பதும் ,குற்றவாளிகளால் பதிக்கப் பட்ட
மக்களுக்கு உதவத் தவறுவதும் இன்றைக்கு தொடர்ந்து
அதிகமாகிக் கொண்டே வருகிறது. தெரியாது என்பதால்
அப்படி இல்லவே இல்லை என்று கூறிவிட முடியாது .
பிரபஞ்சத்தைப் பற்றிக் கூட யாருக்கும் தெரியாது அதற்காக
பிரபஞ்சமே இல்லை என்று கூறுகின்றோமா ?
நாளிதழ்களில் இதைப் பற்றி படிக்கும் போது நெஞ்சம் குமுறுகின்றது.
கண்கள் இரத்தத்தை கண்ணீராய் சிந்துகிறதே .
அதிகாரிகள் மக்களின் பணியார்களாய் நடந்து கொள்வதில்லை.
இலஞ்சம் பெறுவதற்காக தவறுதலான வழிகாட்டல்கள் .
இலஞ்சம் பெறுவது, பெறுவதற்கான சூழலை உருவாக்குவதும்,
ஒளிவு மறைவு இன்றி நேர்மையாகப் பணியாற்றாமல் ஊதியம்
பெறுவதும் காலத்தின் கொடுமை . இதை எல்லாம் கண்ணால்
காணும் போத மாறாத மனக் கவலை வாழ்கையை அரிக்கின்றதே
அரசியல் வாதிகளிடம் தொண்டு இல்லை,தொல்லை உண்டு,பொது நலம் இல்லை, தன்னலம் உண்டு,கனிவில்லை கயமை யுண்டு .இப்படி நல்ல குணங்கள் எதுமில்லாமலே
வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு தவறான முன்
உதாரணங்களாகத் திகழ்கின்றார்கள் .இவர்கள் செய்யும் அநியாயங்களை நாளிதழ்கள் மூலம் அறியும் போது
இதயம் ஒரு அணு குண்டு போல வெடித்துச் சிதறிவிடும் போலிருக்கின்றதே .
இந்திய மக்கள் நேர்மையாக வாழ வழி எங்கு தேடியும் கிடைக்காமல்
வன் எண்ணங்களை வளர்த்துக் கொண்டு விட்டார்கள் .மனிதர்கள் மனிதர்களை
வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள் . கட்டுப்பாடுகளை எல்லாம் காலிலிட்டு மிதித்து
எட்டித் தள்ளி விட்டு துணிந்து வருகின்றார்கள் .ஆதரவு தேடியவர்களுக்கு அன்பு காட்டி அடைக்கலம் தராமல் ஆத்திரமடைந்தவனுக்கு அறிவுரை கூறுவது என்ன
பயன் தரும் .

உள்ளுக்குள் ஊடுருவும் எதிர் மறையான சமுதாயப் போக்குகள் இன்றில்லா விட்டாலும்
ஒருநாள் பேரழிவை ஏற்படுத்தலாம் . இது ஆழிப் பேரலை சுனாமி இல்லை .வலியஎண்ணங்களின் சுனாமி .

Wednesday, April 18, 2012

vethith thanimangal

லித்தியம் (பயன்கள்)

உலோகப் பரப்புகளை மெருகூட்டுவதற்கும்,வண்ணப்பூச்சிடுவதற்கும்,
இனாமல் மற்றும் உயர் வகை பீங்கான் பொருட்களைத்
தயாரிப்பதற்கும் நெசவுத் தொழிலில் துணிகளுக்கு வெண்மை யூட்டுவதற்கும்,சாயங்களைக் கெட்டிப்படுத்துவதற்கும் லித்தியக்
கூட்டுப் பொருட்கள் பயன் படுகின்றன
அலுமினிய -லித்தியக் கலப்பு உலோகம் தாழ்ந்த அடர்த்தியும் மிகுந்த
உறுதியும் கொண்டது. இலேசாகவும்,உறுதியாகவும் இருக்க வேண்டிய விண்கலம், வானவூர்தி, விண்னூர்தி போன்றவற்றை வடிவமைக்க
இது பயன்தருகிறது.50 % மக்னீசியத்துடன் லித்தியம் சேர்ந்த ஒரு
கலப்பு உலோகம் நீரில் மிதக்கின்றது அனால் இது காற்றிலுள்ள
ஆக்ஸிஜனைக் கவர்ந்து அரிக்கப்படுகின்றது.எனினும் ஒரு குறிப்பிட்ட நெடுக்கைக்கு உட்பட்ட விகிதத்தில் மக்னீசியத்தைச் சேர்க்கும் போது
அது பழுதுறாமல் நீண்ட காலப்பணிக்கு உகந்ததாக இருக்கின்றது.

அலுமினிய உற்பத்தி முறையில் லித்தியம் ஒரு வினையூக்கியாகச் செயல்படுகின்றது .மின்னார் பகுப்புத்தொட்டியில் சிறிதளவு லித்தியம்
கூட்டுப் பொருளைச் சேர்க்கும் போது,அது அலுமினிய உற்பத்தியைக்
குறிப்பிடும்படியாக அதிகரிக்கின்றது.தொட்டியின் வெப்ப நிலையைத்
தாழ்வாக வைத்திருப்பதுடன்,மின்சாரத்தையும் குறைந்த அளவில்
எடுத்துக் கொள்கிறது.

லித்தியத்தின் மருத்துவப் பயன்கள்

இரத்தத்தில் யூரிக் அமில அதிகரிப்பு உடல் நலக் குறைவை ஏற்படுத்தும்.
இது முடக்கு வாதம் சிறுநீர்ப்பைக்கல்,மன நோய்,மன அழுத்தம் போன்ற குறைபாடுகளை ஏற்படுத்தும்.இதற்கு தூய லித்தியம் கார்போனேட்
மருந்தாக அளிக்கப் படுகின்றது.மனநலம் பாதிக்கப்பட்டு
சித்தபிரமை பிடித்த நோயாளிகளுக்கான சிகிச்சை முறையில் லித்தியம் கார்போனேட் பயன்படுகின்றது

லித்தியத்தின் அணு இயற்பியல் பயன்கள்

ஒளிப்பொறிச் சிதறல் எண்ணி(Scintillation counter) களில் உடன்
ஒளிர்வுப் பொரு ட்கள் (Phosphor) பயன்படுகின்றன.இதில் துத்தநாக சல்பைடு,பேரியம் பிளாட்டினோ சயனைடு போன்ற பொருட்களின் பூச்சுகள் பயன்படுத்தப் படுகின்றன.இவை கதிரியக்கக் கதிர்களுள் ஒன்றான ஆல்பா கதிர்களுக்குச் சிறப்பாகச் செயல்பட்டாலும் ,பீட்டா மற்றும் காமாக்
கதிர்களுக்குப் பயனுறு திறன் குறைவாகப் பெற்றுள்ளன. தாலியம் கூடிய லித்தியம் அயோடைடுப் படிகம் இக் குறைபாட்டை நீக்கியுள்ளது.லித்தியம் -6 என்ற அணு எண்மம்(Isotope)ஹைட்ரஜன் குண்டு
hydrogen bomb) தயாரிப்பில் முக்கியப் பங்கேற்றுள்ளது இது நியூட்ரானை உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதால்,அதன் நிலைப்புத்
தன்மைமை அணுக்கருவிற்குள் ஓரிரெண்டு நியூட்ரான்களை உட்புகுத்தி
மாற்ற முடியும்.நிலையற்ற தன்மையால் அது சிதைந்து ஹீலியம் -4
ஆகவும் ஹைட்ரஜனின் கதிரியக்க அணு எண்மமான டிரைட்டானாகவும்
(triton) உருமாறுகின்றது.இது வெப்ப அணுக்கரு வினையில்
(Thermo nuclear reaction) முக்கிய மூலப் பொருளாக விளங்குகிறது.
அணுக் கருப் பிளப்பு ((Nuclear fission ) முறையை விட அணுக்கருப்
பிணைப்பு முறை (Nuclear fusion) அனுகூலமிக்கது என்றாலும் அணுக்கள் தானாகப் பிணைந்து கொள்வதற்கான வெப்ப நிலை ஒரு million டிகிரி செல்சியஸ் என்ற நெடுக்கையில் உள்ளது.ஹைட்ரஜன் குண்டு தயாரிக்கும்
வழி முறையில் எட்வர்டு டெல்லர் என்ற விஞ்ஞானி ஒரு புதுமையைப் புகுத்தினார்.அவர் லித்தியம் டியூட்ரைடு என்ற கூட்டுப் பொருளைப் பயன்படுத்தினார்.அது குறைந்த வெளியில் அதிக அளவு டியூட்ரியத்தைப் பெற்றிருக்கின்றது. அத்திண்மத்தை நியூட்ரானின் வீச்சுக்கு உட்படுத்த,
அதிலுள்ள லித்தியம் நியூட்ரானை உட்கவர்ந்து அணுக்கரு வினையால்
டிரைட்டானை உருவாக்குகின்றது.அருகருகே உள்ள டியூட்ரானையும் டிரைட்டானையும் பிணைக்கத் தேவையான வெப்பத்தை ஒரு வழக்கமான யுரேனிய அணு குண்டால் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.யுரேனிய அணு
குண்டில் நியூட்ரானின் செறிவை அதிகரிக்கும் போது அது பெருக்கமுற்று
ஒரு கட்டத்தில் தானாக வெடிக்கின்றது.யுரேனிய அணு குண்டைச் சுற்றி லித்தியம் டியூட்ரைடு படலத்தை ஏற்படுத்திக் கொண்டால்,யுரேனியக்
குண்டு வெடிக்கும் போது டிரைட்டான் உற்பத்திக்குத் தேவையான
நியூட்ரானை லித்தியம்-6 க்கு வழங்குவதுடன் உற்பத்தி செய்யப்பட்ட டிரைட்ரானும்,டியூட்ரானும் பிணையத் தேவையான உயர் வெப்ப
நிலையையும் தருகிறது .

அணு உலைகளில் நியூட்ரானின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தி
கட்டுப் படுத்த காட்மியம் பயன் படுத்துகின்றார்கள் .இதற்கு
லித்தியம்-6 ஒரு மாற்றுப் பொருளாகும்

ஏவூர்திகளில் லித்தியம் திண்ம எரிபொருளாகப் பயன்படுகிறது.
இதன் எரிப்பாற்றல்(Combustion ) ஒரு கிலோ கிராமுக்கு 10270 கிலோ காலரி.இதை விட பெர்லியம் மட்டுமே கூடுதலான எரிப்பாற்றலைப்
பெற்றுள்ளது .

விண் இயற்பியலும் லித்தியமும்

விண்மீன்களின் வயதை மதிப்பிடும் ஒரு புதிய வழிமுறைக்கு லித்தியம் கைகொடுத்துள்ளது.விண்மீன்களில் தொடக்க எரிபொருளாக இருப்பது ஹைட்ரஜன் .ஹைட்ரஜனின் சேமிப்பு முழுவதும் தீர்ந்து போன நிலையில் அடுத்தடுத்த உயர் அணுவெண் அணுக்களும் வினையில்
ஈடுபடுகின்றன.ஹைட்ரஜன் எரிதல் நிறை எல்லையில் இருக்கும்
விண்மீன்களில் லிதியத்தின் செழுமை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.விண்மீன்களில் லித்தியத்தின் செழுமையை
அறிய நிறமாலையில் 6708 ஆங்ஸ்ட்ராம்(10^8m) அலை நீளத்தில் ஆராய்கின்றார்கள்.இதன் ஒப்புச்செறிவிலிருந்து லித்தியத்தின் செழுமையை மதிப்பிட முடியும்.அதிலிருந்து விண்மீனின் வயதைக் கணக்கிட முடிகின்றது .

Tuesday, April 17, 2012

arika iyarpiyal

அறிக அறிவியல்
கடலோரப் பகுதிகளில் கேணி தோண்டினால் நீர் உப்புக்கரிக்கும் என்று
நாம் எதிர்பார்க்கின்றோம் . ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி இருப்பதில்லை.
பல இடங்களில் நிலத்தடி நீர் உப்பின்றி சுவையாகவும் இருப்பதுண்டு . கடலின்
உவர் நீர் நிலத்தில் உடுருவி நிலத்தடி நீரை இங்கு எப்படி பாதிக்காமல்
இருக்கிறது ?

கடலோரப் பகுதிகளில் சுவை நீருடன் கூடிய கேணி அல்லது நீரூற்று க் களை
நாம் அதிகம் காண முடிகின்றது. சிலர் கடற்கரையில் குழி பறித்து சுவை நீரைச்
சேகரித்து விற்பனை கூடச் செய்வர் .உவர் நீர் அருகில் இருக்க சுவை நீர்
எப்படி க் கிடைகின்றது ? இது நெடுநாளாக குழப்பமாக இருந்தது.இது பற்றி
நுட்பமாக ஆராய்ந்த விஞ்ஞானிகள விடையைக் கண்டறிந்தனர்.
இது போன்ற கேணிகளில் சுவை நீர் கடல் நீர் மட்டத்திற்கு மேலிருந்து ஒரு
குறிப்பிட்ட ஆழம் வரை கிடைக்கக் கூடியதாக இருக்கின்றது.அடர்த்தி
மிக்க கடல் நீர் மற்றும் அடர்த்தி குறைந்த சுவை நீர் இவற்றிற்கு இடையேயுள்ள நிலை நீர்ம அழுத்த வேறுபாடு இதற்குக் காரணமாக இருக்கின்றது.

நிலத்தில் கடல் மட்டத்திலிருந்து h என்ற உயரத்தில் சுவை நீர்
கிடைப்பதாகக் கொள்வோம்.இந்த நீர் பாய்ந்தோடாமல் நிலையாக
இருக்கும் போது,இப்படுக்கை நிலத்தில் ஆழமாக விரிந்து பரவி இருக்கும்.
இந்த ஆழம் கடல் மட்டத்திலிருந்து H எனில்(H + h)குத்துயரம் உள்ள
சுவை நீரின் நீர்ம அழுத்தமும்,H குத்துயரம் உடைய கடல் நீரின் நீர்ம அழுத்தமும் சமமாக இருக்க வேண்டும் எனலாம் .தூய நீரின் அடர்த்தி
1000 என்றும் கடல் நீரின் அடர்த்தி 1025 என்றும் கொண்டால்
(H + h)1000 = H(1025).இது H = 40 h என்ற தொடர்பைத் தருகிறது.

Monday, April 16, 2012

vethith thanimangal

லித்தியம் (Lithium )

கண்டுபிடிப்பு

பீட்டாலைட் என்ற தாதுவை பகுத்தாராய்ந்த வாக்குலின்(Vauquelin)
என்பார் அதில் அலுமினா,சிலிகா தவிர்த்து காரஉலோகம்
இருப்பதைக் கண்டார்.ஆனால் அது பொட்டாசியம் என்று பிழையாக
அறிவித்து விட்டார். இதற்குச் சரியான விளக்கத்தை முறையாக
அளித்து லித்தியம் என்ற புதிய தனிமத்தைக் கண்டு பிடித்த
பெருமையைத் தட்டித் சென்றவர் ஸ்வீடன் நாட்டின் வேதியல்
அறிஞரான அர்ப் வெட்சன்(Arfvedson)என்பாராவர்.பீட்டாலைட்
தாதுவில் 80 % சிலிகான் ஆக்சைடும்,17 % அலுமினியமும்
3 % அப்புதிய காரஉலோகமும் இருக்கின்றது. பீட்டாலைட்டை ,
பேரியம் கார்பொனேட்டுடன் சேர்ந்து சூடுபடுத்தி அதிலிருந்து
லித்தியம் பிரித்தெடுக்கப் பட்டது.இதற்கு லித்தியம் என்று
பெயரிட்டவர் அர்ப் வெட்சன்.இது பாறை என்று
பொருள்படும் 'லித்தியோஸ் ' என்ற கிரேக்க மொழிச்
சொல்லிலிருந்து உருவானது.

1855 ல் ஜெர்மன் நாட்டு வேதியியல் அறிஞர் புன்செனும் ,
இங்கிலாந்து நாட்டு இயற்பியல் அறிஞர் மாதீசனும்
உருக்கப்பட்ட லித்தியம் குளோரைடை மின்னார் பகுப்பிற்கு
உட்படுத்தி வர்த்தக முறையில் லித்தியத்தைப் பிரித்தெடுத்தனர்.

பண்புகள்

தனிம அட்டவணையில் ஹைட்ரஜன்,ஹீலியத்திற்கு அடுத்து
மூன்றாவதாக இடம் பெற்றுள்ள,மிக லேசான உலோகம்
லித்தியம். பூமியில் லித்தியத்தின் தாதுக்கள் மிக அரிதாகவே
காணப்படுகின்றன.இதன் செழுமை சோடியம்,பொட்டாசியத்தை
விட மிகவும் குறைவு.

லித்தியம் இயற்கையில் தங்கம்,வெள்ளி போலத் தனித்து தூய
நிலையில் கிடைப்பதில்லை.இது மென்மையான வெள்ளி
போன்று பளபளக்கின்ற உலோகமாகும்.வேதியியலின் படி இது
சோடியத்தை ஒத்தது என்றாலும் அதை விட வீரியம் குறைந்தது.
இதை விட லேசான உலோகம் வேறெதுவும் இல்லை.லித்தியம்
நீரை விட எடை குறைந்தது. இதன் அடர்த்தி,நீரின் அடர்த்தியில்
பாதியளவே என்பதால் நீரில் மிதக்கின்றது.ஆனால் நீர் கார
உலோகங்களுக்கு ஒரு பாதுகாப்பு ஊடகமாக இருக்க முடியாது .

சாதாரண வெப்ப நிலையில் லித்தியம் காற்றில் உள்ள நைட்ரஜன், ஆக்சிஜனுடன் வினை புரிகின்றது.ஒரு கண்ணாடிக் குப்பியில்
சிறிதளவு லித்தியத்தை இட்டு அதை இறுக்க மூடிவிட்டால்
அதிலுள்ள காற்றையெல்லாம் லித்தியம் உட்கிரகித்துக் கொண்டு
விடுவதால் அங்கு ஒரு வெற்றிடம் விளைகிறது.
சோடியத்தை மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோலில் பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள முடிவதைப் போல லித்தியத்தை முழுமையாகப்
பாதுகாக்க முடிவதில்லை.இதற்காக லித்தியத்தை குச்சிகளாக்கி
வாசிலின்(Vaseline)அல்லது பாரபின் மெழுகில் புதைத்து
வைக்கின்றார்கள் .

இதன் வேதி குறியீடு Li ஆகும்.இதன் அணு வெண் 3,அணு நிறை
6.94,அடர்த்தி 530 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே
453.2 K,1603 K ஆகும்.

பயன்கள்

லித்தியம்,ஹைட்ரஜனுடன் கூடி,உடனடியாக இணைந்து லித்தியம்
ஹைட்ரைட் உண்டாகின்றது. இதை நீரிலிடும் போது அவை
பிரிகின்றன.ஒரு கிலோ லித்தியம் ஹைட்ரைட் 2800 லிட்டர்
ஹைட்ரஜன் வளி மண்டல அழுத்தத்தில் அறை வெப்ப நிலையில்
தருகிறது.ஹைட்ரஜன் அவசரத் தேவைக்கு உகந்த மூலமாக
இதைக் கொள்கின்றனர்.லித்தியம் சேர்ந்த கண்ணாடி வெப்பத்தைக்
கூடுதலாகத் தாக்குப் பிடிக்கின்றது.வெப்ப மண்டலங்களில்
கட்டடங்களின் கட்டுமானப் பொருளாகவும் ,வெப்பமானிகள்
(Thermometers) தொலைக்காட்சி பெட்டியின் சின்னத் திரை மற்றும்
சூரிய ஒளி எதிரொளிப்பான் போன்றவற்றில் பயன்பாட்டுப்
பொருளாகவும் லித்தியம் கண்ணாடி பயன் தருகிறது.லித்தியம் புளுரைடு படிகம் புறஊதாக் கதிர் உடுருவும் திறனை
மிகைப் படுத்துகின்றது புறஊதாக் கதிர் தொடர்பான ஆய்வுகளில்
இது பயன்தருகிறது. இதயத் துடிப்பு சீராக்கி (Pace Maker) போன்ற
பல சாதனங்களுக்கு லித்தியம் மின்கலம் (lithium cell)
அனுகூலமிக்கதாய் உள்ளது .இதில் நேர்மின் வாயாக லித்தியமும்
மின்னார் பகுபொருளாக லித்தியக் கூட்டுப் பொருளான லித்தியம்
புளூரைடு அல்லது அயோடைடு பயன்படுகின்றன இதன் எதிர் மின்
வாயாக கார்பன் மோனோ புளூரைடு அல்லது அயோடைடு செயல்
படுகின்றது. இது 1.5-3.௦ வோல்ட் மின்னழுத்தம் தரக்கூடியது.
எனினும் இத்தகைய மின்கலத்தைப் புதிப்பித்துக் கொள்ள முடிவதில்லை.
40 டிகிரி செல்சியசுக்கு மேலும் - 20 டிகிரி செல்சியசுக்கு கீழும் இம் மின்கலத்தைப் பயன் படுத்த முடிவதில்லை.

லித்தியம் ஹைட்ராக்சைடை ஒரு கொழுப்புப் பொருளுடன் சேர்த்து
சூடு படுத்த லித்தியம் சோப்பு கிடைக்கின்றது.இது எண்ணையின் பாகுத் தன்மையை அதிகரிக்கின்றது.இதனால் கொழுப்புப் பசை(Grease)
தயாரித்து உயவுப் பொருளாகப் பயன்படுத்த முடிகின்றது.ஸ்டேரேட்
stearate),பல்மிடேட்(Palmitate) போன்ற சில கரிம லித்திய கூட்டுப் பொருட்கள் முதல் தரமான மாசகுப் பொருட்களாக விளங்குகின்றன.

vinveliyil ulaa

துடிப்பு விண்மீன்கள் (தொடர்ச்சி)தொடக்க காலத்தில் துடிப்பு விண்மீனின் ரேடியோ கதிர்வீச்சை
தொலைவில் உள்ள விண்மீன் குடும்பத்திலுள்ள ஒரு கோளில்
வாழும் உயர் வகை உயிரினங்களால் செலுத்தப்படும் சமிக்கை
அலைகள் என நினைத்தனர். பின்னர் அது தவறு என உறுதி
செய்யப் பட்டது .நண்டு வடிவ நெபுலாவின் மையத்தில்
கண்டறியப்பட்ட ஒரு துடிப்பு விண்மீன் இதற்கு காரணமாக
அமைந்தது. இது மிக விரைவாக ,ஒரு வினாடியில்
3o ல் ஒரு பங்கு நேரத்தில் துல்லியமான சுற்றுக்கால முறைப்படி
மாறிமாறி ஒளிரக்கூடியது. இதுவே மிக விரைவாக மாறிமாறி
ஒளிரும் துடிப்பு விண்மீனாகும்.ஒரு விண்மீன் இப்படி குறுகிய
அலைவு காலத்தில் அதாவது விரைந்து மாறிமாறி ஒளிர
வேண்டுமானால்,அவ் விண்மீன் அதே விரைவில் தற்சுழல
வேண்டும் .சிதைவுறாமல் ஒரு வினாடியில் 30 முறை தற்சுழல
நியூட்ரான் விண்மீனால் இயலும் என்பதால் ( எல்லாம்
இல்லாவிட்டாலும் குறுகிய அலைவு காலமுடைய) துடிப்பு
விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக இருக்க வேண்டும்
என்று முடிவு செய்யலாம்.

மேலும் துடிப்பு விண்மீன்கள் முதலில் ரேடியோ அலைநீள
நெடுக்கையில் கண்டறியப்பட்டாலும் ,வேறு சில துடிப்பு
விண்மீன்களில் துடிப்பலைகள் பிற அலைநீள நெடுக்கையிலும்
அறியப்பட்டன. நண்டு வடிவ நெபுலாவில் கட்புலணுணர்
அலைநீள ஒளியோடு காட்சி தரும் துடிப்பு விண்மீன்
தன் துடிப்பலைகளை எக்ஸ் கதிர்களாக உமிழ்கின்றது.
இவற்றின் அலைவு காலம் மாறாது நிலையாக இருப்பது
போலத் தோன்றினாலும் உண்மையில் நீண்ட கால நெடுக்கையில் இது மெதுவான மாறுதலுக்கு உள்ளாகின்றது. அதாவது அலைவுக் காலம் அதிகரிகின்றது அல்லது அலைவியக்கம் மெதுவாகின்றது. அலைவியக்கம் மெதுவாவதற்கு துடிப்பலைகளை உமிழ்வ தற்குத் தேவையான ஆற்றலை நியூட்ரான் விண்மீன் தன் சுற்றியக்கத்தின்
ஆற்றலிலிருந்து பெறுவதே காரணமாகின்றது. இது துடிப்பு விண்மீன்களின் வயதை நிர்ணயிக்கத் துணை புரிகின்றது.
நண்டு வடிவ நெபுலாவிலுள்ள துடிப்பு விண்மீன்
ஏறக்குறைய 900 ஆண்டுகள் வயதானது என்றும் கண்டறியப்பட்ட
துடிப்பு விண்மீன்களுள் இது மிகவும் இளமையானது என்றும் கூறுகின்றார்கள். ஒரு மில்லியன் ஆண்டுகள் வயதான
சில துடிப்பு விண்மீன்களும் உள்ளன.

இந்த துடிப்பு விண்மீன்கள் ஏன் மாறி மாறி ஒளிர வேண்டும் ?
இது பற்றி முழுமையாக அறிய முடியாவிட்டாலும் இவை மிகவும் செறிவான ,பூமியின் காந்தப் புலத்தைப் போல பல மில்லியன்
மில்லியன் மடங்கு வலுவான காந்தப் புலத்தைப் பெற்றிருக்கின்றன.
என நம்பப் படுகிறது.இக் காந்தப் புலம் துடிப்பலையின் அமைப்பைக் காட்டுப் படுத்துகின்றது எனக்கருதுகின்றார்கள்.
ரேடியோ அலைக்கற்றை ,கட்புலனுணர் ஒளி அல்லது எக்ஸ் கதிர்கள் போன்றவற்றை விண்மீன் தற்சுழலும் போது ,ஒவ்வொரு சுற்றிலும்
ஒரு முறை மட்டுமே நம்மை நோக்கி உமிழ்கிறது. இது பொதுவாக
காந்தப் புல அச்சுக்கு இணையான திசையில் இருக்கின்றது.
நியூட்ரான் விண்மீனைச் சுற்றி சைக்கிள் டியூப்பைப் போல அமைந்து விண்மீனோடு சேர்ந்து தற்சுழலும் பிளாஸ்மாவின்
பரப்பிலிருந்து இக் கதிர்வீச்சுகள் உற்பத்தியாகலாம் என்று
நம்புகிறார்கள் .

பிற விண்மீன்களைப் போல நியூட்ரான் விண்மீனும்
கதிர்வீச்சுக்களை வெளியில் உமிழ்ந்தாலும் இந்த உமிழ்வு எல்லாத்
திசைகளிலும் சமச் சீராக இருப்ப தில்லை .காந்த அச்சுக்கு
இணையாக இருக்கும் பகுதிகளிலிருந்தே உமிழ்வைச்
செய்கின்றன. இந்த உமிழ்வுத் திசை பூமியை நோக்கி இருக்கும்
போது மட்டுமே நமது ரேடியோ தொலை நோக்கிகள் அவற்றை உட்கவர்ந்து தெரிவிக்கின்றன.ரேடியோ அதிர்வெண்
நெடுக்கையிலுள்ள துடிப்பு விண்மீன்கள் ஒரு குறிப்பிட்ட
அதிர்வெண் நெடுக்கையில் (108 - 1010 ஹெர்ட் ஸ்) மட்டுமே கானப்படுகின்ப்றன. மேலும் இதன் காந்தப் புலச் செறிவு
அதிர்வெண்ணுக்கு ஏற்ப குறைகிறது .

துடிப்பு விண்மீன்கள் உடனழிவு விண்மீனின் (super nova )
எச்சமாக இருக்கலாம் என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றார்கள். நண்டு வடிவ நெபுலாவில் கண்ட துடிப்பு விண்மீன்களைப் போல வேலா வட்டார விண்மீன் கூட்டத்தில் ஒரு துடிப்பு
விண்மீனை உடனழிவு விண்மீனின் எச்சமாகக் கண்டறிந்தனர்,
1982 ல் பெக்கர் (D .C . Becker ) மற்றும் அவரது கூட்டாளிகள்
வுல்பி குலா வட்டார விண்மீன் கூட்டத்தில் 1 .6 மில்லி செகண்டு
அலைவு காலமுடைய துடிப்பு விண்மீனைக் கண்டறிந்தனர்.

Saturday, April 14, 2012

vinveliyil ulaa

துடிப்பு விண்மீன்கள் (Pulsars)

கட்புலனுணர் ஒளியைக்கொண்டு விண்மீன்களை ஆராய்ந்த போது
பேரண்டத்தின் கட்டமைப்பு மற்றும் தோற்றம்,வளர்ச்சி பற்றிய முழு
விவரங்கள் தெரியாமலிருந்தது.அனுமானங்களின் அடிப்படையிலேயே கருத்துக்களை சொல்லி வந்தனர்.மின்காந்த அலைத்தொகுப்பிலுள்ள
கட்புலனுணரா ஒளியைக் கொண்டும் வானத்தை ஆராயலாம் என்பதைத்
தெரிந்து கொண்டவுடன் இத்துறையில் மகத்தான வளர்ச்சி
முடுக்கப்பட்டது.அண்மைக் காலங்களில் எக்ஸ் கதிர்,காமாக் கதிர்,
நுண் அலைகள்(Microwave),அகச்சிவப்புக் கதிர்,புறஊதாக் கதிர் போன்ற அலைகளில் விண்வெளியையும் விண்மீன்களையும் ஆராயும் வானவியல் முறைகள் வளர்ச்சி பெற்றன.இவற்றை பூமியின் வளி மண்டலத்திற்கு அப்பாற்பட்ட உயரங்களிலிருந்து கொண்டே செய்ய முடிகிறது.முதலில் பலூன்கள் மூலமாகவும்,பின்னர் செயற்கைக் கோள்கள் மூலமாகவும்,
தற்போது விண்வெளி ஆய்வுக் கூடங்கள் மூலமாகவும் இதை
வெற்றிகரமாகச் செய்து வருகின்றார்கள் இந்த ஆய்வுகள் நாம் சிறிதும் எதிர்பாராத ,பேரண்டம் பற்றிய பல உண்மைகளைத் தெரியப்படுத்தியிருக்கின்றன.ரேடியோ அலைகள் அல்லது நுண் அலைகள் என்பன ரேடார் மற்றும்
வானொலி நிலையங்களில் பயன்படுகின்றன என்பதை நாம் அறிவோம்.
இது அகச் சிவப்புக் கதிர்களை விட அலைநீளம் மிக்கவை.
இவற்றின் அலைநீளம் ஒரு மில்லி மீட்டரிலிருந்து நூறு மீட்டர் வரை
நீண்ட நெடுக்கையில் உள்ளது.ரேடியோ வானவியல் 1960-70 ல் மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது.முதலாவது
குவாசார்(Quasar) என்ற மிகவும் பிரகாசமும்,ஆற்றல் உமிழும் திறனும்
கொண்ட ஆனால் சிறிய உருவ அளவு உடைய விண்ணுறுப்பாகும்.
இரண்டாவது அண்ட வெளியில் எங்கு திரும்பினாலும் ஒலிக்கும் பின்புலக் கதிர்வீச்சு (Background radiation),மூன்றாவது துடிப்பு விண்மீனாகும்.
இது செறிவான ரேடியோ அலைகளை விட்டுவிட்டு உமிழும் மூலமாக
உள்ளது.இதன் ஒளிர் திறன் மாறி மாறி ஒளிர்வதால் இது மாறொளிர் விண்மீன்களில்(Variable star) ஒரு வகையாகும்.

1967 -68 ல் கேம்ப்ரிட்ஜ் பலகலைக் கழகத்தின் முல்லார்டு ரேடியோ வானவியல் ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த ஆண்டனி ஹிவிஷ்(A.Hewish)
மற்றும் ஜோசிலின் பெல்(J.C.Bell)என்பாரால் துடிப்பு விண்மீன்கள்
முதன் முதலில் இனமறியப்பட்டன.இன்றைக்கு விண்வெளியில் 500
க்கும் மேற்பட்ட துடிப்பு விண்மீன்களைக் கண்டறிந்துள்ளனர். நம் பால்
வெளி மண்டலத்தில் குறைந்தது பல்லாயிரக் கணக்கில் துடிப்பு
விண்மீன்கள் இருக்கலாம் என்று கணித்துள்ளனர்.வெகு தொலைவில் இருப்பதால் இன்றைக்கு நம்மிடம் உள்ள பயனுறுதிறன் மிக்க ரேடியோ
தொலை நோக்கிகளினாலும் இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது.பல்சார் என்பதே பல்சேட்டிங் ரேடியோ சோர்சஸ் என்பதின் முதலெழுத்துச் சுருக்கமாகும்.

துடிப்பு விண்மீன்களின் ஒளிச் செறிவு ஒரு காலச் சுற்று முறையில்
மாறிமாறிக் காணப்படுகிறது இம் மாற்றமும் சீர்மை யுடையதாக
இருக்கின்றது. அதாவது ஒளிச் செறிவின் ஏற்றத் தாழ்வுகளுக்கு
இடைப்பட்ட காலம் ஒரு துடிப்பு விண்மீனுக்கு ஒரு நீண்ட கால
நெடுக்கையில் மாறாததாக இருக்கின்றது. ரேடியோ தொலை
நோக்கியால் பெறப்பட்ட ஒரு துடிப்பு விண்மீனின் ஒளிச் செறிவு மாற்றம் படத்தில் காட்டப் பட்டுள்ளது.

இது துடிப்பு விண்மீன்களின் ஒளிச்செறிவு ஒரே சீராக இல்லாது,
அடுத்தடுத்து பெருமங்களையும் சிறுமங்களையும் கொண்டதாகவும்
இருக்கிறது எனக் காட்டுகின்றது.இருப்பினும் அடுத்தடுத்து
வரும் பெருமங்கள் அல்லது சிறுமங்களுக்குக் இடைப்பட்ட காலம்
மாறாததாக இருகின்றது.மேலும் துடிப்பலைகள் அலைவீச்சு
amplitude)சீரான மாற்றத்திற்கு உட்பட்டிருக்கின்றது. காலத்தை மேலும் துல்லியமாகப் பகுத்து இவற்றில் ஏற்படும் மாற்றங்களை கவனித்தால்,
அவை ஒவ்வொன்றும் ஓரளவு அகன்ற அதிர்வெண் நெடுக்கைக் குட்பட்ட ரேடியோ அலைகளாக இருப்பதும் தெரிய வந்தது.அதாவது
ஒவ்வொரு ரேடியோ அலையும் அடுத்தடுத்த பல அதிர்வெண் கொண்ட அலைகளின் சேர்க்கையாக இருக்கின்றது.

துடிப்பு விண்மீன்கள் உமிழும் துடிப்பலைகளை நுட்பமாக ஆராய்ந்த
போது ஒரு துடிப்பலை வந்து சேரும் காலம் வெவ்வேறு அதிர்வெண் அலைகளுக்கு வெவ்வேறாக இருப்பது தெரிய வந்தது.
தாழ்ந்த அதிர்வெண் கொண்ட துடிப்பலைகள் உயர்அதிர்வெண் கொண்டவைகளைவிடத் தாமதமாக வந்து சேருவதால் அவற்றின்
கட்டமைப்பு அப்படி அமைந்திருந்தது.இதற்குக் காரணம் விண்மீனிடை
ஊடக வெளியில் விரவியுள்ள பிளாஸ்மாவில் இந்த ரேடியோ அலைகள் ஊடுருவிச் செல்லும் போது பரவுதல் வேகம் வெவேறு அதிர்வெண் அலைகளுக்கு வெவ்வேறானதாக இருப்பதுதான்.பிளாஸ்மாவின் இப்
பண்பின் அடிப்படையில் துடிப்பு விண்மீனின் தொலைவை ஓரளவு
தோராயமாக மதிப்பிடும் வழிமுறையை ஹிவிசும் பெல்லும்
தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் கண்டுபிடித்த முதல் துடிப்பு விண்மீன் பால் வெளி மண்டலத்திற்குள் இருப்பது
உறுதி செய்யப்பட்டது. மேலும் இது போன்று வேறு சில விண்ணுறுப்புக்களையும் அடுத்தடுத்து பலராலும் கண்டுபிடிக்கப்பட்டதால்,
இது இயல்பானது என்றும் நிறுவினார்கள்

இதன் கதிர்வீச்சுடன் தொடர்புடைய குறுகியகால அளவு முறைகள்,
இந்த விண்ணுருப்பு அளவில் மிகச் சிறியதாக இருக்க வேண்டும் எனச்
சுட்டிக் காட்டுகின்றன.அதாவது ஒரு துடிப்பு விண்மீனின் பரிமாணம்
பூமியைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் எனலாம்.
இல்லாவிட்டால் அவவிண்மீனின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் ஒளி,மேற்பொருந்தி குறுகிய துடிப்பலைகளைத் தனித்து அறியமுடியாதபடி அழித்துவிடும்.மிக அதிக அளவில் ஆற்றல் வெளியிடும் துடிப்பலைகளின் அலைவுக் காலம் மாறாது நிலைத்திருப்பதும்,துடிப்பு விண்மீன்கள்
சூரியனை விடக் கூடுதலான நிறை கொண்டதாக இருக்க வேண்டும்
என்று தெரிவிக்கின்றன.இத்தகைய தன்மைகள் பொதுவாக நியூட்ரான் விண்மீன்களுக்கு உண்டு என்பதால்,துடிப்பு விண்மீன்கள் நியூட்ரான் விண்மீன்களாக இருக்கலாம் என்று கருதுகின்றார்கள். வேறு சிலர்
அவை சிறு வெள்ளை விண்மீன்களாக இருக்கலாம் என்று கூறுகின்றார்கள்.

arika ariviyal

அறிக அறிவியல்

வெடிக்கும் பலூன்ஊதி உப்பிய பலூனை ஒரு குண்டூசியால் குத்த அது உடனடியாகச் சப்தத்துடன் வெடிக்கின்றது ஆனால் பலூனின் புறபரப்பில் ஒரு ஒட்டு நாடாவை (Cello Tape) ஒட்டி வைத்து விட்டு அவ்விடத்தில் குண்டூசியால் குத்த ,இப்போது முன்பு போல பலூன் வெடிப்பதில்லை ,ஆனால் காற்று மெதுவாக வெளியேறிச் செல்கிறது .இந்த வேறு பாட்டிற்கு காரணம் என்ன ?

பலூன் நீட்சியுறக் கூடிய மூலப்பொருளாலான இரப்பரால் செய்யப்பட்டது.
அதனால் பலூனை ஊதி உப்பச் செய்யும் போது நீட்சியுற்று விரிவடைகிறது. குண்டூசியால் குத்தும் போது பலூனின் புறப் பரப்பில் ஒரு சிறிய துளை ஏற்படுத்தப் படுகிறது. பலூனில் உள்ள காற்று அதிக அழுத்தத்தில் இருப்பதாலும்,துளையிட்ட பகுதியில் விறைப்புத் தன்மையில் குறைபாடு ஏற்படுவதாலும் ,சிறு துளையானது விரைவாகப் பெரிதாகி ,பலூனைக் கிழித்துவிடுகிறது.உள்ளே காற்று அழுத்தம் அதிகமாவும் துளை சிறிதாகவும் இருக்கும் போது வெடிப்புச் சத்தம் உரத்துக் கேட்கிறது.

அனால் பலூனின் புறப் பரப்பில் ஒரு ஒட்டு நாடாவை ஒட்டி விட்டு
அவ்விடத்தில் குண்டூசியால் குத்த , அப்பகுதி விறைப்புத் தன்மையை
இழந்துவிடுவதில்லை.அப் பகுதியின் விறைப்புத் தன்மையால் துளையும்
பெரிதாகி விரிவடைந்து கிழிந்து போவதில்லை.சாலையில் ஒரு கல் குத்த சைக்கிள் மற்றும் கார் வண்டிகளில் உள்ள டயர் வெடிப்பதும்
இதனால் தான் .

Friday, April 13, 2012

vethith thanimangal

வேதித் தனிமங்கள்
ஹீலியம்( பயன்கள்)
(தொடர்ச்சி)

இதே காரணத்திற்காக டைட்டானியம் சிர்கோனியம் உற்பத்தி முறையிலும், சிலிகான் மற்றும் ஜெர்மானியம் படிகங்களை வளர்க்கும் வழி முறையிலும் அணு உலைகளில் குளிர்வூட்டியாகவும் ஒலியை விஞ்சும் வேகத்தில் இயங்கும் வானவூர்திகளில் உந்திச் செல்ல பின்னால் எக்கித் தள்ளப்படும் வளிமமாகவும் ,ஹீலியம் பயன் படுகிறது.

ஹீலியத்தின் மற்றொரு முக்கியமான பயன்பாடு ஹீலியம்-நியான் வளிம லேசராகும்.இது அலி ஜாவன்(AliJavan)என்ற அமெரிக்க விஞ்ஞானியால்
கண்டு பிடிக்கப்பட்டது.
ஏறக்குறைய ஒன்றுக்கொன்று நெருக்கமான உயர் ஆற்றல் நிலைகளைக்
கொண்ட இரு வளிமங்களுக்கிடையே இடையீட்டுச்செயல் (interaction) காரணமாக கிளர்வூட்டப் பட்ட(excited) ஹீலியத்தின் செழுமையை
அதிகரித்து வளிம ஊடகத்தில் தூண்டல் உமிழ்வை(stimulated emission) ஏற்படுத்த முடிகிறது. இதன் ஒளி,ஓரியல் தன்மை(Monochromatic)
சிதறாமல் நெடுந்தொலைவு கடந்து செல்லுமாறு ஒருதிசை போக்குத்
தன்மை(directonality) ஒத்த நிலைக்கட்டம்(coherence) இவற்றைப் பெற்றிருந்தாலும் திறன் வெளிப்பாடு மில்லி வாட் நெடுக்கையில்
இருக்கின்றது.
ஹீலியம்-நியான் லேசர் கீற்றணி போல பல வரிக்கோடுகளால் சுட்டுக் குறியிடப்பட்ட பொருட்கள்,புத்தகங்கள், மாணவர்கள் எழுதும் விடைத் தாள்கள்,பல் பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும்
பொருட்கள் போன்றவற்றை இனமறியப்பயன்படுகிறது .விளம்பரத்
தட்டிகளில் நியான் விளக்குகள்
பயன் படுகின்றன, இது விளம்பரத்தை நெடுந் தொலைவு தெரியுமாறு செய்ய உதவுகிறது.

ஹீலியத்தில் ஒலியின் வேகம் காற்றில் இருப்பதை விட 3 மடங்கு அதிகம் .அடைக்கப்பட்ட ஒரு வளிமத்தில் அடிப்படை அதிர்வெண் (fundamental frequency)அந்த வளிமத்தில் ஒலியின்
வேகத்தைப் பொறுத்தது. அதனால் ஹீலியத்தை உட்சுவாசிக்க ,குரலின்
சுரம் மாறிப் போகிறது.

ஹீலியம் ஆக்சிஜனை இடப்பெயர்வால் நீக்கம் செய்கிறது (asphyxiant),அதனால் நச்சுத் தன்மையற்ற ஹீலியத்தை தொடர்ந்து சுவாசித்தால் ,ஆக்சிஜன் போதாமையால் ,உடல் நலம் பாதிக்கப்படவும்
(asphyxia)மரணமும் நிகழ வாய்ப்புள்ளது.

புறச் சூழல் மற்றும் வில்லைகளில் (lenses) ஏற்படும் வெப்பநிலை மாற்றங்களால் ஒலியியல் கருவிகளில் விளையும் பிறழ்ச்சி
distortion)யை ஹீலியத்தினால் குறைக்க முடிகிறது.இதற்குக் காரணம் ஹீலியம் குறைந்த ஒளி விலகல் எண்ணை (refractive index)ப் பெற்றுள்ளது. இது விண்வெளி ஆய்வுகளுக்காக
எடுத்துச் செல்லப்படும் தொலை நோக்கிகளில் பயன்படுத்தப் படுகிறது. வெற்றிடத்துடன் கூடிய தொலை நோக்கிகள் அதிக எடையுள்ளவை என்பதால் அவற்றை விண்வெளிக்கு எடுத்துச் செல்வது அனுகூலமில்லாதது,

மீக்கடத்தும் காந்தங்களை குளிர்விக்க நீர்ம ஹீலியம் பயன்தருகிறது. மீக்கடத்தும் காந்தங்கள் இன்றைக்கு MRI வரிக் கண்ணோட்டக்கருவிகள்,
அதி வேக ஒற்றைத் தண்டவாள ரயில் வண்டிகள் ,
நுண் அளவில் சுருக்கப் பட்ட, மின் காந்தங்களால் செயல்படும் சாதனங்களில் பயன் படுகின்றன.

எவூர்திகளில் எரிபொருளாகப் பயன்படும் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை குளிர்வித்து நீர்ம நிலையில் வைத்துக் கொள்ள ஹீலியம் பயன் படுகிறது.
யுரேனியம் மற்றும் தோரியம் கொண்ட பழம் பாறைப் படிவுகளின் வயதை ஹீலியத்தின் கால நிர்ணயம்(Helium dating ) மூலம் செய்ய முடிகிறது.

Wednesday, April 11, 2012

vethith thanimangal

ஹீலியம்(தொடர்ச்சி)

இயற்கை எரி வளிமத்தில் மீதேன் முக்கியமாக இருந்தாலும் அதில் 0.3% ஹீலியமாகும்.பகுதி காய்ச்சி வடித்தல் மூலம் ஹீலியத்தை மீத்தேனிலிருந்து
பிரித் தெடுக்கின்றார்கள்.பகுதி காய்ச்சி வடித்தலின் நுட்பம்,கொதி நிலையில்
உள்ள வேறுபாட்டைப் பயன்படுத்தி நீர்மக் கலவையிலிருந்து நீர்மங்களைப் பிரிப்பதாகும் ஹீலிய வளிமத்தை எளிதில் குளிர்வூட்டி நீர்மமாக்க முடிவதில்லை.அதன் கொதி நிலை-268.9 டிகிரி செல்சியஸ் ஆகும்.இது பிற வளிமங்களைக் காட்டிலும் குறைவானது.காற்றைக் குளிர்வூட்டி நீர்மமாக்கும்
போது அதிலுள்ள எல்லா வளிமங்களும் நீர்மமாக்கப் பட்டாலும்,ஹீலியம் மட்டும் நீர்மமாக நிலை மாறாமல் வளிமமாகவே எஞ்சி நிற்கும் ஹீலியத்தை இப்படியும் மீட்டுப் பெறமுடியும்.

நிறமாலை மூலம் இன்றைக்கு விண்மீன்களில் குறிப்பாக வெப்ப நிலை மிக்க விண்மீன்களில் ஹீலியம் அதிகமுள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். உண்மையில் அங்கு ஹீலியம் ஹைட்ரஜனை மூலப்பொருளாகக் கொண்டு தொகுப்பாக்கம்(Synthesis) மூலம் உண்டாக்கப்படுகிறது.இது அவற்றின் ஆற்றல் மூலமாக விளங்குகின்றது .உயர் வெப்ப நிலையில் ஏற்படும் இரு விதமான வெப்ப அணுக்கரு வினைகளை புரோட்டான்- புரோட்டான் தொடர்(Proton - proton chain), என்றும் ,கார்பன் -நைட்ரஜன் சுற்று என்றும் குறிப்பிடுவர். இதில் நான்கு புரோட்டான்கள் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாக மாறுகின்றது.
ஹைட்ரஜன் குண்டுவிலும் இவ் வினையே தூண்டப்பட்டு ஆற்றல்
வெளிப்படுகின்றது.

பண்புகள்
He என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய ஹீலியம் இயல்பான சூழலில்
வளிமமாக இருக்கின்றது . இதன் அணு வெண் 2 .,அணு நிறை 4 .003 , அடர்த்தி 0 .166 கிகி /க மீ .இதன் உறை நிலையும், கொதி நிலையும் முறையே 1.72 K ,4 .22 K ஆகும்


நீர்ம ஹீலியம் தாழ்ந்த வெப்ப நிலையில் மற்றொரு நிலை மாற்றம்
பெறுகிறது. இதன் லாம்டா நிலை மாற்றம் என்பர் .சாதாரண நீர்ம
ஹீலியத்தை நீர்ம ஹீலியம்- I என்றும், லாம்டா நிலை மாற்றம் பெற்ற நீர்ம ஹீலியத்தை நீர்ம ஹீலியம் –II என்றும் கூறுவர். 2 .174 டிகிரி K வெப்ப நிலையில் நிகழும் இந்த
லாம்டா நிலை மாற்றத்தினால் நீர்ம ஹீலியத்தின் சுய வெப்பம்
(Specific heat ) ,பாய் திறன் (viscosity ) வெப்பங் கடத்தும் திறன்
(conductivity) போன்றவற்றில் முரண்பாடான மாற்றங்கள் ஏற்படுகின்றன

நீர்ம ஹீலியம் -II ,நீரூற்று விளைவு (Fountain effect ) உயரளவு
பாகு நிலைத் தன்மை ,கூடுதலான வெப்பங் கடத்தும் திறன் போன்ற
வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ளது. .

பயன்கள்
ஹீலியம் எல்லாத் தனிமங்களைக் காட்டிலும் தாழ்ந்த உறை நிலையை
தனிச் சுழி வெப்பநிலைக்கருகாமையில் கொண்டுள்ளது. அதனால்
இது தாழ்ந்த வெப்பநிலைப் பயன் பாட்டிற்குப் பெரிதும் அனுகூலமாய்
இருக்கின்றது .மீக் கடத்தும் காந்தங்கள் பற்றிய ஆய்வுகளுக்கும் ,
விண்வெளியில் அணுக் கதிர் ஆய் கருவிகளை குளிர் வூட்டுவதற்கும்,
தாழ்ந்த வெப்ப நிலை ஆய்வுகளுக்கும் ,நீர்ம ஹீலியம் பயன் தருகிறது. வெப்பஞ் சார்ந்த அதிர்வுகளால் உண்டாகும் மின் சமிக்கைகள்
இரைச்சலாகும் .அவற்றை நீர்ம ஹீலியம் குறைப்பதால்
புள்ளி விவரங்களைத் துல்லியமாகப் பெறமுடிகிறது..
வெப்பநிலையைத் தனிச் சுழி வெப்பநிலை வரை குறைத்தாலும் வளி மண்டல அழுத்தத்தில் ஹீலியம் நீர்மமாக மட்டுமே மாறும் ,
திண்மமாக உறைவதில்லை .செயல்படும் அழுத்தத்தை அதிகரித்து இதைச் செய்யமுடியும் அழுத்தத்தைச் செயல் படுத்தி அதன் பருமன் 30 % .
அளவு மாறுபடுமாறு செய்ய முடிகிறது.ஹீலியம் இலேசான வளிமமாக இருப்பதாலும் ,காற்றை விட அடர்த்தி குறைவாக இருப்பதாலும் ,மந்த
வளிமமாக இருப்பதாலும், பலூன்களில் இட்டு நிரப்பி வானவெளியில் பறந்து அதிக உயரங்களில்
இருந்துகொண்டு வளி மண்டல ஆய்வுகளை மேற்கொள்ள முடிகிறது. எனினும் ஹைட்ரஜனை விட அடர்த்தி
மிக்கதாய் இருப்பதால் 98 % மிதவல் திறனையே ஹீலியம் பெற்றுள்ளது. நீர் நிலைகளில் அதிக ஆழங்களில்
உள்ள அதிகமான் புற அழுத்தத்தில் செயல்படும் முத்துக் குளிப்பவர்கள் உட்சுவாசிக்கும் காற்றில் ஆக்சிஜன்
(20 %)மற்றும் ஹீலியம்(80 %)கலந்தி ருக்கும் இதில் நைட்ரஜனை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக
ஹீலியத்தைச் சேர்த்திருப்பார்கள். ஹீலியம்,நைட்ரஜனை விடக் குறைவாக நீரில் கரைகிறது. அதனால்
இரத்தத்திலும் குறைவாகக் கரைந்து உறைகிறது. இது காற்றழுத்த நோயிலிருந்து (bends )பாதுகாப்பளிக்கிறது.
நீரில் மூழ்கியவர் நீரின் மேற்பரப்பிற்கு வந்தவுடன்,தாழ்ந்த அழுத்தத்தினால் இரத்தத்தில் கரைந்த
வளிமம் குமிழ்களாக வெளியேறும்(சோடா பாட்டிலின் மூடியைத் திறந்தவுடன் அதில் கரைந்துள்ள காற்று
குல்களாக வெளியேறுவதைப் போல) இப்படி உடலுக்குள் வெளியேறும் வளிமம் மூட்டுகளில்
உறையும் வாய்ப்பைப் பெரும்.இது மூட்டுவலியைத் தரும். இதனால் நீரில் மூழ்கி வேலை செய்வவர்கள்
விரைவில் சோர்ந்து விடுவர் .

காற்றை விட அடர்த்தி குறைவான ஹீலியத்தை உட்சுவாசிப்பதினால் ,குரலின் சுரமும் ,தரமும் குறிப்பிடும் படியாக மாறிப் போகின்றன.இதனால் திடீரென்று ஒருவர் உரத்த குரலில் பேசுவதுபோலத்தோன்றும் .
ஹீலியத்தின் இணைதிறன் (Valency)சுழி என்றாலும் ,இயல்பான சூழலில் அது எவ்விதமான வேதிச்
சேர்மத்தையும் தோற்றுவிப்பதில்லை.ஹீலியம் டை புளூரைடு தோற்றுவிப்பதற்கானஆய்வுகள் தொடருகின்றன.ஹீலியம்- நியான்,ஹீலிய அயனி மூலக் கூறுகள், He 2 +,மற்றும்
He2 ++ போன்றவைகள் கண்டறியப் பட்டுள்ளன.பற்ற வைப்பு முறையில்,மந்த வெளிச் சூழலை
நிறுவ ஹீலியம் பயன் படுத்தப் படுகிறது.

Tuesday, April 10, 2012

vethith thanimangal

ஹீலியம்(Helium)

கண்டு பிடிப்பு

பூமியின் கடல்மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஹீலியம் 6 வதாக, நைட்ரஜன்,ஆக்சிஜன்,ஆர்கான்,கார்போ டை ஆக்சைடு,நியானுக்கு
அடுத்ததாகச் செரிவுற்றுள்ளது.இதன் செழுமை 5.2 ppm ஆகும்.
பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் பிரபஞ்சவெளியில் ஹைட்ரஜனுக்கு
அடுத்து மிகுதியாக இருப்பது ஹீலியமாகும்.இதன் பங்கு 7 %.
ஹைட்ரஜனும் ஹீலியமும் சேர்ந்து பிரபஞ்ச வெளியில் 99.9 %ஆக
உள்ளது.

(discoverer of Helium- Pierre Jonsson)

ஹீலியம் பூமியில் கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னால் அது இருப்பதாக
இனமறியப் பட்டது. 1868 ல் பிரான்சு நாட்டின் வானவியலாரான
பியர் ஜோன்சன் (Pierre Jonsson ) என்பார் சூரிய கிரகணத்தைப் பற்றி
ஆராய்ந்த போது எதிர்பாராத விதமாக மஞ்சள் பகுதியில் ஒரு புதிய
நிறமாலை வரியைக் கண்டார் .அது அப்போது கண்டறியப் பட்ட
எத்தனிமத்திற்கும் ஒத்துப் போகவில்லை என்பதால் அவ்வரி ஒரு புதிய
மூலத்தினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தார்.


அப்போது இங்கிலாந்து நாட்டிலிருந்து வெளி வந்த இயற்கை(Nature)
என்ற அறிவியல் இதழின் ஆசிரியரான லாக்கியர் (Lockyer) மற்றும்
பிராங் லாண்டு (Frankland)என்பார்,இதற்கு ஹீலியம் எனப் பெயரிட்டார் .
கிரேக்க மொழியில்,ஹீலியோஸ் என்பது சூரியனைக் குறிக்கும் கடவுளாகும்.

ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்குப் பிறகு 1895 ல் ஸ்காட்லாந்தின்
வில்லியம் ராம்சே (William Ramsay ) என்பார் ,தோரியம் மற்றும்
உரேனியத்தின் ஒரு சில கனிமங்கள் மந்த வளிமங்களை
வெளியிடுவதாகக் கண்டறிந்தார். கதிரியக்கத் தனிமங்கள் உமிழ்ந்த
மந்த வளிமங்களை நிறமாலைக்கு உட்படுத்த அது ஹீலியம் என்று உறுதி செய்தார்.அதன் நிறமாலை பியரி ஜோன்சன் இனமறிந்த நிறமாலையின்
வரிகளோடு ஒத்துப் போயிற்று.பூமியில் ஹீலியம்
தனிமத்தை முதன் முதலாக உறுதியுடன் அறிவித்ததால்,அதை
கண்டுபிடித்த பெருமை ராம்சேக்குக் கிடைத்தது. 1907 ல் ரூதர்போர்டு கதிரியக்கக் கதிர்களைப் பற்றி ஆராய்ந்து அயனியாக்கப்பட்ட ஹீலியமும்,ஆல்பாக் கதிரும் ஒன்றே என்று நிறுவினார்.உண்மையில் ஹீலியம் அணுக்கரு என்பதை முதலில் அறியாததால் இதற்கு ஆல்பாத் துகள் எனப் பெயரிட்டார்.

Monday, April 9, 2012

vethith thanimangal

ஹைட்ரஜனின் பயன்கள் (தொடர்ச்சி)

* ஹைட்ரஜன் தொல் படிவு எச்ச எரி பொருட்களைப் பதப்படுத்தப் பயன்
படுகிறது .
* அமோனியம் சல்பேட் என்ற முக்கிய உரத் தயாரிப்புக்குத் தேவையான
மூலப் பொருளான அம்மோனியா உற்பத்தியில் ஹைட்ரஜன் பயன்படுகிறது.
* ஹைட்ரஜனேற்றம் செய்து மெதனால் தயாரிக்கவும்,எண்ணெய் மற்றும் கொழுப்புப் பொருள்களில்
உள்ள உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கின்ற தெவிட்டாத (Unsaturated) கார்பன்களை நலம் தரும் தெவிட்டிய கார்பன் களாக மாற்ற உதவுகிறது .
* ஹைட்ரஜன் ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் ,வளிமம் ,நீர்மம் மற்றும் திண்மம் ஆகிய நிலைகளுடன்
ஒரு சமநிலையில் இருக்க முடியும் .இதை முச்சந்திப்பு புள்ளி
(Triple point ) என்பர் .இது ஒரு சில
வெப்ப நிலை மானிகளை (Thermometer) அளவீட்டுத் திருத்தம் (calibration) செய்யப் பயன்படுகிறது.
* ஹைட்ரஜனின் நிலையற்ற அணு எண்மமான டிரைட்டியம் ,ஹைட்ரஜன் குண்டு (Hydrogen bomb)தயாரிக்கப் பயன்படுகிறது. இது சாதாரண அணு குண்டுவை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது .
* ஒளிரும் பூச்சுக் களில் இது கதிரியக்க மூலமாகப் பயன்படுகிறது.உயிரியல் தொடர்பான ஒரு சில ஆய்வுகளிலும் ,சிகிச்சை வழி முறைகளிலும் இது ஒரு தடங் காட்டியாகவும்(tracer)பயன் படுத்தப்படுகிறது.
* ஹைட்ரஜனை அப்படியே அல்லது நைட்ரஜனுடன் கலந்து ஒரு சில தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் காணப்படும் கசிவுகளை இடமறியப் பயன்படுத்தப்படுகிறது.
* மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னியக்கிகளில் (generators) சுழல் வட்டுகளின் சூட்டைத் தணிக்கும் ஒரு குளிவூட்டியாகப் பயன்படுத்தப்படுகிறது..
*ஹைட்ரஜன் வளிமம் ,ஹைட்ரஜன் அணு பற்றவைப்பு வழி முறையில் ஒரு காப்பு வளிமமாக(shielding gas) பயன்படுகிறது.
* ஹைட்ரஜன் பல கனிம மற்றும் கரிம வேதிப் பொருட்களை உற்பத்தி செய்யும் வழி முறையில் பயன்படுகிறது.
* ஹைட்ரோ குளோரிக் அமிலம் தயாரிக்கும் முறையில் ஹைட்ரஜன்
நேரடியாகப் பயன்படுகிறது .
* பல உலோகத் தாதுக்களை ஆக்ஸிஜனீக்கம்(reduction) செய்து பதப்படுத்த ஹைட்ரஜன் பயன்படுகிறது.
* ஆக்சிஜனோடு கலந்து நீர் தயாரிக்க பயன்படுகிறது

vethith thanimangal

ஹைட்ரஜன்

பயன்கள் ஹைட்ரஜன் மிகவும் லேசானது என்பதால் அதை பலூன்களில்
நிரப்பி,வானத்தில் மிதக்கவிட்டு காடுகளிலும்,மலைப்பாங்கான பகுதிகளிலும் பயணித்து மனிதர்கள் நுழைய முடியாத இடங்களையும்
வளி மண்டலத்தில் அதிகஉயரங்களில் இருந்து கொண்டு ஆய்வுசெய்கிறார்கள் .
1937ல் ஜெர்மன் நாட்டில்
ஹைட்ரஜன் பலூனில் ஏற்பட்ட ஒரு சிறிய தீப்பொறி பலூன் கப்பலை
எரித்துவிட்டது .அதன் பிறகு பலூன்
கப்பலுக்கு ஹீலியத்தைப் பயன்டுத்துவதே பாதுகாப்பானது என்பதை
அறிந்து கொண்டனர்.

தாவர எண்ணெய்களின் ஊடாக ஹைட்ரஜனைச் செலுத்தும் போது,அது மார்கரின் (Margarine)எனப்படும் திண்மமாக(Solid)உறைகிறது .
இதை ஹைட்ரஜனூட்டம்(hydrogenation) என்பர்.இரத்தக் குழாய்களில் படிந்து பாய்வுக்குத் தடை ஏற்படுத்தும் கொலஸ்ட்ரால்(cholesterol)என்ற கொழுப்புப்
பொருள் இதில் குறைவாக இருப்பதால் வெண்ணைக்குப் பதிலாக மார்கரினைப் பயன்படுத்துகிறார்கள் இதில் நிக்கல் வினை ஊக்கியாக (catalyst)
கொள்ளப்படுகிறது.

வேதியியல் தொழிற்சாலைகளில் அமோனியா(Ammonia) உற்பத்திக்கு ஹைட்ரஜன் வளிமம் பயன்படுகிறது.இது அமோனியா சல்பேட் என்ற முக்கிய உரத்திற்கு மூலப் பொருளாக உள்ளது.

ஹைட்ரஜனின் ஒரு முக்கியமான,பொதுவான சேர்மம் (compound)
நீராகும் (Water.விலங்குகள்,தாவரங்கள் என அனைத்து உயிரினங்களுக்கு நீர் இன்றியமையாதது.

நீரில் மட்டுமின்றி பல கரிமச்(organic)சேர்மங்களிலும்,உயிர் வேதிச்
சேர்மங்களிலும் ஹைட்ரஜன் நிறைந்துள்ளது .இதில் பெரும்பாலும்
கார்பனுடன் நேரடியாக இணைந்துள்ளது.இவற்றுள் ஹைட்ரோ
கார்பனைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.இயற்கை எரி வளிமம் பெட்ரோல்
போன்ற வற்றில் நீண்ட சங்கிலித் தொடராக மூலக்கூறு அமைந்துள்ளது.
இத் தொடரைப் பிரித்து விடுவிக்கும் போது பெருமளவு ஆற்றல்
வெளிப்படுகிறது.இன்றைக்கு மின்உற்பத்தி நிலையங்களிலும்,
தானியங்கு உந்து வண்டிகளிலும் இது பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

மற்றொரு வகையான சேர்க்கைத் தொகுதி கார்போ ஹைட்ரேட்டுகளாகும்.
இது ஹைட்ரஜன்,கார்பன் மற்றும் ஆக்சிஜன் அணுக்களின் சேர்கையால் ஆனதாகும் .ஒளிச்சேர்க்கை(Photo synthesis) மூலம்
தாவரங்கள் நீரையும் ,கார்பன்டை ஆக்சைடையும் ஒருங்கிணைத்து
கார்போ ஹைட்ரேட்டுக்களை உற்பத்தி செய்கின்றன.
அதனால் தாவர உணவுப் பொருட்களில் இதன் செழுமை அதிகமாக
இருக்கின்றது. இது மனிதர்களுக்கும்,தாவரங்களை உணவாக உட்கொள்ளும்
விலங்கினங்களுக்கும் தேவையான ஆற்றலைத் தருகிறது.ஹைட்ரஜன் சேர்ந்த சேர்மங்கள் எண்ணற்றவை.வாசனைத் திரவியங்கள்,சாயங்கள்,பூச்சி
கொல்லி மற்றும் களைக்கொல்லிகள்,மரபணு மூலக்கூறுகள்,புரோட்டீன் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

நீரைப் பகுத்து வர்த்தக ரீதியில் ஹைட்ரஜனை உற்பத்தி செய்கிறார்கள். நீராவி வினையாக்கம்(Watergas reaction)என்ற வழிமுறையில் நீராவியைச் சூடான நிலக்கரியில் பீச்சியடிக்கின்றார்கள்.சில சமயங்களில் நிலக்கரிக்குப் பதிலாக
மீதேன் வளிமத்தையும் பயன் படுத்துவார்கள்.மீவெப்ப மேற்றிய(Superheated) நீராவியைப் பயன்படுத்தும் போது மீதேன் மற்றும் நீரவியிலுள்ள மூலக்
கூறுகளிலுள்ள ஹைட்ரஜன் விடுவிக்கப்படுகிறது. இவை ஹைட்ரஜன் மூலக் கூறுகளாக உருவாக்கம் பெறுகின்றன.
நிலக்கரியில் நீராவி வினை புரிந்து ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கின்றன.இந்த இரு வளிமங்களையும் இயற்பியல் முறைப்படி பிரித்தெடுக்கலாம் .சில சமயங்களில் இந்த இருவளிமங்களின் கலவையை
அப்படியே பயன் படுத்து வார்கள் .இதுவே நீர் வளிமம் (Water gas )
எனப்படுகிறது. இது தொழிற்சாலைகளில் பயன்படுகிறது.

எவூர்தியைச் செலுத்துவதற்கு நீர்ம ஹைட்ரஜன் ஓர் எரிபொருளாகப் பயன்படுகிறது. இதை ஆக்சிஜனுடன் கலந்து எரிவறைக்குள் செலுத்த,அவை எரிந்து சூடான நீராவியை உற்பத்தி செய்கின்றது. இது எவூர்தியை இயக்குவதற்குத் தேவையான உந்தலைத் தருகிறது.

ஹைட்ரஜனின் மற்றொரு பயன்பாடு அணுக்கருப் பிணைப்பு (Nulcear fusion ) வினைக்கான மூலப்
பொருளைப் பெறுவதாகும்.ஹைட்ரஜன், டியூட்ரியம் (deuterium) மற்றும் ட்ரைட்டியம் (tritium ) என்ற இரு அணு எண்மங்களை (isotope) பெற்றுள்ளது. முன்னது நிலையானது ,பின்னது கதிரியக்கத்தால்
சிதையக் கூடியது.

டியூட்ரியம் இயற்கையில் நீரில் கன நீராக உள்ளது. இயற்கையில் இதன் செழுமை
1 /200 %.அதாவது 6000 நீர் மூலக் கூறுகளில் ஒரு மூலக் கூறு கனநீராகும் .மின்னாற் பகுப்பு மூலம் கனநீரைப் பிரித்தெடுக் கின்றார்கள்.சாதாரண நீரில் 40 % மேல் கனநீர் இருப்பின் அது உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்கும். கன நீர் அணு உலையில் நியூட்ரான்களை மட்டுப் படுத்தவும் (வேகத்தைக் குறைக்கவும் )
குளிர்வூட்டி ஆற்றலை அப்புறப்படுத்தவும் செய்கின்றது. யுரேனியம் அணுக்கரு குறைந்த வேகத்துடன் இயங்கும் நியூட்ரானால் பிளவுறும் வாய்ப்பை அதிகம் பெறுகிறது. இந்த அணுக்கரு வினையின் பயனுறு திறனை (efficiency ) கனநீர் பெரிதும் தூண்டுகிறது. டிரைட்டியம் ஓர் எலெக்ட்ரான் உமிழ்வானாகும். இதன் அரை வாழ்வுக்
காலம் (Half life period ) 12 .26 ஆண்டுகள் .
பூமியின் வளி மண்டலத்தில் அண்டக் கதிர்கள் (Cosmic rays) ஊடுருவும் போது டிரைட்டியம் ஒரு சீரான
வீதத்தில் ,ஆனால் மிக மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்யப்
படுகின்றது. .
டியூட்ரியமும் ,டிரையட்டியமும் அணுக்கருப் பிணைப்பு வினைக்குத்

தேவையான மூலப் பொருளாயிருக்கின்றன.கதிரியாகக் கழிவு ஏதுமின்றி ஆற்றலைப்
பெற முடிவதாலும்,மூலப்பொருள் எளிதாகவும்
தட்டுப்பாடின்றிக் கிடைப்பதாலும் ,இது எதிர்காலத்தின் ஆற்றல் மூலம் எனப்படுகின்றது

பல்மநீர்(Poly water)என்ற நீர்மம் நீரிலிருந்து வேறுபட்ட பண்புகளைக்
கொண்டுள்ளது.இதன் அடர்த்தி,பாகு நிலையில்(Viscosity)குறிப்பிடும்
படியான மாற்றம் பெற்றிருப்பதால்,இதை முரணிய நீர்(anomalous water)
என்றும் கூறுவர்.இதற்கு நீர் மூலக்கூறில் ஏற்படும் மாற்றம் காரணமில்லை
என்றும் நீரில் இருக்கும் மிதவல்(Coloidal)துகள்களின் பங்களிப்பே என்றும்
ஒரு பகுதியினரும்,ஹைட்ரஜன் பிணைப்பின் கட்டமைப்பில் ஏற்படும்
வேறுபாடுகள் என்று மற்றொரு பகுதியினரும் கூறுகின்றனர்.

ஹைட்ரஜனில் ஆர்த்தோ(Ortho)மற்றும் பாரா(Para)ஹைட்ரஜன் என இரு வகையுண்டு.


அறை வெப்ப நிலையில் இயற்கை ஹைட்ரஜனில் 25% பாராவும்,
75 %ஆர்த்தோவும் உள்ளன.பாராவில் புரோட்டான் எலெக்ட்ரானின் தற்சுழற்சி ஒன்றுக்கொன்று எதிராகவும்,ஆர்தோவில் இணையாகவும் உள்ளன .
இவற்றின் ஆற்றல் வேறுபட்டிருப்பதால்,இயற்பியல் பண்புகளும் மாறு
பட்டிருக்கின்றன.பாரா ஹைட்ரஜனின் உறை மற்றும் கொதி நிலைகள் சாதாரண
ஹைட்ரஜனை விட 0.1 டிகிரி செல்சியஸ் தாழ்வாக இருக்கிறது.இரு வேறு
ஆற்றல் நிலைகளுக்கு இடையே ஏற்படும் நிலை மாற்றத்தினால் உமிழப்படும்
ஆற்றலின் அலைநீளம் வானவியலில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஹைட்ரஜன்,வேதிவினைகளில் ஈடுபடும் போது ஹைட்ரஜன் பிணைப்பை
ஏற்படுத்தி ஒரு வழக்கமான எலெக்ட்ரான் பகிர்வுப் பிணைப்புடன்,வலுவற்ற புரோட்டான்-எலெக்ட்ரான் பிணைப்பையும் உண்டாக்குகின்றது.

இது உயிரியல் மூலக் கூறுகளில் பேரியல் மூலக் கூறுகளை
உருவாக்கும் முறைக்கு அனுகூலமாக இருக்கின்றது.
...